Thursday, 16 November 2017

அன்றன்றுள்ள அப்பம்

அன்றன்றுள்ள அப்பம்

"அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்?" (1 சாமு. 1:8).

அன்னாள் ஜெபித்த ஜெபம், சாதாரணமானதல்ல. ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? என்று கணவன் கேட்டதிலிருந்து அவள் உள்ளத்தை வருத்தி, உபவாசத்தோடு வைராக்கியமாக ஜெபித்தாள் என்பதை அறியலாம். அவள் தன் இருதயத்தை ஊற்றி, ஊக்கமாய் ஜெபித்தாள். (1 சாமு. 1:13,15).  அவளுடைய துக்கம், அழுகை, மனமடிவு, உபவாசமிருந்து ஜெபிக்கும்படி, அவளை ஏவி எழுப்பியது.

அன்னாள் ஜெபத்திற்கு சரியான இடத்திற்கு வந்திருந்தாள். சரியான நபரின் பாதத்தைப் பிடித்திருந்தாள். சரியான ஊக்கமான ஜெபத்தை அவள் செய்தாள். அவள் வந்திருந்த இடம், கர்த்தருடைய ஆலயத்திலுள்ள தேவ பிரசன்னம். மனங்கசந்து உடைந்த உள்ளத்தோடு ஜெபித்தாள். மிகுந்த விசாரத்தினாலும், கிலேசத்தினாலும் நீண்டநேரம் விண்ணப்பம் பண்ணினாள் (1 சாமு. 1:10,16).

ஒரு தேவ மனிதன், தெருவிலே நின்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று மூன்று ரௌடிகள் அங்கே வந்து, "மதப் பிரச்சாரமா செய்கிறாய்?" என்று கேட்டு, அவர் கன்னத்தில் "பளார், பளார்" என்று அறைந்துவிட்டு போய் விட்டார்கள். அவர் தொப்பென்று கீழே விழுந்தார். அடிவாங்கின வலி ஒருபக்கம். அவமானம் மறுபக்கம். நேராக தன்னுடைய வீட்டுக்கு வந்து கர்த்தருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, மிகவும் அழுது வைராக்கியமாய் ஜெபிக்க ஆரம்பித்தார். ஒன்றும் சாப்பிடவுமில்லை. தண்ணீர் குடிக்கவுமில்லை.

மாலை வேளையில், அடித்தவர்களில் ஒருவன் அழுதுகொண்டு வந்து, "ஐயா  எனக்கு நடுக்கமாயிருக்கிறது. மரணபயம் பற்றிப் பிடிக்கிறது. என் தலையோ தீப்பற்றியெரிகிறது. உங்களை அடித்ததற்காக மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, காலில் விழுந்து கதறினான். அவனை அவர், பாவ மன்னிப்புப் பெறும்படி கர்த்தரண்டை வழிநடத்தினார்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அவரை அடித்த அடுத்தவன்மேல் பஸ் ஏறி மிகவும் சிதைந்து, அகால மரணமடைந்தான் என்ற செய்தி வந்தது. மூன்றாவது ஆள், தன் வீட்டுக்குச் செல்லுகிற வழியிலேயே, பைத்தியக்காரனாகிவிட்டான். "உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்" என்று வாக்குத்தத்தம் செய்த ஆண்டவர், தம்முடைய பிள்ளைகளை கண்ணும், கருத்துமாய் பாதுகாக்கிறார்.
எஸ்தர் ராஜாத்தியும், அவள் தாதிமாரும், மூன்று நாட்கள் அல்லும் பகலும் புசியாமலும், குடியாமலுமிருந்து உபவாசம் பண்ணினார்கள். எஸ்தர் ராணி சட்டத்தை மீறி, நான் செத்தாலும் சாகிறேன் என்று வைராக்கியமாக ராஜாவின் சந்நிதியில் பிரவேசித்தாள் (எஸ்தர் 4:16). அந்த வல்லமையுள்ள ஜெபத்தினால், அந்த தேசத்து சட்டங்கள் திருப்பப்பட்டன. "காரியம் மாறுதலாய் முடிந்தது" (எஸ்தர் 9:1).

இயேசுகிறிஸ்துவும்கூட, வெற்றியுள்ள ஊழியத்தை செய்யும்படி, வைராக்கிய மாக நாற்பது நாட்கள் புசியாமலும், குடியாமலும் வனாந்தரத்துக்குச் சென்று ஜெபித்துக்கொண்டேயிருந்தார் (மத். 4:1,2). ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண் டுமே, வியாதியஸ்தரைக் குணமாக்க  வேண்டுமே, பிசாசுகளைத் துரத்த வேண் டுமே, மரித்தோரை எழுப்ப வேண்டுமே, சீஷர்களைப் பயிற்றுவித்து, அக்கினி ஜுவாலையாக்க வேண்டுமே என்று மன்றாடிக்கொண்டேயிருந்தார். தேவ பிள்ளைகளே, தீராத பிரச்சனை வரும்போது, கட்டுகளை உடைத்து ஜெயம்பெற, உபவாசித்து ஜெபியுங்கள்.

நினைவிற்கு:- "ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (யோவே. 2:12).

சகோ. J. சாம் ஜெபத்துரை

No comments:

Post a Comment