Friday, 22 May 2020

சிறுகதை137-140

137      எங்கள் அருமைப் பூனைக்குட்டி   

      வீட்டில் விளையாடுது மூன்று பூனைக்குட்டி வீட்டுத் திரையில் தொங்கி ஆடுது செல்லக்குட்டி ஓடிக் குதித்து ஓட்டம் காட்டி ஆடி மகிழுது ஓய்ந்திருக்காது சாய்ந்து மறைந்து பாயுது பூனைக்குட்டி கூடிக் கொஞ்சுக் குலாவுது மூன்றாய் கூப்பிட்டால் ஓடிவந்து மியாவ் சொல்லுது நன்றாய் . சுத்தக் கருப்பு நிறத்தில் ஒன்று சுடு சாம்பல் நிறத்தில் மற்றொன்று கழுத்தைச் சுற்றி வெள்ளை உடல் முழுதும் சாந்து நிறத்தில் இன்னொன்று ஆக மூன்றும் பண்ணும் அட்டகாசம் ஆகா ஓகோ என்று நேரம் போகும் ஏகதேசம் மெத்தைக் கட்டில் அவைகளின் பந்தடிமேடை மெத்து மெத்தான தலையணைகள் பந்தடி மட்டை முகத்தைத் துடைத்து மூஞ்சியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நகக்கால்களால் உடல் முழுவதையும் ஓயாமல் சுத்திகரிக்கும் முன்கால்கள் இரண்டையும் நன்றாய் ஊன்றி பின்கால்களை மடித்து அமர்ந்திருக்கும் காட்சி போற்றி போற்றி ! ரூபன் வீட்டுப் பூனைகளின் சித்து விளையாட்டை ருசித்து மகிழலாம் நாள் முழுதும் சளையாமல் எங்கள் அருமைப் பூனைக்குட்டி எங்கள் வீட்டுத் தங்கக் கட்டி எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டால் எங்கும் தேடித் திரிந்து புலம்புவோம் துள்ளிக்குதித்து ஓடிவந்தால் அள்ளி எடுத்து அரவணைப்போம் தெருநாய்களை விரட்டி அடிப்போம் ஒரு கேடும் வராமல் பாதுகாப்போம் . ஜெருஷாவைக் கண்டால் செல்லமாய் ஓடி சொகுசாய் மடியில் படுத்து உருளும் ஜெசிந்தா கிச்சனுக்குள் போனால் பசி தீர வயிற்றை நிரப்பி ஆடும் . 

138                    எதிரும் புதிரும் 

அது ஒரு பெரிய கிறிஸ்தவத் திருச்சபை . அந்த சபைக் குருவானவர் ஒவ்வொரு வாரமும் உற்சாகமாக ஏதாவது செய்வார் . அன்று ஆராதனை முடியவும் ஆலயத்தின் முன்பாக இரு பெரிய கூடைகள் இருந்தன . ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் . அடுத்த கூடை நிறைய சாக்லட்கள் . ஆப்பிள் கூடைமீது ஓர் அட்டை இருந்தது . அட்டையில் இப்படி எழுதி இருந்தது . " ஆளுக்கொரு ஆப்பிள் எடுத்துக்கொள்ளவும் ஆண்டவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் . ” சாக்லட் கூடைமீது அட்டை ஏதுமில்லை . ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு குறும்புச் சிறுவன் , பச்சை மையில் அழகாக ஓர் அட்டையில் எழுதி சாக்லட் கூடைமீது வைத்தான் . அதில் இப்படி எழுதி இருந்தது . " சாக்லட் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் . ஏனெனில் ஆண்டவர் ஆப்பிள் பழக்கூடைப் பக்கம்தான் இருக்கிறார் ” என்று எழுதி இருந்தது . 


139        விலையேறப்_பெற்ற_விசுவாசம்... 


 ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான். எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன். இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

 எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

 அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க, பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை. கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...

 அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார். பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான். சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க... கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை. 

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான். ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா...  தர்மப்பிரபு! ஆனால் கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக் கொண்டே இருந்தார். 

சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...! 

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர் வேதனையுடன் சொன்னார்! அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,  இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க    

அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என்று  கடைக்காரா் கூறியவுடன் அவன் அதின் அருமையை உணா்ந்து  பிச்சையெடுப்கதை விட்டு விட்டு  பணக்காரனாக வாழ்ந்தான்.  

 என்_அன்புக்குாியவா்களே, இதே போலத்தான்... நீங்கள்  உங்களுக்குள்  இருக்கும்... தங்கத்தை அதாவது  அழிந்து போகிற பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் புகழ்ச்சியும் கனமும் மகிமையுயும் உங்களுக்கு கொடுக்கும்.  என்று 1 பேதுரு 1:7 -ல் வாசிக்கிறோம்.

 இந்த விசுவாசம் உங்களிடத்தில் மாபெரும் சக்தியை உங்களுக்குள் அடக்கி வைத்துள்ளது. உங்களுக்குள் தேவன் வைத்த விசுவாசத்தை இன்று முதல் நீங்கள்  செயல்படுத்துங்கள். விசுவாசம் மூன்று விதத்தில் செயல்படுகிறது.  🛑 ஆவியின் கனியாக...கலா. 5 :22.23 🛑 சா்வாயுத வா்க்கமாக.... எபே.  6 :16 🛑 ஆவியின்  வரமாக..1கொ.12 :9 இத்தகைய விசுவாசத்தை  உபயோகியுங்கள். 
 விசுவாசத்தை செயல்படுத்தி பாருங்கள்.  நீங்கள் எந்த காாியங்களிலும் பதறமாட்டீா்கள் சிதறமாட்டீா்கள்,கதறமாட்டீா்கள் உளற மாட்டா்கள். எபிரேயா்  11-ம் அதிகாரம்  முழுவதும் விசுவாசத்தினால்  எந்தெந்தக் காரியங்களில் எப்படியெல்லாம் சாதித்தாா்கள். என்று  எழுதப்பட்டுள்ளது. அதை வாசித்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் விசுவாசம்  மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.  எது இல்லையோ அதை உங்களால் வர வைக்க முடியும்...உங்கள் விசுவாசத்தினால் 

 குழந்தையின்ஆசீா்வாதம்,பிள்ளைகளின் எதிர்கால ஆசீா்வாதம், பணம், சொத்து, வீடு  ஆகியவைகளின் ஆசீா்வாதம். ஊழியத்தின் ஆசீா்வாதம்.பரலோக ஆசீா்வாதம்  ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வீா்கள். அதுமட்டுமல்ல..எத்தகைய பிரச்சனைகள் வந்தா லும் அவைகளை   நீங்களே முறியடிப்பீா்கள்.  உதாரணமாக, விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். எபிரேயர் 11:33,34 இதையெல்லாம் இன்று உங்களுக்குளிருக்கும் விசுவாசத்தினால் நீங்களும் செயல்படுத்த முடியும். அப்படி நீங்கள் விசுவாசத்தைப் கொண்டு நீங்கள் செயலாற்றும்  போது உங்களுக்குள் இருக்கும் ஆவியானவா்  உங்கள் பேருக்கு  புகழும்,கீா்த்தியும், மகிமையும்  கொண்டு வரச் செய்வாா். அந்த பிச்சைக்காரனைப்போல ஏன் நான் இருக்க வேண்டும்? என்னிடத்தில் தங்கத்தை விட மிகப்பொிய விலையேறபபெற்ற  விசுவாசம்  இருக்கிறதே? என்று  உங்களை நீங்களே கேள்வி கேட்பீா்களானால் நீங்கள உணா்ந்து  விட்டீர்கள். 

இப்போதே ஆவியானவா்  உங்களில் இருக்கும் விசுவாசத்தை  பீறிட்டு வர செய்து  உங்கள் சூழ்நிலைக்சகும் மேலாக கிாியை செய்வாா். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!! 



140           மாவீரனை அசைத்த அன்பு

 மங்கோலியா சாம்ராஜ்யத்தின் மன்னனாக இருந்து . மகா அலெக்ஸாண்டரை விட அதிகமான நாடுகளைக் கைப்பற்றி , இட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கான் வரலாற்றில் மறக்க முயாத , நடுக்கத்துக்குரிய ஒரு சர்வாதிகாரி , உலக வரலாற்றில் 12 - ம் நூற்றாண்டு செங்கிஸ்கானின் இரத்தக்கறை படிந்த யுத்தங்களால் கறைப்பட்டு நிற்கிறது . என்பதை அநேக வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர் . 

சீனப் பெருஞ்சுவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் செங்கிஸ்கானின் படையெடுப்புக்குத் தப்பவே சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது என்ற விபரம் பலருக்குத் தெரியாது . அந்தப் பெருஞ்சுவரையே தாண்டி சீனாவைக் கலங்கடித்தவன் செங்கிஸ்கான் . செங்கிஸ்கானை மாவீரன் என்றும் , மகா கொடூரமானவன் என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் . ஏனெனில் செங்கிஸ்கானும் . அவன் படையினரும் ஈவு இரக்கமின்றி செய்த கொலைகள் அத்தனை அதிகம் ! இப்படிப் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய செங்கிஸ்கானையே அசைத்த அன்பின் செயல் ஒன்று அவனது சீனப்படையெடுப்பின்போது நடந்தது .

 ஒரு சமயம் சீன நகரம் ஒன்றில் புகுந்து செங்கிஸ்கானின் படைவீரர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள் . அச்சமடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள் . பெண்கள் தாங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு உயிர்பிழைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் . பரபரப்பும் , திகிலும் அங்கே காணப்பட்டது . எங்கும் மரண ஓலம் ! அந்தக் கூட்டத்தில் ஒரு தாய் தன் பெரிய குழந்தையை முன்னால் ஓடவிட்டு , சிறிய குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு , மிகுந்த கஷ்டத்தோடு ஓடிக்கொண்டிருந்தாள் . ஆனால் அசுரத்தனமாக முன்னேறி வரும் மங்கோலியப்படையின் வேகத்துக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை . அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த பெரிய குழந்தை பயத்தால் மிரண்டு தடுமாறிக் கீழே விழுந்து விட்டாள் . பதறிப்போன தாய் இடுப்பிலிருந்த தன் சிறிய குழந்தையை இறக்கி விட்டு , தடுக்கி விழுந்த பெரிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிரமத்துடன் ஓடத் தொடங்கினாள் .

 கீழே இறக்கிடைப்பட்ட சிறிய குழந்தை பயத்துடன் , பரிதாபமாக அழுது கொண்டிருந்தது . பின்னால் குதிரையில் வந்து கொண்டிருந்த செங்கிஸ்கான் இந்தக் காட்சியைக் கண்டான் . அவனுக்குக் கோபம் வந்தது . அந்தப் பெண்ணைப் பிடித்து வரக் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தனக்கு முன் நின்ற அவளைப் பார்த்து

 சின்னக் குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு பெரிய குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடுகிறாயே ! இந்தப் பிஞ்சுக் குழந்தை நீ பெற்ற குழந்தை இல்லையா ? இது என்ன உன் பக்கத்து வீட்டு குழந்தையா ? என்று கோபமாகக் கேட்டான் செங்கிஸ்கான் ,

 இல்லை ஐயா , நான் தூக்கிக்கொண்டு ஓடிய பெரிய குழதைதான் பக்கத்து வீட்டுக் குழந்தை , நான் கீழே இறக்கிவிட்ட சிறிய குழந்தை என் குழந்தை , என்று கண்ணீருடன் கூறினாள் அந்தத் தாய் . இதைக் கேட்ட செங்கிஸ்கான் அதிர்ச்சியடைந்தான் . ஆச்சரியத்தோடு அந்தக் தாயை நோக்கனான் . அவள் சொன்னாள் : 

" என் பக்கத்து வீட்டுப் பெண் இறந்து விட்டாள் . அவள் இறக்கும் போது இந்த தன் ஒரே குழந்தையை என் பொறுப்பில் ஒப்படைத்தாள் . இந்தக் குழந்தையை நான் காப்பாற்றி வளர்ப்பேன் என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்தேன் . அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்குத்தான் நான் பெற்ற குழந்தையை இறக்கி விட்டு ,

 இந்தப் பெரிய குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்தேன் . இறக்கும் வேளையில் அந்தத் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினால் என் குழந்தையைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பினேன் கண்ணீரோடு பேசிய தாயின் வார்த்தைகளைக் கேட்டு , கடின உள்ளம் கொண்ட செங்கிஸ்கான் கண் கலங்கினான் . 

அந்தத் தாயையும் . இரண்டு குழந்தைகளையும் விடுதலை செய்து அனுப்பிவிடும்படி உத்தரவிட்டான் . ஆண்டவரை அறியாத அந்தச் சீனப் பெண்மணியிடம் காணப்பட்டது சுயநலமே இல்லாத அன்பு ! தாயினும் மேலான அன்புடையவர் நம் அருள்நாதர் இயேசு ! பாவ பாரத்தினால் உருக்குலைந்து கிடந்த மனுக்குலத்தின் மேல் அன்பு கூர்ந்து இரட்சிக்கவே அவர் விண்ணுலக மேன்மையைத் துறந்து மண்ணுலகம் வந்தார் . அந்த தூய அன்பை . கல்வாரி தியாகத்தை அலட்சியப்படுத்தாமல் அவரை விசுவாசித்து , அவரில் நிலைத்திருப்பதே நமக்கு ஆசீர்வாதம் ! . 



No comments:

Post a Comment