சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்க
“மனோவா:.... அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.” - நியா.13:12
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பிறந்தவர் நிக் யூஜிசிக். பிறக்கும்போதே இரண்டு கைகளும், கால்களும் இல்லை. ஏன் இப்படி பிறந்தான் என்று பெற்றோருக்கு புரியவில்லை. அப்பா பேர் பெற்ற ஊழியக்காரர். அம்மா நர்ஸ் ஆகப் பணியாற்றினார்கள். தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து பிள்ளையை வளர்த்தார்கள்.
பையனுக்கு படிக்கும் வயது வந்தபோது தன்னால் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு அவன் அம்மாவிடம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறினான். அதிர்ச்சியடைந்த அவன் பெற்றோர் அவனிடம், “நாங்கள் உன்னை நன்றாக கவனித்துக்கொள்வோம், உன்னை படிக்க வைக்கிறோம். பயப்படாதே” என்றார்கள். அப்படியே பட்டப்படிப்புவரை படிக்க வைத்தார்கள்.
படித்து பட்டம் பெற்ற நிக் பிரபல ஊழியக்காரனாக மாறினான். ஒரு அழகான பெண் அவனை திருமணம் செய்து கொள்ள முன்வந்தாள். “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று அவன் கேட்டபோது அவள் அழுதாள். அத்தனை அன்பு அவன்மேல்! ஆண்டவர் அவன் வாழ்வை வளமாக மாற்ற சித்தம் கொண்டார். உலகின் பிரபலமான ஊழியக்காரனாக அவனை மாற்றினார்.
இன்றைக்கும் சில குடும்பங்களில் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதை பார்க்கிறோம். அதைக் குறித்து பெற்றோர் சோர்வடைந்து போகக்கூடாது. எல்லாவற்றிலும் ஆண்டவருக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவன் என்று எண்ணப்பட்ட நிக்கை ஆண்டவர் சிறந்த ஊழியக்காரனாக உலகெங்கும் பயன்படுத்தினார்.
மோசே, “நான் வாக்குவல்லவன் அல்ல” என்று கர்த்தரிடம் கூறும்போது, “வாயை உண்டாக்கியவர் கர்த்தராகிய நான் அல்லவா!” என்கிறார். வாயை குணமாக்காமல் பேசுவதற்கு ஆரோனை கூட அனுப்புகிறார். ஆண்டவரின் திட்டம் நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது. பிறவிக் குருடனைக் குறித்து அவருடைய சீஷர்கள், “இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இது இவன் செய்த பாவமுமல்ல, இவனை பெற்றவர்கள் செய்த பாவமும் அல்ல. தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படி இப்படி பிறந்தான்” என்றார்.
என் அன்பு பெற்றோரே! ஆண்டவருடைய சித்தத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏன்? ஏன்? என்று கேள்வி கேட்க முற்படவேண்டாம். “ஆண்டவரே, நீர் தந்த பிள்ளையை வளர்க்க எனக்கு பொறுமையையும் அன்பையும் தாரும். என் பிள்ளையின் மீது நீர் வைத்த திட்டம் நிறைவேற என்னையும் ஒரு கருவியாய் பயன்படுத்தும்” என ஜெபியுங்கள். கர்த்தர் உங்களுக்கு சகல கிருபையும் தருவார். அற்புதங்கள் நடக்கும். ஆமென்.
- Bro.டேவிட் தவமணி
No comments:
Post a Comment