281 புன்னகை
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது.
ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.
வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "*
தென்னங்கன்று சொன்னது,
*" ஒரு வருஷம் ".*
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது.
தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
*"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.
தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது.
அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .
இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.
வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது.
ஆம் வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது.
ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
*ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல?*
*கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்.*
*" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது,*
*பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...*
282 கணவன் மனைவி
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.
கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே… என்று பாய….
அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா… என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க…
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பெரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 31
283 நன்றி கெட்டவன்
முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான்.
அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான்.
வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள்.
""ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து கொள். உன் ஆசை எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன்,'' என்றாள் தேவதை.
இப்படி ஒரு நல்வாழ்க்கை கிடைத்ததை அவனால் நம்ப முடியவில்லை.
""தேவதையே! உன் விருப்பம் போல நடப்பேன்,'' என்றான் அவன்.
அடுத்த நொடியே அவன் பேரழகனாக ஆனான். அரசனைப் போல ஆடை, அணிகலன்கள் அணிந்து இருந்தான். தன் தோற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்.
"என்னை அவலட்சணம் என்று இகழ்ந்தவர்கள் முன் செல்ல வேண்டும். நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்' என்று நினைத்தான்.
""தேவதையே! நம் திருமணத்திற்கு முன் நகரத்திற்குச் சென்று வர ஆசைப்படுகிறேன்,'' என்றான் பொன்னுரங்கம்.
அவன் முன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட பொன் தேர் ஒன்று நின்றது.
""உனக்காக காத்திருப்பேன். விரைவில் திரும்பி வா,'' என்றது தேவதை.
அரசனைப் போல அந்தப் பொன் தேரில் அமர்ந்தான் அவன். பெருமிதமாக நகரத்திற்குள் சென்றான்.அங்கே இருந்தவர்கள் அவனைப் பார்த்து வியப்பு அடைந்தனர்.
அரண்மனை மாடத்தில் நின்ற அரசி தேரில் வரும் அவனைப் பார்த்தாள். அவன் அழகில் மயங்கினாள்.
வாயிலுக்கு வந்த அவள், அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள். அரசி தன்னை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிந்தான் அவன்.
"தேவதையை மணப்பதை விட அரசியை மணப்பதே சிறந்தது' என்று நினைத்தான்.
அரசியை வணங்கிய அவன், ""இந்த அடிமையைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன்,'' என்றான்.
அங்கே என்ன நடந்தது என்பதை அறிந்தது தேவதை.
அவன் அரச வடிவம் மறைந்தது. முன்பு இருந்தது போல அவலட்சண மாக காட்சி அளித்தான் பொன்னுரங்கம்.
எரிச்சல் அடைந்த அரசி,""இந்த அவலட்சணத்தை யார் அரண்மனைக்குள் விட்டது? அடித்து விரட்டுங்கள்,'' என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டாள்.
ஏமாற்றத்துடன் காட்டிற்கு வந்தான். நீண்ட நேரம் புல்லாங்குழலை இசைத்தான். தேவதை அவன் முன் தோன்றவே இல்லை.
""நன்றி கெட்ட எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது,'' என்று கதறி அழுதான் பொன்னுரங்கம்.
என் அன்பு வாசகர்களே,
பிறர் நமக்கு செய்த உதவிக்கு என்றும் நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.
இக்கதையில் வருவது போல தான் அநேக விசுவாசிகளும் ஏன் ஊழியர்களும் கூட நடக்கின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் தங்களுக்கு உறுதுணையாய் இருந்த விசுவாசிகளையும், ஊழியரையும் மறந்து தாங்கள் சுக ஜீவனும் செய்யும்போது அவர்களை நினைத்து பார்ப்பதில்லை. விசுவாசிகள் ஆரம்பத்தில், தங்களின் கஷ்ட காலத்தில் உதவியாக இருந்த ஊழியரை மறந்து, புதிதாய் ஒரு சபையில் உறுப்பினராகி அதன் மூலம் தங்கள் ஆசீர்வாதத்தை பெருக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால் உங்களின் ஆசீர்வாதம் எங்கு துவங்கப்பட்டதோ அங்கே தான் நிறைவடையும். இடையில் வருகிற ஆசீர்வாதங்கள் ஒருவேளை தற்சமயம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம் ஆனால் அது நிலைநிற்காது.
அதுபோலவே ஊழியர்களும் தங்களின் ஆரம்ப நாட்களில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த விசுவாசியின் அவர்களின் கஷ்டத்திலும் பகிரந்தளித்த அன்பை மறந்து புதிதாய் வந்த கொஞ்சம் வசதி படைத்த விசுவாசிகளை ஆதரித்து அவர்களை புறக்கணிக்கின்றனர். வேதம் சொல்கிறது,
தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்,
வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்,இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
மாற்கு 4:17
தங்களுக்குள்ளே வேர்கொள்ள வேண்டுமெனில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். ஒரு செடியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அதை ஓர் இடத்தில் நட்டு அது கனி கொடுக்கக்கூடிய நிலையை அடையும்போது அதை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் அது கனி கொடுக்காது அதுபோலவே ஒரு சபையிலிருந்து வேறு சபைக்கு ஆசீர்வாதத்திற்க்காக மாத்திரம் சென்றால் எந்த பிரயோஜனமும் இருக்காது.
எனவே நாம் இப்போது இருக்கின்ற சபையில் நிலையாய் நிற்கும் போது நாமும் நம்மால் நம் சபை போதகரும் ஆசீர்வாதம் நம் சபையும் ஆசீர்வாதம் பெறும். அதுபோலவே சபை போதகர்களும் விசுவாசிகளின் நிலை அறிந்து பாரபட்சமில்லாமல் ஊழியம் செய்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
284 அலட்சியத்தால்
ஒரு ஏழை மனிதன் இருந்தான்.
அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!
அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.
மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.
அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.
எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.
இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.
சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.
திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு.
நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின.
மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.
தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.
இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.
அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.
அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.
அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.
ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!.
இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!.
சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான்.
அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை.
அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள்.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே.
இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.
அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள்,
"இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".
அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!.
இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே " என்றான்.
மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள்.
"சரி போ.
நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*
நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.
மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான்.
அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.
குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.
"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் ".போய் பார்த்தான்.
அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.
கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.
மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.
அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? ".
அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது,
புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.
அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.
முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.
சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான்.
உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.
வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.
*குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!.*...
285 ஏமி_காா்மைக்கேல்...
அயர்லாந்து தேசத்திலே கடற்கரை ஓரத்தில் ஒரு அழகான வீடு. அந்த வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறந்தாள் ஏமி. அவளுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். குட்டிப்பிள்ளைகள் எல்லோரும் அடிக்கடி கடற்கரைக்கு சென்று விளையாடுவார்கள்.
பிள்ளைகள் சூப்பரா நீச்சலும் அடிப்பாங்க. உனக்கு நீச்சல் தெரியுமா? லீவுநாளில் நல்லா குளித்து என்ஜாய் பண்ணு. ஆனால் அதில் ஆபத்தும் இருக்கும். ஆகையால் ரொம்ப கவனமா இருக்கணும் சாியா. சரி ஏமி அக்கா
கதைக்கு வருவோம்.
ஏமி பயங்கர வெள்ளை.
அவளோட கண் என்ன கலர் தெரியுமா? பிரவுன். ஆனால் அவளோட அம்மா, கூட பிறந்தவங்க எல்லோரோட கண்ணும் ப்ளூ கலரில் இருந்திச்சு.
ஏமி அம்மாகிட்ட, ...
“எனக்கு மட்டும் ஏன் பிரவுன் கலர் கண்?” என்று கேட்டாள். “இயேசப்பா உன்னை விசேஷமா படைச்சிருக்காங்க. இது ஏன் என்று இப்பத் தெரியாது. ஆனால் ஒரு நாள் அது உனக்குப் புாியும்” என்றார்கள்.
ஏமிக்கோ பிரவுன் கருவிழி பிடிக்கவில்லை. ஒருநாள் இரவு படுக்கும்போது இப்படி ஜெபம் பண்ணினாள்,
“இயேசப்பா நான் நாளைக்கு காலையிலே எழுந்திருக்கும்போது என் கண் ப்ளூவா மாறிடணும்னு” உறுதியாக ஜெபித்துவிட்டு படுத்தாள். காலையில் எழும்பினவுடன் ஏமி கண்ணாடி முன்னாடி போய் நின்று கண்களை அகல விரித்து பார்த்தாள்.
சோகத்தில் முகம் சுருங்கியது. அழுதுகொண்டே அம்மாவிடம் போய் சொன்னாள். அம்மா சொன்னாங்க,
“தேவன் எதை நமக்கு செய்தாலும் அது நன்மை யாகத்தான் இருக்கும். பிரவுன் கண்ணும் நன்மைக்குத்தான்”
என்று ஆறுதல் படுத்தினாங்க.
வருஷங்கள் கடந்தன. ஏமி இந்தியாவிலுள்ள பெண்பிள்ளைகளுக்கு நிகழும் கொடுமைகளைக் குறித்துக் கேள்விப்பட்டாள். நம் நாட்டின் மீது பாரம் கொண்டு, நம் நாட்டிற்கே சேவை செய்யும்படி வந்தாள்.
இந்தியாவிற்கு வந்து இறங்கியதும் அவளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம். இந்தியர்களின் கண்கள் அவளுடைய கண்ணைப்போலவே இருந்தது.
“ஓ, நான் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை இந்தியாவில் ஊழியம் செய்யும்படி முன்குறித்ததால் எனக்கு இந்தியரைப் போலவே கண்களைத் தந்துள்ளார்”
என தேவனைத் துதித்தாள்.
என் அன்புக்குாியவா்களே,
கர்த்தர் தெரிந்து கொண்டவர்களின் செயல் களும், அவர்களது சகல விஷயங்களும் எங்கே கா்த்தா் உபயோகிக்க விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல் காணப்படும்.
கர்த்தர் சவுலை ராஜாவாக தெரிந்து கொண்ட பொழுது நடந்த அடையாளங்கள்.
கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்.
நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார்.
சவுல் ராஜாவான பின்பு
ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது,
எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள்.
சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். (1 சாமுவேல் 10: 6-24)
இன்றும் உங்களைப் பார்த்து
கர்த்தர் சொல்கிறார்.. கர்த்தர் எதற்காக என்னை அழைத்திருக்கிறாரோ.. ..
அதற்குரிய சகல அடையாளங்களை உங்கள் பேச்சில் உங்கள் சாரத்தில் உங்கள் நடைமுறை பழக்கவழக்கங்களில் ஏற்படுத்துவார்.
ஏமி அம்மையார் நம் நாட்டில் வந்து சேவை செய்தது அயர்லாந்து தேசத்தில் சிறுமியாயிருந்த போதே அவ்விதமான அடையாளங்கள் காணப்பட்டது.
அதைப்போலவே,
உங்கள் எதிர்காலத்தின் திட்டத்திற்காகவே உங்களை அழைத்தவர் நீங்கள் அறிந்து கொள்ளும்படியான அடையாளங்களை உங்களில் ஏற்படுத்துவார்.
"பயப்படாதே;… உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” – ஏசாயா 43:1
தேவன் சகலத்தையும் நன்மையாகவே செய்வார். இப்போது உங்களுக்கு இருக்கும் நிலைமை எப்படி இருந்தாலும் அதை மகிழ்வாய் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை உண்டாக்கின ஆண்டவர் உங்களைக் குறித்து பெரிய நோக்கம் வைத்துள்ளார்.எல்லாம் நன்மையாகவே முடியும்.
#நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
286 தேவன் நம்மேல் வைத்த தமது அன்பு
ஒரு ஊரில் ஒரு போதகரும், ஒரு நாத்திகரும் நண்பர்களாய் இருந்தனர். போதகர் இயேசு கிறிஸ்துவையும், சிலுவைபாடுகளையும் எவ்வளவோ விளக்கி நாத்திகருக்கு சொல்லியும், நாத்திகர் கேலியும் பரியாசமும் செய்து விட்டு போய் விடுவார்.
ஒரு நாள் காலை, போதகர் அவசரமாக நாத்திகர் வீட்டிற்கு வந்து, "வாரும், எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு வேடிக்கையைப் பாரும்" என்று அவசரமாக அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தார்.
அங்கே கோழிக் கூண்டுக்குள் ஒரு கோழியின் இறக்கைக்குள்ளிருந்து ஏழெட்டு குஞ்சுகள் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
அந்தக் கோழியைப் பாரும். அது குளிர்ந்து போயிருக்கிறது. அதன் தலையை பாரும், ஒரு கீறி பிள்ளை கடித்து அதனுடைய இரத்தத்தை உறிஞ்சி குடித்திருக்கிறது.
தான் அந்த இடத்தை விட்டு அசைந்தால், தன் குஞ்சுகளுக்கு சேதம் வரும் என்று அந்த இடத்தைவிட்டு அசையாதபடி இருந்திருக்கிறது பாரும்" என்றார்.
நாத்திகர் கண்கள் கோழியின் தலையில் வழிந்த இரத்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர் உள்ளத்தை யாரோ உலுக்குவது போலிருந்தது.
"கிறிஸ்துவின் இரத்தத்தை இவ்வளவு நாளும் நான் அலட்சியம் செய்தேனே, அந்த அன்பின் மேன்மையை அறியாதிருந்தேனே" என்று கதறி அங்கேயே முழங்காற்படியிட்டார்!
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ( ரோமர் 5:8 )
287 சோழ நாட்டு வீரச்சிறுவன்
சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.
அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.
அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர். சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?” என்று ஆணவத்துடன் கேட்டான். மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.
முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.
மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன. கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
“”மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?” என்று இறுமாப்புடன் சொன்னான். மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.
அதே நேரத்தில்—
“”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான். “”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.
என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான். கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது. யாரிந்தச் சிறுவன்?
உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.
கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.
என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் வருவது போல நம் வேதாகமத்திலும் ஒரு சரித்திரம் நாம் நன்றாய் அறிந்தது ஒன்று உண்டு. தாவீது, கோலியாத்தின் சரித்திரம். சிறுமையும், எளிமையுமான சிறிய தாவீதைக்கொண்டு தேவன் பலத்தவனான கோலியாத்தை ஒரே அடியில் வீழ்த்தினான்.
சரி தாவீது எவ்வாறு கோலியாத்தை வீழ்த்தினான் என்றால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவோம் தேவ பெலத்தை கொண்டு தான் வென்றான் என்று. ஆம் அது உண்மைதான். எனினும் ஏன் நெற்றியில் குறி வைத்து கல்லை எறிய வேண்டும் என்றால் அந்த இடம் மட்டும் தான் திறந்திருக்கும் மற்ற இடமெல்லாம் கவசங்களால் மூடி மறைத்திருப்பான் என்று பதில்.
பெரும்பாலான வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, கோலியாத் மட்டுமல்ல அவனை போன்ற இராட்சதர்கள் (Acromegaly) என்னும் ஒருவித நோயின் காரணமாக தான் இவ்வாறு அசுரத்தனமாக வளர்கின்றனர். மேலும் இவர்களுக்கு கிட்டப்பார்வை (short sight) குறைவாகத்தான் இருக்குமாம்.
தாவீதின் கையிலிருந்தது ஏதோ பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு பொருளல்ல மாறாக ஒவ்வொரு ஆட்டு மேய்ப்பனும் காட்டு விலங்குகளிடமிருந்து தன்னையும் தன் மந்தையையும் பாதுகாக்க உபயோகப்படுத்துகிற ஒரு ஆயுதம் தான் அந்த கவண். சிந்தித்துப் பாருங்கள் ஒரு காட்டு விலங்கை துரத்த வேண்டும் என்றால் எப்பேற்பட்ட ஆயுதம் தேவைப்படும் என்று. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது தாவீது பயன்படுத்திய கவண் ஒரு துப்பாக்கியிலிருந்து (.45 caliber pistol) வெளிவரும் வேகத்திற்கு நிகரானது என்று.
இவ்வளவு வலிமை நிறைந்த ஆயுதத்துடன் தேவனுடைய பெலனும் சேர்ந்ததால் தாவீது கோலியாத்தை எளிதில் வென்றான். தாவீது சொல்கிறார்,
17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.
சங்கீதம் 40:17
எனவே நம்மேல் நினைவாயிருக்கிற தேவன் அனுதினமும் நம்மை வழிநடத்தி கோலியாத்தை போன்ற எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு உறுதுணையாய் நின்று நம்மை விடுவித்து நம்மை காத்துக் கொள்வார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
288 சுட்ட நாக்கு
குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்றிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான்.
அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தன் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*
289 பெருமை
ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது.
மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. "நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது என் அலகு எவ்வளவு பெலன் வாய்ந்தது" என்று பெருமை கொண்டது.
அதுமட்டுமல்ல, இன்னும் பெரிய மரங்களையும் நான் வீழ்த்திக் காட்டுகிறேன் பாருங்கள், என்று சவால் விட்டு போய், தன் அலகை முறித்துக் கொண்டது.
இன்று நம்மில் அநேகர் இப்படித்தான் பரிசுத்தாவியானவர் அவர்கள் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் கிரியை செய்திருக்க, கர்த்தருக்கு மகிமை செலுத்தி தங்களை மறைத்து ஜீவிக்காமல், என் ஊழியத்தில் இத்தனை பேர் ஒப்புக்கொடுத்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள் என்று "டமாரம்" அடித்து கடைசியில் விழுந்து போய்விடுகிறார்கள்.
உங்கள் மூலம் இதுவரை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று தேவ மனிதர் மூடியிடம் கேட்டபோது,
அவர் தாழ்மையாக சொன்னார்:- "நான் கணக்குப் பார்க்க ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகம் என்னிடத்தில் இல்லை. நான் அப்பிரயோஜன மற்ற ஊழியக்காரன்" என்றாராம்!!
கர்த்தர் D.L மூடி பிரசங்கியாரை கடைசிவரையும் வல்லமையாக உபயோகப்படுத்தினதின் இரகசியம் இதுதான். தேவஜனமே, உங்களைத் தாழ்த்தி, கிறிஸ்துவில் மறைந்து ஊழியஞ்செய்யுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஆமென்.
சங்கீதம் 106:2
கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?
-----
290 அழகியபுரம் என்ற கிராமம்
நகரத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த “அழகியபுரம்’ கிராமம். பெயருக்கேற்றபடி மிகவும் அழகு வாய்ந்தது அந்தக் கிராமம். எங்கு பார்த்தாலும் “பச்சைப் பசேல்’ என்றுதான் காட்சியளிக்கும். வளமான நீர் நிலைகள் கண்களுக்குக் குளுமை சேர்க்கும். ஓங்கி வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பன்னீர் பூக்கள் பார்ப்பதற்கு பூமழை பொழிவது போல் தோற்றமளிக்கும். அளவான வீடுகளுடன், அமைதியான சூழலில் இருந்தது அந்தக் கிராமம். பட்டணத்திலிருந்து அந்த ஊரில் வசிக்கும் பண்ணையார் வீட்டிற்கு அவரது மகளும், பேரனும் வந்திருந்தனர். பேரனுக்கு கிராமம் என்றாலே இளக்காரம்.
“மம்மி… உங்க ஊரு சரியான நாட்டுப்புறம். அந்த வயல் வரப்புகள்ல நடப்பது அய்யோ அம்மா… என் கால் எல்லாம் டர்டி ஆயிடும். படிக்காத உங்க சொந்தக்காரங்க… “தம்பி… புள்ள எப்படா வந்த…’ என ராகம் போட்டு கூப்பிடுவது எல்லாம் எனக்கு பிடிக்காது…’ மம்மி’ என்பான்.
அதைக் கேட்டு மந்தகாசமாக சிரிப்பார் கணவர். சந்திராவுக்கு அழுகையா வரும். என்ன செய்வது அப்படியே தாங்கிக் கொள்வாள். மாலை நேரத்தில் தகப்பனாருடன் மாடியில் நின்று கிராமத்தை பார்த்தான் சந்தோஷ். அப்போது நகரத்தின் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்ட கிராமத்தின் எழில், அதன் அமைதியான சூழ்நிலை அவன் மனதை கொள்ளைக் கொண்டது. அதிகாலையிலேயே எழுந்து கையில் பேஸ்ட், பிரஷ்ஷுடன் வெளியே வந்த சந்தோஷை கணக்குப் பிள்ளை அன்போடு அழைத்தார்.
“”தம்பி எங்க ஊரு எப்படி இருக்கு?” என்றபடியே கையில் ஒரு குச்சி, அதை தன் வாயில் வைத்து தேய்த்துக் கொண்டே பேசினார்.
“”என்ன தாத்தா இந்த குச்சி வைத்து என்ன பண்ணுறீங்க… பேஸ்ட், பிரஷ் எதுவுமே இல்லாம இப்படி குச்சி வைத்து கண்டபடி இழுக்குறீங்களே! உங்க வாய் தான் புண்ணாயிடாதா?” என்றான். இதைக் கேட்ட முதியவர்,
“”தம்பி! நீங்க பட்டணத்து தம்பி… இங்கிலீஸ் படிப்பெல்லாம் படிக்கிறீங்க. பட்டணத்துலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன உங்களுக்கு இந்தக் கிராமத்து சூழல் பற்றியும், இங்கு இருக்கிறவர்கள் பற்றியும் தெரிஞ்சிருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
நான் விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து இந்தக் குச்சியால்தான் பல் தேய்ச்சிட்டு வர்றேன். அப்படி ஒண்ணும் என் வாய் புண்ணாகிடல. மாறாக என்னோட ஒரு பல் கூட இதுவரைக்கும் விழுந்ததில்லை, ஒரு சொத்தைப் பல் கூட இன்னும் எனக்குக் கிடையாது. காரணம், இது வெறும் குச்சி இல்ல; ஆலங்குச்சி.
அதோ அந்த ஆலமரத்திலிருந்துதான் தினமும் ஒரு சிறுகுச்சியை ஒடித்து பல் தேய்ப்பேன். “”உங்க பேஸ்ட், பிரஷ்ல இல்லாத மருத்துவ குணமெல்லாம் இயற்கையான இந்த ஆலங்குச்சியில் இருக்கு. “ஆலும், வேலும் பல்லுக்குறுதி.’
இதுமட்டுமில்லாம காலையில் எங்க ஊர் குளத்தில் குளிச்சிட்டுப் போய் பாருங்க! உங்களுக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சியே தனிதான். அதுதான் சொல்லியிருக்காங்க. குளிர்ந்த நீரில் குளிச்சா உடம்பு சுத்தமாகிறது மட்டுமல்லாமல் நம்ம மனசும் குளுமையா இருக்கும். இன்னும் எவ்வளவோ இருக்கு தம்பி. இதெல்லாம், நீங்க அடிக்கடி வரும்போது தெரிஞ்சிக்குவீங்க…
டிபன் சாப்பிட்டு விட்டு ரெடியா இருங்க. நான் வந்து கிராமத்தை சுத்திப் பார்க்க கூட்டிகிட்டு போறேன்,” என்றார். முதல் முறையாக சந்தோஷின் மனதில் கிராமத்தை பற்றிய எண்ணம் மாறியது. காரணம், 15 வயதிலேயே சொத்தைப் பல்… அடிக்கடி பல் கூசும். பல்லில் ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தோஷ்க்கு.
முதல் முறையாக கணக்குப்பிள்ளை சொன்ன ஆரோக்கியமான பற்கள் மற்றும் பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சி பற்றி அவர் சொன்னது அவன் மனதை தொட்டது. அம்மா சொல்லும் போது, புத்தகத்தில் படிக்கும் போதெல்லாம் ஏற்படாத ஒரு நம்பிக்கை அவன் மனதில் முதன் முதலாக உண்டாகியது. அத்துடன் அம்மாவின் ஆசைப்படி பத்து நாட்கள் தாத்தா வீட்டில் இருந்து கிராமத்து மண்ணின் மான்புகளை தெரிந்துக் கொள்ளலாம் என நினைத்தான்.
என் அன்பு வாசகர்களே,
இவ்வுலகில் தேவன் படைத்த அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை. அதில் ஒன்று தான் கிராமத்து வாழ்க்கை. இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் மற்றும் நல்ல தட்பவெப்ப நிலை என சொல்லிக்கொண்டே போகலாம்.
மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் வித்தியாசமின்றி உழைத்துக்கொண்டிருக்கும் நகர வாழ்க்கை வாழ்பவர்கள் அநேகர் தங்களின் விடுமுறை நாட்களை ஏதாகிலும் ஒரு கிராமப்புறத்தில் தான் செலவிடுகின்றனர். ஏன் அவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்றால் பட்டணங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரும் பொழுதுபோக்கு என்னவெனில் வணிக வளாகங்கள் (shopping malls) மட்டுமே. அதுவே கிராமப்புறத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கோ தங்கள் வீடே ஒரு பெரும் பொழுதுபோக்கு அங்கமாய் இருக்கிறது.
தங்கள் வீட்டை சுற்றி தோட்டம், தோட்டத்திற்கு தேவையான நீரை கிணறு, ஏரி, குளம் என பல்வேறு நீர் ஆதாரங்கள் மிகுந்து காணப்படுகிறது. கிராமத்தின் பழக்கவழக்கங்கள் உடலை இயற்கையான முறையில் ஆரோக்கியத்துடன் பாதுகாக்க உதவுகிறது. காலத்தால் அழியாத கலாச்சாரங்கள் கிராமங்களில் தான் மிகுந்து காணப்படுகிறது.
அது மாத்திரமல்ல கிராமத்து வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்து தேவனை தேடி, தங்கள் கடைமைகளை செய்வார்கள்.
ஆனால் நகர வாழ்க்கையில் தங்கள் பணி முடிந்து தூங்க செல்வதே இரவு 12 அல்லது 1 மணியாகிறது. காலை எழுவதை சொல்லவா வேண்டும். நகர வாழ்க்கை வாழ்கின்ற அநேகர் அதிகாலையிலே எழுந்து தேவனை தேடி தான் தங்கள் கடைமைகளை செய்கின்றனர் அவர்கள் வெகு சிலரே.
நகர வாழ்க்கை தோன்றிய பிறகு அநேகர் கிராமத்து வாழ்க்கையை விட்டுவிட்டார்கள். கிராமத்து வாழ்க்கையின் மீதுள்ள பற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுபோலத்தான் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆரம்ப காலக்கட்டத்தில் கிராமத்தை போல, இருப்பதை கொண்டு செழிப்பாய் குறை ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தபோது தேவனை தேடி நாடி ஓடினார்கள். ஆனால் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டபோது தேவனை விட்டு உலகத்தை நாடி தேடி ஓட ஆரம்பித்ததால் தேவனை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டனர் காரணம் உலகத்திற்கு கொடுப்பதற்கு தான் நேரம் சரியாக இருக்கிறது. வேதம் சொல்கிறது,
4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
வெளிப்படுத்தின விசேஷம் 2:4
எனவே அன்பானவர்களே, இக்கதையில் அந்த பையனுக்கு இறுதியில் தோன்றியது போலவே நாமும் நம்முடைய தேவனை தேடுவதற்கு நேரத்தை ஒதுக்குவோம் குறை இல்லாத வாழ்க்கை வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
291. கழுகு
ஒரு பெரிய கழுகு ஒன்றைக் கடைக்காரன் ஒருவன் ஒரு பெரிய கூண்டில் அடைத்து, அதன் கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி, காட்சிப் பொருளாய் வைத்திருந்தான். ஏராளமான சிறுவர்களும், பெரியவர்களும் வேடிக்கை பார்க்க அங்கே கூடுவதுண்டு.
வாலிபன் ஒருவன் அந்தக் கழுகின் மேல் இரக்கம் கொண்டு, அந்த கடைக்காரனிடம், அந்தக் கழுகை எனக்குத் தந்துவிட முடியுமா? என்று கேட்டான். கடைக்காரன் ஒரு பெருந்தொகையை வாங்கிக் கொண்டு, கழுகை விற்று விட்டான்.
ஒரு மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு சென்று, கூண்டிலிருந்து கழுகை எடுத்து, காலில் இருந்த சங்கிலியை அவிழ்த்து வெளியே விட்டான் அந்த வாலிபன்.
ஆனால் அந்தக் கழுகு பறக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தான் விடுதலை பெற்று விட்டதையும், தன்னால் இனி உன்னதங்களிலே பறக்க முடியும் என்பதையும் கழுகு உணரவே இல்லை!
சற்று நேரத்திற்குப்பின், ஆகாயத்தில் ஏதோ ஒரு கழுகு பறப்பதைக் கண்டு, இந்தக் கழுகும் தன்னை அறியாமல் செட்டைகளை அடித்து பறக்க ஆரம்பித்துவிட்டது!
இப்படிதான் சாத்தானும் அநேகரை பாவ அடிமைத்தனத்திற்குள் கட்டி வைத்திருக்கிறான். இயேசு கல்வாரியின் கிரயம் செலுத்தி மீட்டுங்கூட, அவர்களுக்குள் பழைய பாவ சுபாவம் இருக்கிறபடியால், செட்டைகளை அடித்து உயர எழும்பாமலிருக்கிறார்கள்.
#ரோமர் 8:2
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
No comments:
Post a Comment