Thursday, 21 May 2020

சிறுகதை151-161

151     மூத்தோர் சொல்லைக்கேள்..*


 புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னதுரை ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னதுரைக்கு புல்லாங்குழல்  வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான். அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருந்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

 வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது   அதைப் பார்த்த அந்த ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல் போனது. ... “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது. ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க,  இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும்  என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று,  தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.

 “ஓ...! அப்படியா!  நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார் களே?” என்று ஆச்சாியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெல்லாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய். ஓ அப்படியா “சரி அங்கேயேஇருங்கள். 

நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் சென்றது, 

ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென  அதன் காலை பிடித்து கொண்டது. ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னதுரையும்ஆடு போடுகிற சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினான். ஓநாய்  அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து  விரட்டிவிட்டார்கள்.

  அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல்  இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னதுரைக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி


 என்_அன்புக்குரியவர்ளே..* பெரியோர் சொல்லையும், பெற்றோர் சொல்லையும் கேட்க வேண்டும். கேட்காவிட்டால்  உயிருக்கு கூட ஆபத்தாகி விடும்.

 பைபிள் சொல்கிறது.. பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள். இது கர்த்தருக்கப் பிரியமானது  - கொலோ.  3:20

 ஓநாயை போன்ற மனிதர்கள் கள்ளதீர்க்கத் தரிசிகள், உங்களுக்குள்ளே வருவார்கள்.என்று அப்போஸ்தல நடபடிக ளில் பவுல் சொல்கிறார்.  நான் போனபின்பு மந்தையைத் தப்ப விடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக் குள்ளயே வருவார்கள்   - அப்.20:29 இயேசு சொன்னார், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கை யாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். - மத்  7:15 

எனவே உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை பாதுகாத்துக்கொள்ள கிறிஸ்துவுக்குள் ளேயும், நல்ல ஆவிக்குரிய சபையிலேயும் ஐக்கியமாயிருங்கள். கூலிக்கு வேலை செய்கிறவனைப் போல பணத்துக்காக ஊழியம் செய்கிறவா்கள்.  ஆடுகளை பாராமரிக்கவோ,  போஷிக்கவோ மாட்டார்கள். குறிப்பாக   பட்சிக்கிற ஓநாய்களைப் போலிருக்கிற மோசமான மனுஷர்களின் உபதேசத்திற்கு  விலக்கி   பாதுகாக்கமாட்டார்கள்.

 எனவே  உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆவியானவரின்  நடத்துதலின்படியும் நல்ல போதகரின் ஐக்கியத்திற்குள்ளும் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!*


 152                    நிம்மதி எங்கே ? 

நிம்மதி இழந்து தவித்த ஓர் ஆலை முதலாளி கடற்கரையின் பக்கம் நின்றுகொண்டிருந்தார் . சிகரெட் அவர் உதடுகளையும் , விரல்களையும் சுட்டுக்கொண்டிருந்தது . அங்கு நின்ற ஒரு படகில் பெரிய பெரிய மீன்கள் நிறையத் துடித்துக் கொண்டிருந்தன . அப்பொழுது படகுக்குரிய மீனவத்தொழிலாளி வந்தார் . ஆலைப் பெருமுதலாளிக்கும் , மீனவச் சிறு தொழிலாளிக்கும் உரையாடல் நடந்தது . முதலாளி : இந்த மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் ?

 தொழிலாளி : கொஞ்சநேரம்தான் .

 முதலாளி : கூடக் கொஞ்சநேரம் செலவிட்டிருந்தால் இன்னும் நிறைய மீன்கள் கிடைத்திருக்குமே .

 தொழிலாளி : அன்றன்றுள்ள என் குடும்பப் பராமரிப்பிற்குக் கிடைத்தால் அதுவே போதும் .

 முதலாளி : அப்படியானால் மீதமுள்ள நேரங்களில் என்ன செய்வீர்கள் ?

 தொழிலாளி : பிள்ளைகளோடு விளையாடுவேன் , பாடம் படிக்க வைப்பேன் . மனைவியோடு அமர்ந்து நாளைய காரியங்களை சிந்திப்போம் . சிறிது நேரம் ஓய்வு எடுப்பேன் . மாலை நேரங்களில் தெருவைச் சுற்றி உலாவருவேன் . சூடாக டீ அருந்துவேன் . ஆலயத்திற்குப்போய் வழிபடுவேன் . இரவு குடும்பமாகக் கூடிப்பாடி வேண்டுவோம் . குடும்ப வாழ்க்கை நிறைவும் , மனரம்மியமுமாய் செல்கிறது .

 முதலாளி : நீங்கள் மீன்பிடி தொழிலில் அதிக நேரம் செலவிட்டால் இரண்டு படகுகள் வாங்கலாம் . மேலும் மேலும் படகுகளை வாங்கிக்கொண்டே இருக்கலாம் . நேரடியாக மீன்களை விற்று பெரும் பணக்காரர் ஆகலாம் . மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டலாம் . பிள்ளைகளைப் படிக்க வைக்க சென்னை சென்று செட்டில் ஆகலாம் . அங்கு உங்கள் வாணிபம் வான் உயரக் கொடி கட்டிப்பறக்கும் . 

தொழிலாளி : அந்த நிலைக்குவர எவ்வளவு காலம் பிடிக்கும் ? முதலாளி : பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் .

 தொழிலாளி : அடேங்கப்பா . . . .

 முதலாளி : உங்கள் படகுகளை விற்று நீங்கள் கோடீஸ்பிரபு ஆகிவிடலாம் .

 தொழிலாளி : நாங்கள் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறோம் . எனக்குக் கிடைக்கும் கோடாகோடியைக் கொடுத்து நிம்மதியை விலைக்கு வாங்க முடியுமா ? முதலாளி கண்விழி பிதுங்க லொக் , லொக் என்று துரத்தியவாறு வந்தவழியே போய்விட்டார் . 


153                       நாயின் நேயம் 

போலந்து நாட்டுச் சிறுமி ஜுலி கொள்ளை அழகு , அன்று அதிகமாகப் பனி கொட்டிக்கொண்டிருந்தது . முகம் தெரியாத மூடுபனி .

 வீட்டுத் தோட்டத்தில் குட்டி நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் , மாலை இருட்டில் திடீரென்று சிறுமியைக் காணவில்லை . பெற்றோர் துடித்தனர் . அந்தத் தெரு முழுக்க அழுதது . ஊரே சிறுமியைத் தேடியது . கிடைக்கவில்லை . இறுதியாகத் தீயணைக்கும் படையினர் ஒரு காட்டுப் புதருக்குள் கண்டுபிடித்தனர் . ஆனால் அங்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது .

 அவள் வீட்டுப் பெரியநாய் சிறுமியை அரவணைத்தபடி இருந்தது . தீயணைக்கும் படையினர் திடுக்கிட்டனர் . சிறுமி இறந்து கிடப்பதாகவே கருதினர் . ஆனால் நாயின் பலத்த அரவணைப்பிலிருந்து குழந்தையை உருவி எடுத்தனர் . சிறுமியின் உடலில் உயிர் இருந்தது கண்டு சிலிர்த்தனர் . ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றார்கள் . 

அதிகாலை இருட்டோடே கொல்லும் குளிர்வாட்டிக்கொண்டிருந்தது . சிறுகுழந்தை பனிப்பொழிவில் இறந்துவிடாதவாறு பெரிய நாய் சிறுமிக்குக் கதகதப்பைக் கொடுத்து பச்சிளம் பூவைப் பாதுகாத்துள்ளது .

 மனநிலை பாதித்த ஒருவன் சிறுமியை தூக்கிச்சென்று , காட்டில் கொண்டு போட்டுள்ளான் . நாய் தேடிச்சென்று சிறுமியை மீட்டது . இது நிகழ்ந்தது . 3 . 3 . 2013

 154           கல்லறை பேசுகிறது 

ஜான் ஹெடி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் . கொடிய அரக்கர்கள் வாழும் ஹைப்ரட்டீஸ் தீவுக்கூட்டத்தில் குடும்பமாகச் சென்று ஊழியம் செய்தார்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்கள் மத்தியில் முழு அர்ப்பணிப்போடு தொண்டாற்றினர் . .

 மனுஷனாக வாழக் கற்றுக்கொடுப்பதே பெரும் ஊழியமாயிருந்தது . கொடிய வியாதி காரணமாக தாம் நேசித்த அன்புக்குழந்தை இறந்தது . தம் கரங்களாலே குழி தோண்டி அடக்கம் செய்தார் . மனைவி வியாதிப்பட்டு சில நாட்களில் மரித்தாள் . கதவைப் பூட்டிக்கொண்டு கதறி அழுதார் . - " ஹெடி , நீ என்னை நேசிக்கிறாயா ? ” என்று மூன்று முறை கடவுள் கேட்டார் . " ஆம் , ஆண்டவரே , நான் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது பேதுரு நினைவிற்கு வந்தார் .

 தன் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் எண்ணம் வந்துவிடக்கூடாது என்று கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை சுக்கு நூறாக உடைத்தெரிந்தார் . 24 ஆண்டுகள் அந்தத் தீவில் ஊழியம் செய்தார் . 14 . 12 . 1872ல் 57 வயதில் மரித்தார் . மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர் . 

" 1848ஆம் ஆண்டு ஹெடி இங்கு வரும்போது ஒரு கிறிஸ்தவர்கூட இங்கு இல்லை . 1872ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது இங்கு கிறிஸ்துவை அறியாதவர் ஒருவர் கூட இல்லை ” என்று அவருடைய கல்லறை வாசகக் கல்வெட்டு கூறுகிறது .

 அர்ப்பணிப்பு என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டிய அவரது கல்லறை இன்றும் பேசுகிறது . 


155         எங்கள் நிருபம் நீங்கள்தானே !

 தமிழ்நாட்டிற்குக் குறிப்பாகப் பரந்த நெல்லைமாவட்டத்திற்கு வந்த ஆரம்பகால மேல்நாட்டு மிஷனெரிகள் இம்மக்களின் கல்விக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தங்களையே பரித்தியாகம் செய்தார்கள் . அன்னை தெரசாவின் முன்னோடியான கார்மைக்கேல் அம்மா , கால்டு வெல் பேராயர் போன்றோரின் உடல்கள் இந்த மண்ணில் புதைக்கப் பட்டுள்ளன .

 மருத்துவ மிஷனெரி ஒருவர் மிகவும் சோர்ந்து தம் பணியை முடித்துத் தங்குமிடம் சென்றுகொண்டிருந்தார் . வீட்டுப்பக்கம் வரும்போது சிறுவன் ஒருவன் மூச்சு இரைக்க ஓடி வந்தான் . “

 துரைகளே , எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஓர் அம்மா மிகமோசமான நிலையில் இருக்கிறார்கள் . நீங்கள் உடனே வரவேண்டும் ” என்று நெஞ்சுருகச் சொன்னான் . மிகவும் களைத்துப் போயிருந்த மிஷனெரி சிறுவனிடம் , “ தம்பி , இந்த வேதாகமத்தைக் கொண்டுபோய இதை வாசித்து ஜெபியுங்கள் , நான் சீக்கிரமாக வருகிறேன் ” என்றார் . உடனே சிறுவன் , “ துரைகளே , அவர்களில் யாருக்கும் படிக்கத் தெரியாது அவர்கள் படித்த வேதப்புத்தகம் நீங்கள்தான் ” என்றான் . மிஷனெரி அதிர்ந்துபோனார் . சோர்வை தூரத்தள்ளிவிட்டு அங்கு சென்றார் ." எங்கள் நிருபம் நீங்கள்தானே ? ” ( 2 கொரி . 3 : 2 ) .


 156         இரண்டு வேதாகமங்கள்

 அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா இரண்டு வேதாகமங்கள் மீது கைவைத்து பதவிப் பிரமாணம் எடுத்தார் . ஒன்று : ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய வேதாகமம் . இரண்டு : மார்ட்டின் லூதர்கிங் உபயோகித்த வேதாகமம் . இருவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் வளர்ந்த பிரபலங்கள் . இனப்பாகு பாட்டிற்கு எதிர்த்து நின்ற புரட்சியாளர்கள் . லிங்கன் 1863 ஜுன் முதலாம்தேதி அடிமைத்த ன விடுதலையின் பிரகடனத்தின்போது இப்படிப் பேசினார் . " ஒருவர்மீதுகூட எனக்குக் கசப்பில்லை . அனைவர்மீதும் அன்பு கூருகிறேன் . " மார்ட்டின் லூதர்களில் 1963 ஆகஸ்ட் 26ஆம் நாள் ஆபிரகாம் லிங்கனின் நினைவுச் சின்னத்தில் இரண்டு இலட்சம் மக்கள் கூடியிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க கூட்டத்தில் இப்படிப் பேசினார் : “ இனப்பாகுபாடுகள் காரணமாக மக்கள் புறக்கணிக்கப்படுவது தேவனுடைய சித்தத்திற்கு மாறானது . அவர்களின் அடிச்சுவட்டை ஒபாமா பின்பற்ற விரும்பினார் . கிறிஸ்தவம் சமூகப் புரட்சியையும் மானுட மேன்மையையும் நாடுகிறது . ஆனால் நடைமுறைக் கிறிஸ்தவம் முதலாளிழ்வச்சேற்றில் வீழ்ந்து கிடக்கிறது . " நீயோ எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி ” ( தீத்து 1 : 12 ) . 

157      இறைவன் பாதுகாத்த இலக்கிய ஏடுகள்

 பாகியான் சீன யாத்திரிகன் . இந்தியாவை ஆய்வு நோக்கில் சுற்றினார் . கங்கையாற்றின் அக்கரை சென்றபோது பழமையான சில ஓலைச் சுவடிகள் கிடைத்தன . பாகியான் அவைகளைப் பத்திரமாகப் பாதுகாத்து படகில் பயணம் செய்தார் . அவரோடு இருவர் துணைக்குச் சென்றனர் . நடு ஆற்றில் படகுத் தடுமாறியது . புயற்காற்று சீறிவீசியது . பாகியானுடன் வந்த கல்வி அறிவு இல்லாத இருவரும் ஆற்றினுள் வீழ்ந்து மாய்ந்தனர் . ஓலைச்சுவடிகளும் , பாகியானும் , படகோட்டியும் பத்திரமாகக் கரை சேர்ந்தனர் . இன்றுவரை அந்த ஓலைச் சுவடிகள் சீனாவில் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன . அது புத்தகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது . அந்தச் சுவடிகளிலிருந்து வாழ்க்கை முறைகள் , நாகரீகங்கள் , அறிவியல் சிந்தனைகள் , கோட்பாடுகள் கிடைக்கப்பெற்றன . இறைவனே பாதுகாத்துத் தந்த இலக்கியக் காலச்சுவடுகளாக இன்றும் இலங்குகின்றன . " அவரைப்பாடி , அவரைக் கீர்த்தனம்பண்ணி , அவருடைய அதிசயங்களை யெல்லாம் தியானித்துப்பேசுங்கள் ” ( 1 நாளா . 16 : 9 ) . 

158          நாத்திகர் நாணிப்போனார் 

நாத்திகர் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது . அழுத்தமான கிறிஸ்தவர் ஒருவர் உள்ளே நுழைந்தார் . “ என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் ' என்ற ஆர்வத்தில் சென்றிருந்தார் . மேசையின்மீது பல நூற்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன . ஒருவர் தாம் சமீபத்தில் வெளியிட்ட நாத்திக நூலின் பெருமையைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது , அடுக்கி இருந்த நூற்களில் பரிசுத்த வேதாகமமும் இருந்தது . இவரைப் பார்த்தவுடன் அங்கிருந்த ஒருவர் வேதப்புத்தகத்தை மட்டுப்படுத்து வதற்காக அங்கிருந்த அனைத்து நூற்களுக்கும் அடியில் வைத்தார் . வைத்ததோடல்லாமல் கிறிஸ்தவ நண்பரை ஏளனமாகப் பார்த்தார் . கிறிஸ்தவர் அங்குக் கூடியிருந்த அனைவரையும் நோக்கி , “ எல்லாப் புத்தகங்களுக்கும் ஆதாரம் , அடிப்படை வேதப்புத்தகமே என்று நண்பர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார் ” என்றார் . ஆத்திரம் கொண்ட நாத்திகர் , பைபிளை அடியிலிருந்து உருவி எடுத்தார் . எல்லாப் புத்தகங்களுக்கும் மேலாக வைத்தார் . உடனே கிறிஸ்தவ ஊழியர் ஆம் , அனைத்துப் புத்தகங்களையும்விட வேதமே உயர்ந்தது என்றார் . நாத்திகர் நாணிப் போனார் . “ இந்தப் பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும் , கேட்கிறவர்களும் இதில் எழுதியிருக்கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்களை ( வெளி . 1 : 3 ) . 

159            உண்மை எங்கே ?

 மாதத்தின் முதல் ஞாயிறு ஆராதனை . கிறிஸ்து ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது . பிரசங்க வேளை வந்தது . அனைவரும் இறுக்கி , நெருக்கி புளிபோல் அடைத்து அமர்ந்தனர் . புதிதாக ஒரு வெங்கலக்குரல் பிரசங்க பீடத்திலிருந்து கணீரென்று ஒலித்தது . “ உண்மையாயிருத்தல் " பற்றிய போதனை நம் சபைகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது . உண்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை ஏற்பட்டு விட்டது . “ லஞ்சம் கொடுக்காதே . வாங்காதே . குறுக்கு வழியில் சம்பாதிக்க முயலாதே என்ற எச்சரிப்புகள் நமது ஆலயப் புல்பிட்டில் ஓங்கி ஒலிக்க வில்லை . உண்மையாய் நாம் வாழ ஆசைப்படுகிறோம் என்ற மௌன - நீர்த்துப் போன - செயலற்ற பிரசங்கமே குரல் கம்மி வலுவிழந்து ஒலிக்கிறது . காணிக்கைக் கணக்குகளில் உண்மை சுத்தமாய் குறைந்துவிட்டது . போலி வவுச்சர்கள் . போலி பில்கள் மூலம் கணக்குகள் சரிக்கட்டப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது . வெகுமதிகளுக்காக பதவிகளுக்காக மந்திரிகள் பின்னே ஓடும் கேயாசிகள் பெருகிவிட்டனர் . எருசலேமுக்கும் , சமாரியாவுக்கும் விரோதமாய் பிரசங்கித்த மீகா தீர்க்கன் - அவர்களின் கள்ளத்தராசையும் , அளவு குறைந்த மரக்கா ையும் எச்சரிக்கிறார் . வியாபாரிகளே . பணம் படைத்தவர்களே உங்களுக்கு ஐயோ ! " பெருமழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது . மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் ஆலயத்தின் உள்ளிருந்து முறுமுறுப்புகள் எழுந்தன . உயர்மட்டக் குழுவினரிடமிருந்து உரத்த கண்டனக் குரல்கள் ஒலித்தன . லே பிரீச்சரை நம்ம கோயிலுக்குள்ள எவண்டா விட்டான் ? ஐயர் இருக்கும் போது இந்த ஓட்டப் பிரசங்கியார் எதுக்கு ? " மலேசியா மைனர் மோசே மீசையை முறுக்கினார் . பாதிரியார் தவிர யாரும் கோயிலில் பிரசங்கம் பண்ணக்கூடாதென்று எல் . சி . எப் . கமிட்டியில் தீர்மானம் போடணும் என்று கத்தினார் டாஸ்மாக் கடை நடத்தும் டேனியல் . ஆராதனை முடியுமுன் சலசலப்புகளும் , முறுமுறுப்புகளும் ஆங்காங்கு வெடித்தன . கண்டித்துப்பேச வேண்டியது தானே . இப்படிப் பிரசங்கிமார்தான் தேவை ' என்று ஓர் அப்பாவி உண்மைக் கிறிஸ்தவர் ஒடிந்த குரலில் சொன்னார் . வழிபாடு முடியவும் டாஸ்மாக் பிரமுகர் நேரே பிரசங்கியாரிடம் போய் , மார்க்கெட் மைதானத்தில் பேசவேண்டியதை கோயிலில் வந்து கூப்பாடு போடுகிறீரே . . . உமக்கு அறிவு இருக்கா ? ' என்று அடிக்க போகிறவர்போல் நெருங்கி மோதினார் . ஆளுக்கொரு பக்கம் கூப்பாடு போட்டார்கள் . உண்மை உடைந்து நொறுங்குவது போலிருந்தது . ஆயினும் உண்மையின் பக்கம் அநேகர் செவி சாய்த்தனர் . தங்கள் பொய்மைகளுக்காகக் குமுறினர் . " மரணபரியந்தம் உண்மையாயிரு . '" 

160                  பாலு ஏம்மா இனிக்குது ? 

என் மனைவியின் ஆசிரியப்பணி காரணமாக நாங்கள் சிலகாலம் ஆழ்வார் குறிச்சி என்ற ஊரில் தங்கி இருந்தோம் . அது மேற்கு நெல்லை அம்பை பக்கமுள்ள ஊர் .  

1960 ஆம் ஆண்டில் எங்கள் மூத்த இரு பெண் பிள்ளைகளுக்காக ஓர் உரைநடையிட்ட படிப்பினைக் கவிதை எழுதினேன் . “ பாலு ஏம்மா இனிக்குது ? சர்க்கரை போட்டேன் இனிக்குது . சர்க்கரை ஏம்மா இனிக்குது ? கரும்புச்சாறு ருசிக்குது . 
. . கரும்பு ஏம்மா ருசிக்குது ? கடவுள் செய்தார் ருசிக்குது . கடவுள் கூட ருசிப்பாரா ? ஆமா கண்ணே ருசிப்பார் . ' ' " கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் ” சங்கீதம் 34 : 8 .

 அப்பொழுது நான் நெல்லைத் திருமண்டல சிறுவர் மிஷனரியாக இருந்தமையால் நாடு முழுவதும் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன் . எங்கெல்லாம் செய்தி கொடுக்கச் சென்றேனோ அங்கெல்லாம் விதைத்தேன் . இன்று தமிழ் தேசம் முழுவதும் பரவி உள்ளது . மனதிற்கு மகிழ்ச்சியா யிருக்கிறது . இப்பாடலின் படைப்பாளியை மறந்துவிடாதிருக்கப் திவு செய்கிறேன் ) . 

161                 மகிழ்ச்சியான_குடும்பம்".... 

கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான் இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க..... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்... என்று இழுத்தாள்... ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. ஏதும் தவறு பண்ணிட்டிங்களா .. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். என்னங்க இது .. படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான். அவள் படிக்க தொடங்கினாள் ... அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது... அன்புள்ள மகனுக்கு, கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவா இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத. உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு. அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ... நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு... கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன். ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்.... நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா? அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான். உங்கப்பா வாழ்ற காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம் என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன். இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது... உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு. இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உன்கிட்ட சொல்றேன். நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா... காத்திட்டு இருக்காங்க... உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா .. பாத்தியா வாழ்க்கைய ? நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிக்கோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்... ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா? செய்வேனு நம்புறேன். ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற... கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... காபி குடித்த பின்னும் இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்..... .நான் தான்மா.... ஏன் சும்மா பேசக்கூடாதா? ... என்ன செய்ற...அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை. #பிரியமானவர்களே, நீங்கள் தேவனுக்கு அடுத்ததாக உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். மனைவி பிள்ளைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.  உங்கள் புருஷனோடு உட்காந்து மனம்விட்டு பேசுங்கள்.  உங்கள் நண்பர்களை விட உங்களை பெற்ற தாய் தகப்பனிடத்தில் பேசுங்கள் குடும்பத்தில் யாரையும்  ஒதுக்கி வைக்காதீர்கள்.  நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம். என்பதை புாிந்து கொள்ளுங்கள். "மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்". -(நீதிமொழிகள் 18 :22) "உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு". -(நீதிமொழிகள் 5:18) "உன் இளவயதின் மனைவி. உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாயிருக்கிறாள். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு, உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே!! நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்: ஞானமுள்ள பிள்ளையைபப் பெற்றவன் அவனால் மகிழ்வான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்: உன்னைப்பெற்றவள் மகிழ்வாள்". -(நீதிமொழிகள் 23:22-25) 

காலம் கடந்தல்ல. இப்போதே  மகிழ்ச்சியான குடும்பமாயிருங்கள்.!!. 

No comments:

Post a Comment