Sunday, 31 July 2016

குழந்தைகளுக்கான சத்தான உணவு

குழந்தைகளுக்கான சத்தான உணவு இன்றைய நவீன, அவசர உலகில் குழந்தைகளுக்கான சத்தான உணவு குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. அவர்களின் வயிற்றை நிரப்ப ஏதாவது ஓர் உணவு போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதிக கலோரிகள் நிறைந்த சிப்ஸ்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான எந்தவிதச் சத்தும் கிடைப்பதில்லை. உணவைக் குழந்தைகள் விரல்களால் தொட்டு உணர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், சிறிய வகை சான்ட்விச்கள், பழங்களைக் கைகளால் குழந்தைகள் எடுத்துச் சாப்பிடும்போது உணவு மீதான அதன் ஆர்வம் அதிகரிக்கிறது. இரவு உறங்கி எழுந்தவுடன் காலை நேரத்தில் சாப்பிடும் உணவு சத்தானதாக இருப்பது அவசியம். பொதுவாக ஒரே மாதிரியான உணவு மெனுவைக் குழந்தைகள் விரும்புவதில்லை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலும் அதேசமயம் சத்தானதுமான ஒருசில காலை நேர உணவு வகைகள் இதோ: காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற பலவகைக் காய்கறிகளை துருவிப்போட்டு ஆவியில் வேகவைத்த இடியாப்பம். அதே போன்ற வண்ணமயமான காய்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிரட் சான்ட்விச். பருப்புபோட்டுத் தாளித்த பணியாரம். அவல் உப்புமா. காரட்டைத் துருவிப்போட்டுத் தயாரிக்கும் ஊத்தாப்பம். பலவித காய்கறிகளைச் சிறிதாக நறுக்கியோ, துருவிப்போட்டோ செய்யப்படும் தோசை. பாலுடன் உண்ணத்தக்க கான்ஃப்ளேக்ஸ். காய்கறிகளை நிரப்பி ரோல்போல் சுருட்டி செய்யப்படும் ஸ்டஃப்ட் சப்பாத்தி. சாம்பார் மற்றும் நிலக்கடலைச் சட்னியுடன்கூடிய மினி இட்லி. வெஜிடபிள் ரவா தோசை. காரம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை. இனிப்புக் கொழுக்கட்டையின் உள்ளே பூர்ணமாக வைக்க கடலைப்பருப்பு வேகவைத்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து உருண்டை பிடிக்கலாம். சத்தானதும்கூட. பூரி, அதற்கு இணையாக முளை கட்டிய பயறு சேர்த்த மசாலா. அரிசியால் செய்யப்பட்ட ஃப்ளேக்ஸ். இதை பால், தேன், பழங்கள் மற்றும் உலர்ந்த கொட்டைகளுடன் (பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை) சேர்த்துக் கொடுக்கலாம். சர்க்கரைப் பொங்கல். இதில் அரிசியும், பாசிப்பருப்பும் சேர்க்கப்படுவதால் கூடுதல் சத்து. இவற்றுடன் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினசரி கட்டாயம் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் உள்ளன. அவை: நாளொன்றுக்கு 2 கப் பால். ஒரு வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள். தினமும் ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ். ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, கொய்யா, பைன் ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்ச், சாத்துக்குடி, மாம்பழம் போன்ற ஏதேனும் ஒரு பழமோ அல்லது பழக் கலவைகளோ தினசரி 2 முதல் 4 மேஜைக் கரண்டிகள். காரட், பட்டாணி, பீட்ரூட் போன்ற வேக வைத்த காய்கறிகள், முட்டைக்கோஸ் போன்ற இலைக் காய்கறிகளை தினசரி 2 முதல் 3 மேஜைக் கரண்டிகள். வேக வைத்த ஓர் உருளைக்கிழங்கு. காரட், வெள்ளரி, தக்காளி போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றைப் பச்சையாகக் கொடுக்கலாம். வறுக்கப்பட்ட அல்லது நன்கு வேகவைக்கப்பட்ட தானிய வகைகள் கால் கப் அல்லது முக்கால் கப். வேகவைக்கப்பட்ட பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்று அரை கப். இந்த உணவு வகைகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும். குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப உணவு வகைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்து கொடுக்கலாம். - உணவே மருந்து

No comments:

Post a Comment