தியோடர் வில்லியம்ஸ் (1935-2009)*
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 1935 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்னும் ஊரில் திரு. ஏசுதாசன், திருமதி. கிரேஸ் தம்பதியினருக்கு பிறந்தார். தியோடர் அவர்களின் தாத்தா ஒரு குருவானவராக ஊழியம் செய்து கொண்டிருந்தார். தகப்பனார் ஒரு ஆசிரியர். ஆகவே மிகவும் பக்தியும் கண்டிப்பும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வளர்ந்தார்.
தினமும் காலையில் வேதாகமம் வாசித்து, இரண்டு வசனங்கள் மனப்பாடம் செய்தால்தான் தியோடர் அவர்களின் பெற்றோர்கள் காலை ஆகாரம் கொடுப்பது வழக்கம். இதனால் சிறுவயது முதற்கொண்டே அநேக வேதவசனங்களை மனப்பாடம் செய்திருந்தார்.
இந்நிலையில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 18 வயது இருக்கும்போது 1953 ம் ஆண்டில் சகோ. பகத்சிங் மூலமாக இம்மானுவேல் ஆலயம், சென்னையில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில், இசையையும் பாடலையும் ரசிப்பதற்காக சென்ற தியோடரை, பிரசங்க நேரத்தில் கர்த்தர் ஊழியத்திற்கு அழைப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் தியோடருடன் தொடர்ந்து கர்த்தர் பேச ஆரம்பித்தார்.
ஆகவே 1954 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் நாள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுங்கொண்டு, கிடைத்த நேரங்களில் எல்லாம் சுற்றியுள்ள கிராமங்களின் திருச்சபைகளுக்கு சென்று சிறுவர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவிப்பதிலும் தெருக்களில் நடைபெரும் சுவிசேஷ பணியில் ஈடுபட்டு, ஊழிய அழைப்பில் செயல்பட தன்னை அற்பணித்தார். சென்னையில் இம்மானுவேல் திருச்சபையில் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியராக ஊழியம் செய்தார்.
தியோடர் அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்து பின்னர் முதுகலை பட்டத்தில் புள்ளியியல் துறையில் சிறந்த மாணவராக வந்தார். அப்போது இந்தி மொழியையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்வதையும் சிறப்பாய் கற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற இந்திய பொதுத்துறை தேர்வையும் சிறப்பா க எழுதினார். இதனால் அரசாங்கத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி வந்தது. ஆயினும் ஆண்டவருடைய ஊழியத்திற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை நற்செய்திபணி செய்வதற்கு முழுவதுமாய் அற்பணித்தார்.
இந்நிலையில் 1955 ம் ஆண்டு பெங்களூரில் பங்கார்பேப் பகுதியில் இருந்த South Indian Bible Institute என்ற வேதாக கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இறையியல் பாடங்களையும் நன்கு கற்று கொள்ள ஆரம்பித்தார். இறையியல் புத்தகங்கள் வாங்குவதற்காக கல்லூரி நேரம் முடிந்ததும் அங்குள்ள குளியல் அறைகளை சுத்தம் செய்து, கல்லூரி விடுதிக்கு தேவையான மளிகைபொருட்களை வாங்கி தன்படிப்பு செலவை பார்த்துக்கொண்டார். தியோடர் அவர்களின் அறிவார்ந்த புத்திசாலித்தனம் வேதாகம கல்லூரியில் பிரகாசித்தது. வேதாகம படிப்பில் சிறந்து விளங்கினார்.
பின்னர் செராம்பூர் பல்கலை கழகத்தில் 1957 ம் ஆண்டு B.D. படிப்பை 4 ஆண்டுகள் பயின்று வேதாகமத்தை எபிரேயம், கிரேக்கு மொழிகளில் கற்று தேர்ந்து பின்னர் 1961 ம் ஆண்டில் பெங்களூரில் SIBS வேதாகம கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அளவிற்கு சிறந்த வேத பண்டிதராக விளங்கினார்.
தியோடர் வில்லியம் பல திருச்சபைகளுக்கு சென்று வேதபாட வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். இவருடைய வேதாக ஞானத்தினாலும், வேத போதனைகளினால் அழிந்துவரும் இந்த உலகில் மீட்பரின் தேவை பற்றிய செய்திகள் ஈர்க்கப்பட்ட அநேக வாலிபர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாய் பேசக்கூடிய தாலந்துகளை ஆண்டவர் கொடுத்திருந்ததார். இவருடைய சமரசம் செய்யாத வேதாகம போதனைகள் அநேக படித்த வாலிபர்களின் ஆத்துமாக்களை தூண்டியது. ஆகவே அநேக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் 1963 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேத வசனங்களை போதிக்கும் வரத்தை அகில இந்தியாவும் கேட்க செய்யும்படி *வேதத்திற்கு திரும்புவோம்* என்ற பெயரில் வானொலி நிகழ்சி ஆங்கிலத்திலும், தமிழில் *சத்திய வசனம்* என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக ஒலிபரப்பப்பட்டது. இதன் மூலம் இவருடைய வேதஞானம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஆண்டவர் தியோடர் வில்லியம்ஸ் அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார். பல நாட்டு திருச்சபைகள் அவருக்கு அழைப்பு கொடுத்தது. இதனால் உலகம் முழுவதும் சென்று வேதாகமத்தை பிரசங்கித்ததால் அமெரிக்க வேதாகம கல்லூரி இவருடைய வேத ஞானத்திற்காக முனைவர் என்ற *வேத பண்டிதர்* பட்டமும் கொடுத்து கௌரவித்தது.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் வேத ஞானத்தினால் அநேக ஆவிக்குறிய நண்பர்கள் பலரின் தொடர்பு ஏற்பட்டது. சகோ. சாம் கமலேசன், டேனிஸ்பேட்டை சகோ. P. சாமுவேல் மற்றும் சகோ. பிரட் டேவிட், சேலம் Dr. புஷ்பராஜ், மெஞ்ஞானபுரம் எமில் ஜெபசிங் இவர்களுடன் ஐக்கியம் ஏற்பட்டது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து *நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு* என்ற நற்செய்திபணி இயக்கம் உருவாவதற்கு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் காரணமாய் இருந்தார்கள்.
இந்நிலையில் 1964 ம் ஆண்டில் இந்திய சுவிசேஷ ஐக்கியத்தின் தலைவரா நியமிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியாவில் நற்செய்திபணிக்கு மேலைநாட்டு மிஷனெரிகளையும் அவர்கள் பண உதவியையும் சார்ந்திராமல், உள்நாட்டு மிஷனெரிகள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மேலூம் நற்செய்தி பணியானது மேற்கத்திய முறைக்கு மாறாக இந்திய முறையில், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட மக்கள் மத்தியிலே ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவைப் பற்றி அறியப்டாத இடங்களுக்கும் சென்று நற்செய்திபணி செய்யவேண்டும் என்ற அறைகூவல் விடுத்தார்.
இதன் காரணமாக 1965 ம் ஆண்டு மூலம் தனது 30 ம் வயதில் *இந்திய அருட்பணி இயக்கம் (IEM)* என்ற மிஷனெரி இயக்கத்தை சில நூறு ருபாய்கள் மூலமாக மிதிவண்டிகள் வாங்கி, சபை பாகுபாடற்ற நிலையில் அறியப்படாத மக்கள் இனக்கூட்டங்களுக்கு சென்று நற்செய்திபணி அறிவித்தார்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இந்திய அருட்பணி இயக்கத்தில் நான்கு கோட்பாடுகளை மைய்ப்படுத்தினார். 1). நற்செய்திபணி செய்தல், 2). திருச்சபைகளை நிறுவுதல், 3). மருத்துவ ஊழியங்கள் மற்றும் 4). வேதபாட வகுப்புகள் நடத்துதல் என்ற தரிசனத்தோடு இந்தியா முழுவதும் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார்கள்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழ்நாட்டு திருச்சபைகளில் மிஷனெர்களின் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் திருச்சபையில் எழுப்புதல் ஏற்பட்டதால், அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்திபணிக்கு அற்பணித்தார்கள். அநேகர் நற்செய்திபணி செய்யும் மிஷனெரிகளின் தேவைக்காக தியாகத்தோடு கொடுக்க முன்வந்தார்கள். இதன் மூலமாக இந்திய அருட்பணி இயக்கம் பெரிய வளர்ச்சி கண்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்கள்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் நற்செய்திபணி சிறப்பாக செய்வதற்கு ஏற்ற வாழ்க்கை துணையாக எஸ்தர் என்ற பெண்மணியை 1971 ம் ஆண்டில் ஜூன் 14 ம் நாள் திருமணம் செய்துகொண்டார். மேலும் கணவன் மனைவியாக சேர்ந்து நற்செய்திபணி அறிவிப்பதிலும் சமுதாய சேவை செய்வதிலும் தங்களை அற்பணித்துக்கொண்டார்கள். அநேக ஏழை பிள்ளைகளை படிக்க வைக்க நிதி திரட்டி கல்வி கற்று கொடுக்க உதவி செய்தார்கள்.
இந்நிலையில் பெங்களூரில் 1972 ம் ஆண்டு மெத்தடிஸ்ட் திருச்சபையின் குருவானவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பெங்களூரில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *விடுமுறை வேதாகம பள்ளி (VBS)* ஏற்படுத்தினார்கள்.
எஸ்தர் அம்மையார் சிறுபிள்ளைகள் மத்தியில் விடுமுறை வேதாக பள்ளி மாணவர்களுக்கு சுவிசேஷ பணியை செய்வதற்கு ஏதுவாக சிறப்பு பாடதிட்டங்களை பெங்களூரில் உறுவாக்கினார்கள். இதனால் அநேக சிறுபிள்ளைகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு கல்வியிலும் ஒழுக்கத்திலும் வேத அறிவிலும் வளர்ந்தார்கள்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இரண்டாம் தலைமுறை நற்செய்திபணி செய்யும் தலைவர்களை உறுவாக்குவதற்காக கர்த்தர் கொடுத்த வேதஞானம் முழுவதையும் பயன்படுத்தி அநேகரை சிறந்த வேதாகம வல்லுனர்களையும், நற்செய்திபணியாளர்களையும் உறுவாக்கினார். இவர்களுக்கு வேதத்தை மிகவும் நேர்த்தியாக கற்றுக்கொடுத்து, ஜெபத்திலும், வேத ஞானத்திலும் அநேக நேரம் செலவு செய்து பல வேதாகம பாட புத்தகங்களையும், ஒலி பேழைகளையும் (CD) வெளியிட்டு தரமான திருச்சபை தலைவர்களை உருவாக்கினார்.
இந்நிலையில் 1975 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *இந்தி மிஷனெரி ஐக்கியம்(IMA)* தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உலகம் முழுவதும் சென்று இந்திய நற்செய்திபணிகளை குறித்து விளக்கினார். அப்படியே *இந்திய சுவிசேஷ ஐக்கியம் (EFI)* செயலாளராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் மிஷனெரி இயக்கங்ளிடையே ஐக்கியத்தை பலப்படுத்தி இந்தியாவில் சுவிசேஷம் பல இடங்களுக்கும் செல்வதற்கு சிறப்பாக செயல்பட்டார். மேலும் *உலக சுவிசேஷ ஐக்கியம் (WEF)* தலைமத்துவத்திற்கும் பொறுப்பாய் நியமிக்கப்பட்டு நற்செய்திபணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை பயன்படுத்தினார். இப்படியாக இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக 39 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய எஸ்தர் தியோடர் அம்மையார் பலவீனத்தின் நிமித்தமாக 2009 ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். இவர்களுடைய இழப்பு தியோடர் வில்லியம்ஸ் அவர்களை பலமாக தாக்கியது. இதனால் ஆறுமாத காலத்தில் 74 ம் வயதில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் நாள் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார்.
இந்திய மிஷனெரி இயக்கங்களில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் போல் முத்திரை பதித்தவர்கள் வெகுசிலரே. ஏனெனில் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிஷனெரிபணியை செய்வதற்கும் கடவுளால் இந்தியாவில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் ஆவார். இந்தியாவில் இவரைப்போல சிறந்த வேதபண்டிதர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கலப்படம் இல்லாத, ஆதாயத்திற்காக அல்லாத, வேத ஞானத்தை போதித்தார்.
தியோடர் வில்லியம்ஸ் அவர்களை *இந்தியாவின் பில்லிகிரகாம்* என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய நற்செய்திபணியினாலும் வேத ஞானத்தினாலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை உயிர்மீட்சி அடைய செய்தார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சிறந்த மிஷனெரி இயக்க தலைவர் என்று அறியப்பட்டார். எல்லோராலும் செல்லமாக *அண்ணாச்சி* என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
தியோடர் வில்லியம்ஸ் என்ற ஒரு மிஷனெரி மூலம் ஆரம்பிக்கப்பட்ட *இந்திய அருட்பணி இயக்கம்* இன்று நேப்பாளம், பூட்டான் உட்பட இந்தியாவில் 960 மிஷனெரிகள் நற்செய்திபணி செய்துகொண்டு 116 இன மக்களுக்கு நற்செய்திபணி அறிவித்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் ஆத்தும ஆதாயம் செய்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜியத்தை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்திய அருட்பணி இயக்கத்தின் மூலம் 19 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் 34 மொழிகளில் நற்செய்திபணி அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல மருத்துவ மனைகள் அமைத்து சமுதாய சேவைகள் செய்துகொண்டு இருக்கின்றார்கள். 24 விடுதிகள் அமைத்து ஆதிவாசி பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இவைகளுக்கு காரணம் ஒரு மணிதரின் ஆழமான அற்பணிப்பே.
இன்றைக்கு தியோடர் வில்லியம்ஸ் போன்ற அநேக நற்செய்தி பணியாளர்கள் நம்முடைய திருச்சபையில் இருந்து எழும்ப வேண்டும், அதற்காக ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளுக்கு நற்செய்திபணியின் தரிசனத்தையும் கொடுப்போம். ஆமென்.
✝. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
No comments:
Post a Comment