Wednesday, 24 August 2016

உணவு அளவு

முன்பெல்லாம் ஓட்டல்கள் நிறைய இருக்காது. அப்படியே இருந்தாலும், தோசை, இட்லி, பொங்கல் என்று நம்மூர் சமாச்சாரங்கள் தான் கிடைக்கும். அதெல்லாம் நம் வயிற்றைப் பதம் பார்த்ததும் இல்லை. ஆனால், இப்போது... வாயில் நுழையாத பெயர்களில் உணவுப் பண்டங்கள், அதை ஆசையாக வாங்கிச் சாப்பிடும் பெருமிதத்தில், நாம் உயிர் வாழ முக்கிய பங்காற்றி வரும் பெருங்குடலை மறந்தே விடுகிறோம். "இழு இழு"வென இழுத்து கஷ்டப்பட்டு வாயில் போட்டு ருசியாய் சுவைப்பது போல பாவனை செய்தபடி சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் நம் குடலையும் "இழுஇழு"வென இழுத்து விடும். ஆனால், இதைப் பற்றி நமக்கு சிந்தனையே இருக்காது. வயிறு வலிக்குது என்று அலறுவோம். வயிறு வலிக்கு மாத்திரை போட்டு தற்காலிக நிவாரணம் கண்டுவிட்டு, அடுத்த வேளைக்கு மீண்டும் "இழுஇழு..." என்ன வாழ்க்கை இது? நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டும்? நாம் எப்போதும் அளவறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். அளவு இரண்டு விஷயங்களைப் பொறுத்துள்ளது. ஒன்று உடலின் ஜீரண சக்தி; மற்றொன்று உண்ணும் உணவின் தன்மை. உடலில் ஜீரண சக்தி எப்படி இருக்கிறது என்பதை முக்கியமாக கவனித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு எளிதானதா, கடினமானதா என்பதைப் பொறுத்தும் உணவின் அளவு மாறுபடும். உணவு உட்கொள்வதால், வயிற்றிலுள்ள ஜீரணப்பை கெட்டு விடக்கூடாது. இருதயப் பகுதியில் அடைப்போ, விலாப்பக்கங்கள் புடைக்கவோ கூடாது. வயிறு புடைக்கும் அளவுக்கு உணவை உட்கொள்ளக் கூடாது. அளவாக உண்டால், புலன்களுக்குத் திருப்தியையும், வலுவையும் ஊட்டும்; வயிற்றுப் பசியையும், தாகத்தையும் அடக்கும். நிற்பது, அமர்வது, தூங்குவது, நடப்பது, மூச்சை இழுப்பது, மூச்சை வெளி விடுவது, சிரிப்பது, உரையாடுவது போன்ற செயல்களை நாம் சுகமாகச் செய்தால் உண்ட உணவின் அளவு கூடவோ, குறையவோ இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மாலையில் உண்ட உணவு காலைக்குள்ளும், காலையில் உண்ட உணவு மாலைக்குள்ளும் ஜீரணமாக வேண்டும். இப்படி உட்கொண்டால், உடலில் பலம், நிறம், சீரான உடல் வளர்ச்சி, உடல் அமைப்பு, ஆகியவற்றைப் பெற்று பயன் அடையலாம். எளிதில் ஜீரணமாகாதா உணவுப் பொருட்களை வயிற்றில் அரை பங்கு உட்கொண்டு நிறுத்தி விட வேண்டும். இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள், நெய்யில் சமைத்த பொருட்கள் இப்படிப்பட்ட உணவு வகைகளை மேலே குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக உண்பது உடலுக்கு நல்லதல்ல. ஜீரணத்திற்கு எளிதான பொருட்கள் இயற்கையாகவே வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியவை. தவறி அதிகமாக உட்கொண்டாலும் தீமையை ஏற்படுத்தாது. கடினமான உணவுப் பொருட்கள் இவற்றுக்கு எதிரிடையானவை. எனினும் அதிக ஜீரண சக்தியை உடையவர்களுக்கும், தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இவை கெடுதலை விளைவிக்காது. உணவை மிகக் குறைவாகவோ, அதிகமாகவோ உண்ணக் கூடாது. குறைந்த அளவில் உணவை உட்கொண்டால், பலம், நிறம், வளர்ச்சி, மனம், அறிவு, புலன்கள் இவை அழிந்து விடும். உணவைக் குறைத்தால் மலச்சிக்கல் உண்டாகும். ஆண்மை, ஆயுள் குறையும். அதிகஅளவில் உட்கொண்டால் வாயு, பித்தம், கபம் ஆகியவற்றை அதிகப்படுத்தி விடுகிறது. ஜீரணசக்தி குன்றி பல நோய்கள் உருவாகி விடும். எனவே, தினமும் உண்ணும் உணவு அளவுக்குக் குறையாமலும், அதிகமாகாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படி? ஒரு கரண்டி பாயசம் வீணாகப் போகிறதே என்று நினைத்து வயிற்றுக்குள் கொட்டுபவரா? -

No comments:

Post a Comment