🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
1096 ரேனியஸ் வாழ்க்கை வரலாறு
பாகம் 26
26 . சாத்தான்குளம் சந்தையில் நற்செய்தி அறிவித்தல்
தாவீது உபதேசியார் 1823 டிசம்பர் மாதத்தில் ஒருநாள் சாத்தான்குளத்துக்குச் சென்றார் . அது ஒரு வியாழக்கிழமை ஆதலால் வாரச் சந்தை கூடியிருந்தது . அவர் சந்தைக்குச் சென்று தன்னைச் சுற்றிலும் நின்ற மக்களுக்குக் கிறிஸ்து நாதரைப் பிரசங்கித்து துண்டுத்தாள் பிரசுரங்களை வழங்கினார் .
பிரசங்கத்தைக் கேட்டு மனதில் உணர்வு கொண்டவர்களில் , சாத்தான்குளத்தினரான முப்பது அல்லது முப்பத்தைந்து பேர் தாங்கள் உடனே கிறிஸ்து சபையில் சேர்ந்து அவருடைய பிள்ளைகளாக வேண்டுமென்று ஆசித்து , அதைத் தாவீதிடம் தெரிவித்து , அவர் தங்களுடன் தங்கித் தங்களுக்கு உபதேசிக்க வேண்டுமென்று மன்றாடினார் . அவரும் மகிழ்வுடன் அவ்வாறே செய்தார் .
செய்தி கேள்வியுற்ற ரேனியஸ் கர்த்தருக்கு தோத்திரம் செலுத்தித் , தானும் மற்ற ஊழியருடன் அடிக்கடி அங்கு சென்று போதனைகள் கொடுத்துவரலானார் . சுமார் 30 அல்லது 35 பேருடன் ஆரம்பமான சாத்தான்குளம் சபை விரைவில் 30 குடும்பங்கள் ( 135 ஆத்துமாக்கள் ) கொண்ட பெரிய சபையாக வளர்ந்துவிட்டது .
தவிரவும் சாத்தான்குளம் சந்தையில் வாரந்தோறும் செய்த ஊழியத்தின் பயனாகக் கிறிஸ்துவின் நற்செய்தி சுற்றிலுமிருந்த கிராமங்களிலும் பரவினது . அமுதுண்ணாக்குடி , செக்கடி விளை , பண்டாரபுரம் , தச்சமொழி முதலிய கிராமங்களிலும் கிறிஸ்துவை அண்டிக் கொண்டவர்களைச் சேர்த்து , சாத்தான்குளம் பகுதியில் புதுக்கிறிஸ்தவர்களின் தொகை நானூற்றுக்கும் அதிகமாயிற்று .
1823 டிசம்பர் மாதத்தில் திருவைகுண்டத்திலும் ' கடையர் குலத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர் சிலர் நம் திருச்சபை மக்களாகவே , அங்கும் ஒரு சபையுண்டாயிற்று .
கீழ்ப்பாகத்தில் முக்கிய நகரமான அந்த ஊரில் ஏற்பட்ட அச்சபையைக் கண்காணிப்பதற்காக , ரேனியஸ் , மத்திபப் பள்ளி ஆசிரியரான மாசிலாமணியை அங்கு மாற்றி , ஒரு பள்ளியையும் நிறுவி அதையும் கவனித்துக் கொள்ளும்படி அவருக்கும் கட்டளையிட்டார் .
அவ்வருஷம் கிறிஸ்மஸ் தினத்தில் திருவைகுண்டம் , திருப்புளியங்குடிக் கிறிஸ்தவர்கள் பாளையங்கோட்டைக்கு முந்தின தினமே சென்று பண்டிகையைக் கொண்டாடினார்கள் . அது முதல் சில ஆண்டுகளாகக் கர்த்தர் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடக் கிராமக் கிறிஸ்தவர்களில் அநேகர் பாளையங்கோட்டைக்குப் போவது வழக்கமாயிற்று . திருவைகுண்டம் கிறிஸ்தவர்கள் ரோமன் கத்தோலிக்கத்தி லிருந்து வந்ததின் ஒரே நோக்கம் திருப்புளியங்குடி யிலுள்ளதைப் போலத் தங்களுரிலும் ஒரு நல்ல பள்ளிக்கூடம் வேண்டுமென்பது தான் . மாசிலாமணியின் பிரயாசத்தினால் ஒரு பள்ளிக்கூடமும் கட்டி முடிந்தது .
அது முதல் அச்சபையார் சுவிசேஷச் சத்தியங்களைக் கற்பதில் ஆர்வமின்றி இருந்தனர் . இது கண்டு ரேனியசும் ஷ்மிட்டும் மிகவும் வருந்தினார்கள் . ஆனால் , அந்நகருக்கருகிலிருந்த நளன்குடியில் ஒரு சிலர் இரட்சகரை விசுவாசித்துக் கிறிஸ்தவ சத்தியங்களை மனதார ஏற்றுக் கொண்டது மிஷனெரிமாருக்கு உற்சாகம் தந்தது .
அவ்வூரில் வாழ்ந்த 28 வயதினரான ராமு என்பவர் 1824 டிசம்பர் 12 ஆம் தேதி ஈசாக்கு சுவாமிதாசன் என்ற பெயருடன் ஞானஸ்நானம் பெற்றார் . சாத்தன்குளத்திற்குத் தெற்கே இருக்கும் நடுவக்குறிச்சியில் பத்துக் குடும்பத்தினர் கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானித்தார்கள் . அம்மக்களிலொருவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பங்கைத் தேவாலயம் கட்டுவதற்காக மிஷனுக்குக் கொடுத்து மகிழ்ந்தார் .
அப்பெருமகன் 1824ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை வியாபார நிமித்தம் திருநெல்வேலிக்குப் போகும் வழியில் , பெரும் பாதையின் ஓரமாயிருந்த பாளையங்கோட்டை சி . எம் . எஸ் ஆலயத்தில் ( தூய திரித்துவ பேராலயம் கதிட்ரல் ) ஆராதனை நடந்து கொண்டிருந்ததைக் கண்டு , ஆலயத்தின் முன் வாசலில் நின்று பிரசங்கத்தைக் கேட்டார் . அதுமுதல் ஞாயிறுதோறும் அங்குச் சென்று பிரசங்கத்தைக் கேட்டு விட்டு , வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டு ஊர் திரும்புவதை வழக்கமாக வைத்துக் கொண்டார் .
மற்ற நாட்களில் சாத்தான்குளத்திலிருந்த கிறிஸ்தவ நண்பர்களிடம் பேசி , கிறிஸ்து மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிந்த பின் , தன் உறவினரான
வேறு ஒன்பது குடும்பங்களுடன் ரேனியஸ் ஐயரிடம் சென்று . தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டினார் . ஐயர் அவர்களுடைய நல்ல நோக்கத்தை ஏற்று அவர்களை ஆயத்தக்காரர்களாகத் திருச்சபையில் சேர அனுமதித்தார் .
1825 ல் அப்பெரியவர் பேரின்பமுத்து என்ற பெயருடன் ஞானஸ்நானம் பெற்றார் . பண்டாரபுரத்தில் , 1824ஆம் ஆண்டு நான்கு குடும்பக் தினருடன் தோன்றிய சபையானது சாத்தான்குளம் புதுக் கிறிஸ்தவர்களின் சுவிசேஷ ஊழியப் பயன் தான் . பண்டாரபுரத்தினரில் முக்கியமானவர் வீரசங்கிலி என்பவர் . இவரும் தன் நிலத்தின் ஒரு பகுதியை ஆலயமும் பள்ளிக்கூடமும் கட்டுவதற்காக மிஷனுக்குக் கொடுத்தார் . புதுக் கிறிஸ்தவர்கள் அதில் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டினார்கள் . ரேனியஸ் ஐயர் 1825 பெப்ருவரி 16 ஆம் நாள் அதைப் பிரதிஷ்டை செய்தார் .
26 . 03 . 1826ல் வீரசங்கிலி , நாத்தான்வேல் சாந்தப்பன் என்ற பெயருடன் ஞானஸ்நானம் பெற்றார் . “ அன்று கிட்டத்தட்ட ஊராரனைவரும் கூடி வந்திருந்தார்கள் . அவர்களோடு ஜெபித்துப் பிரசங்கம் செய்தேன் . அதன்பின் உன்னதமானவருக்கு ஸ்தோத்திர கீதங்கள் பாடினோம் . வார்த்தையானவர் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறாரென்று நம்புகிறோம் .
இந்தச் சிற்றாலயம் மிகவும் சிறிதாயிருக்கிறதினால் , பெரியதாக வேறொரு ஆலயம் கட்டிக் கொள்ள இன்றே அவர்கள் தீர்மானித்து விட்டார்கள் . இக்கட்டிடத்தை ஒரு பள்ளிக் கூடமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் , ” என்று ரேனியஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார் . அமுதுண்ணாக்குடியில் 14குடும்பத்தினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் . சாத்தான்குளம் சந்தையில் தாவீது உபதேசியாரின் பிரசங்கத்தினால் கர்த்தரை ஏற்றுக்கொண்ட இவர்கள் சாத்தான்குளம் சபையின் மக்களால் ஊக்குவிக்கப் பட்டு , உறுதி அடைந்தவர்கள் . இங்கு பண்டாரபுரம் புதுக் கிறிஸ்தவர்களில் ஒருவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் . அதில் 20 சிறுவர் கற்றனர் . அவ்வாசிரியர் அச்சிறுவர்களுக்கு ஞானோபதேச வினா விடைகளைக் கற்பித்திருந்த விதத்தைச் சோதித்தறிந்த ரேனியஸ் ஆச்சரியத்தில் மூழ்கினார் . '
செக்கடிவிளையில் கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் பத்துக் குடும்பத்தினர் . அவர்களுக்கு ஒரு கோயிலிருந்தது . அம்மக்கள் அக்கோயிலில் வைத்துத் தாங்கள் அதுவரை வணங்கி வந்த ' சாமி சிலைகளை அகற்றிவிட்டு , அதைத் தாங்கள் கர்த்தரை வணங்கும் தேவாலயமாக மாற்றியமைத்துக் கொண்டார்கள் .
1825 பெப்ருவரி 18 ஆம் தேதி ரேனியஸ் ஐயர் அதைப் பிரதிஷ்டை செய்தார் . 1825 ஆம் ஆண்டில் புதுச்சபைகள் பல தோன்றின . அவைகளிலொன்று இடைச்சிவிளை சபையாகும் . இச்சபையும் சாத்தான்குளம் சபையாரின் ஊழியப் பலனே . கர்த்தரைத் தெரிந்து கொண்ட 30 குடும்பத்தாரின் பிரதிநிதிகள் ரேனியஸ் ஐயரிடம் போகத் தங்களுக்குப் போதித்துத் , தங்களையும் கிறிஸ்து சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டினர் . ஐயர் அவர்களைச் சோதித்து , உலகப்பிரகாரமான எந்த நன்மைகளையும் எதிர் நோக்கி அம்மக்கள் கிறிஸ்து நாதரைத் தங்கள் ஆண்டவராக ஏற்கவில்லை என்று அறிந்த பின் அவர்களை ஆயத்தக்காரராகச் சேர்த்துக் கொண்டார் .
மேலே சொல்லப்பட்ட காரியங்கள் சாத்தன்குளத்தின் ஆதிச்சபையின் உன்னத கிறிஸ்தவ விசுவாசத்தைக் காட்டுகின்றன . ஆம் , அச்சபை இத்தகைய உத்தம ஊழியத்தை நிறைவேற்றிய காலத்தில் , மிகுந்த மகிமையாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது . அதன் ஜோதி தங்கம் நெருப்பிலிடப்பட்டுப் பிரகாசிப்பது போன்ற பிரகாசமாகும் . ஏனெனில் அந்நாட்களில் ( 1824 ) அச்சபை புடமிடப்பட்டுக் கொண்டிருந்தது .
புதுக் கிறிஸ்தவர்களான அம்மக்கள் கொடிய துன்பத்துக் குள்ளாகியிருந்தனர் . திடீர் திடீரென்று பகைவர் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை கடுமையாக அடித்துக் காயப்படுத்தி விட்டு ஓடிவிடுவர் . இரண்டொருவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்க் , கிறிஸ்துவை மறுதலிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவர் . அவர்கள் மறுக்கவே அவர்களைக் கட்டி வைத்து அடிப்பர் . வேறு சிலர் மீது அநியாயமாய்ப் பொய்க் குற்றங்களைச் சுமத்தி நியாயாசனங்களின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுத்தனர் . ஒரு தடவை சாத்தன்குளத்தில் ஊருக்குப் பெரியவர் என்று சகலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பிரமுகர் ஒருவர் , கிறிஸ்தவர்களில் மூன்று பேரைப் பிடித்துக் கட்டிவைத்துச் சாட்டையால் அடித்து , நீசத்தனமாக நிந்தித்துத் தூஷித்துப் , பின் விடுவித்தார் . இத்தகைய துன்பங்களினால் , ஒரு மாதம் அல்ல இரண்டு மாதங்களல்ல , பல மாதங்களாக அக்கிறிஸ்தவர்கள் உபத்திரவப் பட்டார்கள் . எனினும் அவை எல்லாவற்றில உறுதியான விசுவாசிகளாக நிலைத்துத் , தங்களை நேசிக் இரட்சகருக்குச் சாட்சிகளாய் விளங்கினார்கள் .
No comments:
Post a Comment