Monday, 15 August 2016

முட்டை

>>>>>>>>>>>>>>>>>>>::>>>>>>>>>>>> முட்டை இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணக்கும் புரோட்டீன்களும், சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது. முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும். இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டை யும் பற்றி தெளிவாக அறிய வேண்டும். கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி, இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும். செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (cholesterol respsonders) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் (arachadonic acid) என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம். இந்த சிக்கலை சமாளிக்க arachadonic acid மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.

No comments:

Post a Comment