Friday, 22 May 2020

சிறுகதை 141-150



141                       முதலில் . . .

 . ஹைடி வித்தியாசமான ஒரு பெண் . வேறுபாடான சிந்தனைகள் வேர்விட்டன . மண்டைகனம் கொஞ்சம் மிகுதியானது . சராசரியான அவள் சமீப நாட்களில் ஆடம்பரப்பிரியை ஆக மாறினாள் . அவளின் சொகுசுக்கார் ஜெர்மன் நாட்டிலேயே முதல் தரமானது என்று எண்ணினாள் . அது அவளைப் பெருமையின் ஏணியின் ஏற்றியது . சிலுவையைக் குறித்தே அல்லாமல் வேறொன்றையும் குறித்துப் பெருமைபாராட்ட மாட்டேன் ' என்ற பவுல் அடியாரின் விவிலிய வாக்கு அவள் சிந்தையில் எழுந்தபோது சிரித்தாள் . என் உல்லாசக் காரை அல்லாமல் வேறொன்றையும் குறித்துப் பெருமை பாராட்டமாட்டேன் ' என்று சொல்லி முறுவலிந்தாள் . அவளின் உல்லாசக் காரில் ஏ . சி , டி . வி , கேமரா , படுக்கை , பாத்ரூம் முதலிய வசதிகளோடு படிக்க சிறு நூல் நிலையமும் இருந்தது . அவள் தன் காரையே ஆராதித்தாள் . பாராட்டினாள் . பெருமையாகப் பேசினாள் . தினம் மாலை அணிவிப்பாள் . கணவர் ஒருநாள் அன்புடன் கடிந்துகொண்டார் . ' ஹைடி , முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் , அவருடைய நீதியையும் தேடு , பின்பு உனக்கு இதைவிட இன்னும் மேலான வசதிகள் , வாய்ப்புகள் கிட்டும் ' என்றார் . அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள் ; ' எனக்கு முதலில் என் படகுக்கார் , படாடோபக்கார் , சொகுசுக்கார் , சொந்த அழகுக்கார்தான் முக்கியம் , மற்றெல்லாம் இரண்டாவதுதான் ' என்று சொல்லி தன் கையாலே காரைக் கழுவித் துடைத்து பளிச் ' சென்று ஒளிரச் செய்தாள் . கணவர் மீண்டும் சொன்னார் : " இன்று மாலை நமது ஆலய வளாகத்தில் ஒரு பிரபலமான ஆன்மீக ஆலோசகர் கூட்டம் உள்ளது . அவர் ஆவிக்குரிய சத்தியங்களை ஆழமாகச் சொல்வதில் சமர்த்தர் . அகில உலக நற்செய்தியாளர் . உன் உல்லாசக்காரில் முதலில் அங்குபோய் வருவோம் ” என்றார் .அதற்கு அவள் , “ நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன் . ' கருப்புக் காட்டழகி எனப்படும் சுற்றுலா தலத்திற்கு முதலில் போய் வருகிறேன் . மாலையில் அந்த மலைப்பிரதேச அழகு கொள்ளைகொள்ளும் . ஆறுமணிக்கு மேல் ஆயத்தமாயிருங்கள் . உங்கள் கிழட்டுக்காரில் கூட்டத்திற்குப் போகலாம் ' ' என்றாள் . பதிலுக்குக் கணவன் " முதலில் தேவனுடைய . . . . முதலில் . . . முதலில் . . . என்று முணு முணுத்தாரே தவிர அதற்குமேல் ஒன்றும் பேச வாய்வா வில்லை . உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வனப்பு மிகுந்த மலையடிவாரத்தில் காரை பார்க்கிங் செய்துவிட்டு நகர்ந்தாள் . டமார் என்று ஒரு சத்தம் கேட்டது . மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த ஒரு டன் எடையுள்ள ஒரு பாராங்கல் கார்மீது விழுந்தது . கார் சப்பி அப்பளமானது . ஹைட மி அதிர்ந்தாள் . ஆ . . . என் அழகுக்கார் . . . என்று கூப்பாடு போட்டாள் . அங்கு ஓடிவந்த அனைவரும் , அரைநிமிடம்தான் . உங்கள் தலை தப்பியது . அரை நிமிடம் தாமதித்திருப்பீர்களானால் உங்கள் உயிர் போயிருக்கும் . முதலில் கடவுளுக்கு நன்றி கூறுங்கள் . இதைவிட அழகுக்கார் வாங்கலாம் என்று ஆறுதல் கூறினார்கள் . கல் சிதறி விழுந்ததில் அடுத்து நின்ற கார் டிரைவருக்குப் பலத்த காயம் . ஹைடி நிம்மதிப் பெருமூச்சுடன் கடவுளை நினைத்தாள் . " முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் ; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ” ( மத் . 6 : 33 ) . - - -

 142                          இடம் பிடிக்க . .

 . . நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த நூதனமனிதர் . 1969 ஜுலை 24ஆம் தேதி அந்தப் பேறு அவருக்குக் கிடைத்தது . அவர் பூமியில் கால் வைத்ததும் பத்திரிகையாளர் அவரைச் சூழ்ந்து கேள்விகள் கேட்டனர் . அவரது பதிலில் :  அருளும் , பொருளும் இருப்பதினால் இங்கு குறிப்பிடுகிறேன் . நிலவில் கால் வைத்தவுடன் முதலில் என்ன உணர்ந்தீர்கள் ? 

முதலில் இறைவனின் படைப்பை எண்ணிவியந்தேன் . 

இரண்டாவதாக இப்படி சாதனைபுரிய வாய்ப்பு அளித்த நாகா விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறினேன் . 

மூன்றாவதாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள நிலவில் இடம் பிடித்த என்னால் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஏழை எளிய மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க முடியாது போயிற்றே என்று வருந்தினேன் .

 ' நமக்கு அவ்வித உணர்வு உண்டா ? " நன்மையை செய்யப்படியுங்கள் , நியாயத்தைத் தேடுங்கள் .  ” ( ஏசா . 1 : 17 ) . 


143               வர்க்கப்போராளி 

பாலியத்தில் நான் மிகப் பயந்தாளி வாலிபத்தில் பயங்கர வர்க்கப்போராளி நூற்றுக்கு மேலான நூற்களின் படைப்பாளி நுவலரும் இறை இலக்கியப் பேச்சாளி அடிக்கடி சென்னை - நெல்லை குடியிருப்பு அதிகப்படிப்பும் எழுத்துமே முழு இணைப்பு வேளைக்கு உணவு தரும் பிள்ளைகளின் பங்களிப்பு வேண்டியதை அருளும் இறைவனின் கண்காணிப்பு நான் ஒரு இனிப்பு நோயாளி எண்பத்தெட்டு வயது முதுமையின் வயசாளி அனுபவக் கதைகள் கூறும் எழுத்தாளி அயராது எழுதும் கடின உழைப்பாளி பண்ணைக் கொத்தடிமையைச் சாடிய பகையாளி பள்ளிப்படிப்பைத் தடுத்த முதலாளிக்கு எதிராளி நெல்லைக் கம்யூனிஸ்ட் சதிவழக்கில் குற்றவாளி நெடுஞ்சிறையில் மூன்றாண்டுகள் வாடிய சிறைப்புள்ளி நீதிமன்றத்தில் விடுதலையான சுத்தவாளி நலம் நாடாமல் எழுதிக் குவித்த ( இலக்கியக் ) கொடையாளி சமூகக் கதைகள் , நாவல்கள் தந்த மொழித் திறனாளி கிறிஸ்தவக் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டும் புதுமைப்பேர்வளி .


 144                  . தப்பினேன் ! 

சென்னை வேளச்சேரி மகன் கவிஞர் தியாரூ வீட்டில் தங்கி இருந்தேன் . அன்று காமாட்சி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் செல்ல வேண்டியிருந்தது . முந்தின நாள் எடுத்த இரத்தப்பரிசோதனையில் ' சுகர் ' அதிகமாக ஏறி இருந்தது . பிள்ளைகள் மிகவும் பயந்தார்கள் . ' யூரின் , ப்ளட் , கொலஸ்ட்ரால் , பல்ஸ் , பி . பி . முதலிய அனைத்து சோதனை களும் செய்ய இரத்தம் , சிறுநீர் எடுத்துச் சென்றார்கள் . அனைத்து ரிசல்ட்களும் இன்று காலை பத்து மணிக்கு மருத்துவ மனையில் கிடைக்கும் . அதன்பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை தொடரும் . அதிகாலையில் எழுந்து பாத்ரூம் சென்றபோது இரு வட்டப்பாச்சான்கள் மிதிபட்டு அரைகுறை உயிரோடு ஊசலாடின . அதனை வத்தல் பாச்சான் என்றும் சொல்வோம் . நான் திரும்பி வந்த ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாச்சானை எறும்புகள் சூழ்ந்துகொண்டன . வட்டப்பாச்சான் ஆடாமல் அசையாமல் அமைதலாகக் கிடந்தது . அவ்வளவுதான் . எறும்புப்படை அதனை அமுக்கிவிட்டது . தேரோட்டம்போல பாச்சானை எறும்புகள் இழுத்துச் சென்றன . அடுத்த பாச்சான் தப்பித்துக்கொண்டது . எறும்புகள் நெருங்கும்போது துள்ளியது , சுதாரித்தது . உயிர் தப்பியது . மணி பத்தாயிற்று . மருத்துமனைக்கு விரைந்தோம் . மருத்துவர் கூட்டம் சூழ்ந்தது . சம்பந்தப்பட்ட பெரிய டாக்டர் வந்தார் . ரிப்போர்ட்களை கையில் வைத்துக்கொண்டு , “ ஜேக்கப் ஸார் , எல்லாம் நார்மல் . சுகர் மட்டும் . கூடி இருக்கிறது . அதுவும் நார்மலுக்கு வந்தபிறகுதான் அடுத்த சிகிச்சையை ஆரம்பிக்கவேண்டும் . அடுத்த வாரமும் சுகர் டெஸ்ட் பண்ணிட்டு வாங்க " என்றார் . தப்பித்தோம் , பிழைத்தோம் என்று மகிழ்ச்சியில் வீடுவந்து சேர்ந்தோம் . எறும்புப் படையிடமிருந்து தப்பித்த வத்தல் பாச்சான் மெத்த மகிழ்வில் உலா வந்தது . நானும் டாக்டரிமிருந்து தப்பித்துக்கொண்ட குதூகலத்தில் பேரானந்தம் கொண்டேன் . அன்றைய நாள்காட்டி 7 . 7 . 2012 என்று சொல்லி நகைத்தது .   

145                ஆராதிக்க ஒருவர் . . 

. இரக்ககுணம் கொண்ட ஓர் ஆங்கிலத்துரை இருந்தார் . அவர் மிகுந்த மனிதாபிமானி . பெரும் பணக்காரர் . அவருக்கு ஒரு நற்செயல் புரியவேண்டும் என்ற நல்லெண்ணம் உதித்தது . அது மனிதர்களை அடிமைச் சந்தையில் விற்று வாங்கும் மகா கொடியகாலம் . அந்த வெள்ளைக்கார பிரபு அடிமைச் சந்தைக்குச் சென்றார் . ஒரு நீக்ரோவை இருபது தங்க நாணயம் கொடுத்து விலைக்கு வாங்கினார் . அவனை தனக்கு அடிமையாக வைத்துக்கொள்ளாமல் விடுதலை செய்தார் .

 நீக்ரோ பயந்து நடுங்கி வியந்தான் . அவனுக்கு நல்ல தொகை கொடுத்து நிலமும் கொடுத்தார் . அதில் பயிர் செய்து சுதந்திரமாக வாழும்படி சொன்னார் . அவன் விவசாயம் செய்தான் . கடுமையாக உழைத்தான் . நல்ல லாபமும் கிடைத்தது . ஆனாலும் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை . 

சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை . ஆங்கில பிரபு அந்த அடிமைக்குத் திருமணம் செய்துவைத்தார் . ஆயினும் அவனது ஏக்கம் தீரவில்லை . “ எனக்கொரு எஜமானன் இல்லையா ? " என்று தனக்குள்ளே கேட்டு தூக்கம் வராமல் தவித்தான் . 

ஒருநாள் எழுந்தான் . தன்னை சுதந்திர புருஷனாக்கிய ஆங்கில மகானிடமே சென்றான் . " ஐயா , நான் உமக்கு அடிமை . ஆராதிக்க எனக்கு ஒரு எஜமானன் வேண்டும் " என்றான் .

 ஆங்கில பிரபுவிற்கு ஆச்சரியமாயிருந்தது . தம் குறைபாட்டை உணர்ந்தார் . தம் ரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்ட ஏசுவைக் காட்டினார் . அவரே நம் ஆராதனைக்குரிய பெரியார் , எல்லாருக்கும் எஜமான் என்று கற்றுக் கொடுத்தார் . 

இப்பொழுது நீக்ரோ குதூகலமாகக் குடும்ப வாழ்க்கை நடத்தினார் .


 146                அவள் என் எதிரி 

“ கமலம் பாட்டி கொடுத்துவைத்தவள் . நல்ல பிள்ளைகள் கணவர் இறந்த பிறகும் பாளை நகரிலுள்ள வீட்டிலேயே இருந்து கொண்டாள் . மக்கமார் எவ்வளவோ கட்டாயப்படுத்திக் கூப்பிட்டும் மறுத்துவிட்டாள் . பக்கத்து ஊர்களிலுள்ள மூன்று பிள்ளைகள் அடிக்கடி வந்து கவனித்துக் கொள்கிறார்கள் ” என்று ஊரே கமலம் பாட்டியை மெச்சிப்பேசியது . அப்பொழுது கமலம் வயது 75 கணவர் கன்னா வயது எண்பது . மூத்த மூன்று பிள்ளைகளும் பம்பாய் , பெங்களூர் , சென்னை பட்டணம் என்று தூர இடங்களில் இருந்தார்கள் . ஆறு மக்களும் குழந்தைப் பேறுடன் நல்ல வசதியாக வாழ்கிறார்கள் . கன்னா கலெக்டர் ஆபிசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் . கமலம் முனிசியல் ஆபிசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் . கன்னாவின் முதலாமாண்டு நினைவுநாள் வந்தது . பிள்ளைகள் யாவரும் குடும்பமாக வந்துவிட்டார்கள் . காலை பத்து மணிக்குக் கல்லறைக்குப்போய் அப்பாவின் நினைவாக ஆண்டவனை வழிபட்டு அஞ்சலித்து வருவர் . அப்பாவுக்குப் பிரியமான சிகரெட் , டைரி , பேனா , சில ஆங்கில நாவல்கள் யாவையும் கமலம்மாள் சேகரித்து வைத்திருந்தார் . இப்படிச் செய்வது கமலம்மாவுக்குப் பிரியமாயிருந்தது . அப்பாவுக்குப் பிரியமான திருநெல்வேலி அல்வா , மணியாச்சி முறுக்கு இவைகளை மூத்தமகன் வாங்கி வந்திருந்தான் . அப்பாவுக்குப் பிரியமான நண்பர்களுக்கெல்லாம் சொல்லிவிட்டீங்களாம்மா ? ' என்று மூத்தமகள் சரோ கேட்டாள் . ஒவ்வொன்றாகப் பட்டியலிட் போர்த்துக் கொண்டார்கள் . நாகர் கோவில் கல்லறைச் சிற்பிகள் - " கல்லறையைப் பளிங்குக் கற்களால் கட்டி முடித்துவிட்டார்கள் . அனைத்தும் முடிந்து இருகார்களில் யாவரும் வெளியே வந்தார்கள் . கல்லறையின் மெயின் கேட்டைத் தாண்டும்போது ஓர் அம்மா ரோஜாப்பூ மாலையுடன் காரிலிருந்து இறங்கினார் . அப்பாவின் இளம் வயதுக் காதலி கனகம்மாள் , ஓய்வுபெற்ற பேராசிரியர் . " நாம் அந்தம்மாவையும் மறந்திட்டோம் . ரோஜாப்பூ மாலை வாங்கவும் மறந்திட்டோமே " என்றான் இளைய மகள் . " மறக்கல்லடா , அவள் என் எதிரி ” என்றாள் அம்மா .



147                      புது ஷூ 

மதன் எட்டாம் வகுப்புப் படிக்கும் எழை மாணவன் , படிப்பில் படுகெட்டி , பிரகாசமான முகம் . அவன் சிரித்தால் உலகமே உள்ளடங்கும் . அவ்வளவு ஈர்ப்பு சக்தி அந்தச் சிரிப்புக்கு உண்டு . நெல்லை மாவட்டத்தில் ஓர் சிற்றூர் அவன் ஊர் .

 அவன் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது குற்றாலத்தில் நடந்த மாணவர் ஆவிக்குரிய கூட்டத்தில் கலந்து கொண்டான் . அங்குதான் அவன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது . உண்மையே பேசுவேன் . உயர்வையே பாடுவேன் , ஏசுவை நேசிப்பேன் , எப்போதும் சந்தோஷமாய் இருப்பேன். மக்களுக்கு உதவி செய்வேன் . மற்ற மாணவர்களோடு அன்பாயிருப்பேன் இப்படிச் சில நற்பண்புகளைப் பலமாகப் பதித்துக்கொண்டான் . நடைமுறை வாழ்க்கையிலும் செய்துகாட்டினான் .

 ஆசிரியர்களும் அவன் மீது அளவு கடந்த அன்பு காட்டினார்கள் . தெருவில் ஓர் அம்மா முகத்தைத் தொங்க விட்டவாறு நடந்துசெல்கிறார்கள் . " அம்மா ஏன் கவலைப்படுறீங்க . உங்க கவலைகளைக் கடவுள் மேல போடுங்க . அவர் பார்த்துக்குவார் என்று சொல்லி வாய்விட்டுச் சிரிப்பான் .

 அந்தச் சிரிப்பில் அந்தம்மாவின் கவலைகள் தூள் பறந்துவிடும் . அவன் யார் யாரைச் சந்திக்கிறானோ அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுவான் . பள்ளியில் அவனுக்கென்று ஒரு சிறு பட்டாளம் உண்டு . விந்தையான சிறுவனாயிருந்தான் .

 வேதவசனங்களைப் பாராயணமாகப் படித்து இடத்துக்கேற்ப பொருத்தமாகச் சொல்வான் . ஆனால் அவன் வீட்டில் வறுமை குடி கொண்டிருந்தது . வறுமையிலும் அவன் செம்மையாக இருப்பான் . சுத்தமாக உடுத்துவான் . யார் எந்த வேலையைச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் செய்துகொடுப்பான் . பிரதி பலனை எதிர்பார்க்க மாட்டான் . 

அதே தெருவில் வசிக்கும் போஸ்ட் மாஸ்டர் பொன்னுசாமி நல்ல வசதி படைத்தவர் . அவருக்கு மதன்மீது அதிக மதிப்பும் கரிசனையும் இருந்தது . " மதன் உண்மையிலேயே இரட்சிப்பின் அனுபவம் பெற்ற நல்ல பையன் . கிறிஸ்தவர்கள் அவனிடம் படிக்கவேண்டும் ” என்று பொன்னுசாமி மதன் பற்றிப் பேசுவார் .

 சில நாட்களாகவே மதன் நொண்டி நடப்பது போலிருந்தது . அவன்காலில் அணிந்திருந்த காலணிகளின் வார் பிய்ந்து பழுதுபட்டிருந்தது . எனவே கிந்திக் கிந்தி நடந்தான் . பொன்னுசாமி அவனைப் பார்த்துப் பரிகாசமாகக் கேட்டார் . " தம்பி ஏசப்பாதான் உனக்கு எல்லாம் என்கிறாய் . ஏன் கிழிந்த ஷீவைப் போட்டு நடக்கிறாய் . உன் ஏசப்பா உனக்கு வாங்கித்தரல்லியா ? " என்றார் .

 மதன் கடகட என்று சிரித்தான் . பின்பு உடனே சுடச்சுடப் பதில் சொன்னான் . " அங்கிள் ஏசப்பா யாருட்டயோ சொல்லிட்டார் . அந்த ஆள் மறந்திருக்கார் என்று கணீர் எனக் கூறினான் . 

மதனின் பதில் பொன்னுச்சாமியின் இதயத்தில் இடி விழுவது போன்றிருந்தது . " மதன் தம்பிக்கு புது ஷூ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பே தீர்மானித்தேன் . ஆனால் மறந்தே விட்டேன் " என்று நினைந்து உள்மனதில் குத்துண்டார் . "

 நன்மை செய்யவும் , தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் " என்ற வேதவசனம் அவர் முகத்தில் வந்து முட்டியது . உடனே மதனைக் கடைக்குக் கூட்டிச் சென்று புது ஷூ வாங்கிக் கொடுத்தார் .

 மதன் தம்பிக்கு ஒரு குறையுமில்லை . அவன் புதுமையான நற்செய்தியாளன் . அவன் சிரிப்பு மகா சக்தி வாய்ந்தது . " குழந்தைகளுடைய வாயினாலும் , பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் " ( மத் . 21 : 16 ) . 




148                இரகசியம் என்ன ?

 நல்லமுத்து ஓர் எளிய விவசாயி , ஐம்பது செண்டு பரப்புள்ள ஒரு சிறு துண்டு நிலம்தான் அவருக்கு இருந்தது . அதைக்கொண்டு அவரது மனைவியும் ஏழு பிள்ளைகளும் வாழ்ந்தார்கள் . அவர்கள் ஆண்டவனை ஆராதிக்கிற - மானுட மாண்புமிக்க ஒரு குடும்ப மாயிருந்தபடியால் அவர்கள் வீட்டில் எப்போதும் சமாதானமும் சந்தோஷமும் குடிகொண்டிருந்தது . இரவில் நடக்கும் குடும்ப ஜெபம் குதூகலமான ஓர் இன்ப வேளையா யிருந்தது . பாட்டும் படிப்பும் , வேதவாசிப்பும் வியாக்கியானமும் சேர்ந்து வீடு சிரிப்பும் களிப்புமாயிருக்கும் . இரவு குடும்ப ஜெபத்தில் பிள்ளைகள் வேதவசனங்களை மனப்படமாகச் சொல்வதும் , பெற்றோர் தங்கள் அன்றாட அனுபவங்களைச் சாட்சியாகக் கூறுவதும் மாட்சிமிகு காட்சியாகும் . 


அவர்களின் அண்டைவீடு செல்லப்பா குடும்பம் . வசதிகளும் , வாய்ப்புகளும் , நிலபுலன்களும் நிறைந்த செழிப்பான இல்லம் . கணவனும் , மனைவியும் , இரண்டு பிள்ளைகளும் உள்ள சிறிய குடும்பம் . ஆனால் அந்த வீட்டில் சண்டையும் சச்சரவும் , கூச்சலும் குழப்பமும் ஓயாது இருந்தன . சமாதானம் , சந்தோஷம் என்பது மருந்துக்கும் இல்லாதிருந்தது . 

ஒருநாள் பக்கத்துவீட்டு நல்லமுத்துவிடம் செல்லப்பா கேட்டார் . " உங்கள் வீட்டில் எல்லா நாளும் ஆனந்தமும் , ஆர்ப்பாட்டமும் அமர்க்களப் படுகிறது . குறைந்த வருவாயில் ஒரு பெரிய குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் . அந்த இரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ? ” என்றார் . 

அதற்கு அந்த ஏழை விவசாயி நல்லமுத்து சொன்னார் : " எனது நிலத்தின் விளைவு சொற்பம்தான் . ஆனால் அது பலத்த ஆசீர் வாதமாக உள்ளது . எப்படியெனில் என்னிடம் உள்ள சிறிய அகப்பையால் எனக்குக் கிடைக்கும் அனைத்தையும் அள்ளி ஆண்டவரது பாத்திரத்தில் போட்டு விடுகிறேன் . அவர் வைத்திருக்கும் அகப்பை பெரியது . அவர் அள்ளிப் போடும் போது எங்கள் வெறும் பாத்திரங்கள் நிரம்பி வழிகின்றன . செழிப்பிற்கும் களிப்பிற்கும் குறைவே இல்லை ” என்றார் .

 " கொடுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ” ( லூக் . 6 : 38 ) .


 





149              . நிந்திக்க வந்தவன் . . .


 . . மாஸ்கோவில் உள்ள ஒரு மாபெரும் கலையரங்கம் . அதில் சிலுவையில் இயேசு என்ற நாடகம் நடந்தது . அதில் அலெக்சாந்தர் என்ற மிகப் பிரசித்தி பெற்ற காமெடியன் நடித்தான் . அவன் தெய்வ நிந்தனை கூறி நடிப்பதில் வல்லவன் . கடவுளை தூஷிப்பதும் , நையாண்டி செய்வதும் அவருக்குக் கை வந்த கலை . அவன் ஒரு பச்சை நாத்திகன் .

 அத்தகைய ஒருவர் இயேசு படத்தில் எப்படி நடிப்பார் ? ' இப்படி ஒரு கேள்வி மக்களுக்குள் எழுந்தது . இயேசுவை பரிகசிக்கும் ஒரு பெருங்கூட்டம் நாடகம் பார்க்க அலை மோதியது . 

முதல் காட்சி ஆரம்பமானது . ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலம் , பலிபீடம் . மதுபானப்பாட்டில்கள் சிலுவைக்காட்சி போன்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . இரண்டாவது காட்சி ' பகல் காட்சிகளில் கிறிஸ்துவைக் கிண்டல் பண்ணி மக்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் அலெக்சாண்டர் எப்படி இந்தக் காட்சியில் நடிப்பார் ? ' ஜனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் .

 அலெக்சாண்டர் நீண்ட பாதிரி அங்கியுடன் பெரிய பைபிளை தூக்கிச் சுமந்தவாறு பௌயமாக நடந்து வந்தான் . பைபிளை எடுத்து இயேசுவின் மலைப்பிரசங்கத்திலிருந்து சில வசனங்களை வாசித்தான் : " சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் , பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் . " “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் . ” " நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் .  உங்கள் வெளிச்சம் மற்றவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது . 

" பின்பு அங்கியைக் கழற்றி எரிந்தான் . பலிபீடத்தின் சிலுவையைப் பரிகாசமாகப் பார்த்தான் . திடீரென்று திமிர்வாதம் பிடித்தவன் போல் கால்களை அசைக்க , ஆட்ட முடியாதவாறு நின்றான் . அந்த அதிகாரம் முழுவதையும் பக்தியோடு படித்து முடித்தான் . "

 பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல , நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள் . " நாத்திக ஆதரவாளர்கள் விழித்து நின்றார்கள் . வேதவாக்கியங்களைப் பிழை இல்லாமல் உயிர்ததும்ப அழகாக வாசிப்பதைப் பார்த்துத் திகைத்தார்கள் . அவரை மேடையிலிருந்து அரங்கினுள் வந்து விடும்படி அவசரப்படுத்தினார்கள் . ஏசினார்கள் . ஆனால் , அவன் , “ பிதாவே , உமது ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று சத்தமிட்டுக் கத்தினார் . சிலுவையில் மனம் மாறிய திருடனைப்போல உணர்ச்சியு ன் உரத்த குரலில் சொன்னான் . நிந்திக்க வந்தவன் சிந்திக்க ஆரம்பித்தான் . 

தூய ஆவியானவர் அவனைத் தொட்டார் . பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான் . அவன் கண்களில் பிரகாசம் மின்னியது . மக்கள் கூட்டம் திகைத்து நின்றது . திரை விழுந்தது . அலெக்சாண்டர் எதிர்பாரா நிலையில் சுகவீனமானபடியால் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுகின்றன ' என்று அறிவிக்கப்பட்டது . " 

என் வார்த்தை அக்கினியை போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டி போலும் இருக்கிறதல்லவா ? ” என்று கர்த்தர் சொல்லுகிறார் - ( எரே 23 : 29)

 


150               நிழல் முகம்

அந்த மனிதர் தெளிவாகத் தீர்மானித்துவிட்டார் . அவரது வேட்டியும் , பெல்ட்டும் , சீறும் சிங்கங்களின் படம் போட்ட சேட்டும் சிங்களச் சீமை யிலிருந்து வருபவராகக் காட்டியது . ஐம்பது வயது மதிக்கத்தக்க அவா அரசு மருத்துவமனை நோக்கி நடந்தார் . உள்ளே நுழையும்போது காவலாளி தடுத்தார் . " அம்மா பாலம்மாவைப் பார்க்க வேண்டும் . " அப்பொழுது அங்கு வந்த தாதி தங்கம் , " பாலம்மாவையா . . . . அவங்க மகனா நீங்க ? பாவம் அநாதை பேஷண்ட் போல கிடக்காங்க . வாங்க ஏங்கூட வாங்கையா . . . " கூட்டிச் சென்றாள் . தூத்துக்குடி தர்ம ஆஸ்பத்திரி திருவிழாக் கூட்டம் போல் நிரம்பிவழிந்தது . உள் நோயாளிகள் வார்ட் , 25 ஆவது பெட் . பாலம்மா ஒரு கோழிக் குஞ்சுபோல சுருண்டு முடங்கி சுய நினைவற்றுக் கிடந்தாள் . " பாலம்மா . . . பாலம்மா . . . . உங்கள் மகன் கொழும்பிலிருந்து வந்துட்டாங்க . . . பாலம்மா . . " தாதி மிகுந்த உற்சாகத்தில் சத்தம்போட்டுச் சொன்னாள் . கடுமையான மாரடைப்பு வந்தபடியால் மயக்கமருந்து கொடுத்து , பாலம்மா கண்விழிக்க முடியாமல் அசைவற்றுப் படுத்திருந்தாள் . உடலில் ஏதோ ஒரு மூலையில் மட்டும் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது . " அம்மா , உங்கள் மகன் பாக்கியநாதன் வந்திருக்கேன் . என்னை மன்னியுங்கம்மா " அம்மாவின் கையைப் பிடித்தான் . அவள் கை லேசாக அசைந்தது . மெதுவாக அவன் கையைப்பற்றிக் கொண்டாள் . அந்தத் தாயின் முகத்தில் மின்வெட்டுப்போல ஒரு பிரகாசம் பரவியது . நர்ஸ் ஒரு நாற்காலியைத் தூக்கிப்போட்டு , “ உட்காருங்கையா ” என்றாள் . பாலம்மா , மகன் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டாள் . பக்கத்து நோயாளியைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தாதி தங்கம் பேசினாள் : " இந்தம்மாவை வீட்டுக்குக் கொண்டுபோகச் சொல்லி டாக்டர்கள் சொல்லிட்டாங்க . யாரும் வந்து கவனிப்பாறே இல்ல . இரண்டு பையன் , ஒரு  மூத்தமகன் தவிர மற்ற இருவரும் ஈரோடு , கோவைன்னு பிழைக்கப்போய் அங்கே குடும்பமாயிட்டாங்க . மூத்தமகன் கொழும்பிற்குப்போய் மூன்று மாதங்கள் பணம் அனுப்பினான் . பிறகு தகவலே இல்ல . அவன் தமிழ் தீவிரவாதியாகி 1983ஆம் ஆன வத்திருப்பான்னு சிலர் சொன்னாங்களாம் . இந்தம்மாவை மருத்துவ மனையில் சேர்த்த நாளிலிருந்து பாக்கியநாதன் , பாக்கியநாதன் , பாக்கியநாதன்னு ஏங்கிக் இருந்தாங்க . இந்த மூணு நாளா கண்முழிக்கவே இல்ல , குடிப்பினையும் கிடையாது . இன்னக்கி வந்த மகன் ரெண்டு மாதத்திற்கு முன்பு வந்திருக்கக் கூடாதா ? என்று விபரமாக விரித்துப் பேசினாள் . இரவுப் பொறுப்பிலிருந்த தாதி தங்கம் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றாள் . பாலம்மாவின் கணவன் மணியும் கொழும்பு இனக்கலவரத்திற்குப் பலியானவரே . பாலம்மா கூலி வேலைசெய்து பிள்ளைகளை வளர்த்துப் படிக்கவைத்துப் பறக்காட்டினாள் . ஆனால் மூத்தமகன் நினைவிலே வியாதிப்பட்டான் . கோயில் கிராமத் திலுள்ள பரோபகாரிகள் சிலர் அவ்வப்போது உதவி செய்தார்கள் . யாராவது கொழும்பிலிருந்து வந்தால் பாலம்மா ஓடிப்போய் மகன் பாக்கியநாதன் பற்றிக் கண்ணீரோடு கேட்பாள் . சமீபத்தில் மகன் பாக்கியநாதனைப் பார்த்ததாகக் கொழும்பிலிருந்து வந்த ஒருவர் சொன்னார் . பாலம்மாவிற்குப் புது உயிர் பிறந்தது . பட்ட மரம் துளிர்ந்தது போன்றிருந்தது . ஈராயிரமாம் ஆண்டிற்குப் பிறகும் ஈழத்தில் இனக்கலவரம் வலுத்தது . பாலம்மா பதினைந்து கிலோ மீட்டர் நடந்தே சென்று தூத்துக்குடி கடற்கரையில் நின்று , “ பாக்கியநாதன் , அம்மா வந்திருக்கேன் , என்னைக் கூட்டிட்டுப்போ . . . " என்று அரற்றி அழுது கடலுக்குள் பாய்ந்தாள் . போலீஸ் இழுத்துச் சென்று கிராமத்தில் கொண்டுவிட்டது . பாலம்மா பைத்தியம் பிடித்தவள் போலானாள் . தங்கம் நர்ஸ் பாலம்மாமீது பாவப்பட்டு தனி அன்புகொண்டாள் . சூடாக ஒரு தம்ளர் பால் கொண்டுவந்து மகன் கையில் கொடுத்து ஊட்டும்படி சொன்னாள் .  பாலம்மா கண்விழித்து மகன் முகத்தைப் பார்த்துவிட வேண்டுமே ' என்ற ஆசை தங்கத்திற்கு அதிகமாக இருந்தது . அதற்காக பிரார்த்தனை செய்தாள் . அதிகாலை ஐந்துமணி . மகன் கையைப் பிடித்தவாறே மகிழ்ச்சியோடு பாலம்மாவின் உயிர் பிரிந்திருந்தது . அவள் முகம் பிரகாசித்தது . நர்ஸ் தங்கம் சொன்னாள் : " பத்து நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் உங்கம்மாவைப் பாதுகாத்திருக்கலாம் . இப்போதும் பரவாயில்லை . அவஸ்தைப்படாமல் அமைதியோடும் சமாதானத்தோடும் உயிர்போயிருக்கிறது . இது பெரிய காரியம் என்றாள் . " அதற்காகத்தான் நான் வந்தேன் . என் பணி முடிந்தது . நான் வரட்டுமா ? " என்றார் மகன் . " அப்போ நீங்க அவங்க மகன் இல்லையா ? ” தாதி தங்கம் பரபரப்புடன் கேட்டாள் . அவர் சொன்னார் : " நர்சம்மா , தினமும் மாலை நேரங்களில் நோயாளிகளையும் , கைதிகளையும் , சந்தித்து ஆறுதல் கூறுவதை ஊழியமாகச் செய்து வருகிறேன் . நான் வாலிபத்தில் கொழும்பு சென்று நிறைய சம்பாதித்தேன் . வீட்டிற்கு ஒழுங்காகப் பணம் அனுப்பினேன் . இப்பொழுது வசதியாக வாழ்கிறேன் . ஒரு நாள் இந்தப்பக்கம் வரும்போது பாலம்மாவைப்பற்றி அறிந்தேன் . மகன் பாக்கியநாதன் எனக்குத் தெரியும் . கொழும்பில என் நண்பன் . பாலத் துறையில் ஒன்றாய் இருந்தோம் . பின்பு தீவிர தமிழ் புலியாகி விட்டான் . சமீபத்தில் சிங்கள இராணுவம் நடத்திய பயங்கர இனக் கலவரத்தில் பாக்கியநாதன் சுட்டுக் கொல்லப்பட்டான் . இந்தச் செய்தி ஒரு நண்பன் மூலம் எனக்குக் கிடைத்தது . பாக்கியநாதனின் ஆத்மா சாந்தியடைய இந்தம்மாவின் மகனாக நடித்தேன் ” என்றார் . நர்ஸ் நடுங்கிப்போனாள் . பிரமித்து நின்றாள் . ' தியாகங்கள் எத்தனை வகைகளில் உள்ளன ? ' என்று எண்ணிய நர்ஸ் அந்த நிழல் முகத்தை நினைந்து சிந்தனையில் ஆழ்ந்தாள் . 

No comments:

Post a Comment