Tuesday, 2 June 2020

215-218

215 மரணத்தோடு ஓர் ஒப்பந்தம் 


" தீங்கு நாட்கள் வராததற்கு முன் நீ உன் வாலிபப்பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை ” ( பிர .12 : 1 ) . 

மரணத்தோடு விநோதமான ஓர் ஒப்பந்தம் செய்து கொண்ட மனிதனைக் குறித்த பழங்கதை ஒன்றுண்டு . 

ஒருநாள் மரண தூதன் அம்மனிதனிடம் வந்தான் . " எனது மரண நேரம் வரும்போது நான் உன்னோடு வருவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாகவே இருப்பேன் . ஆனால் ஒரே ஒரு நிபந்தனை . மரணம் வருவதற்கு முன்பாகவே என்னை எச்சரிக்கை செய்யும்படி எனக்கு செய்தி அனுப்பபடப்வேண்டும் என்று மரண தூதனை அம்மனிதன் கேட்டுக்கொண்டான் .

 மரண தூதனும் அதற்கு ஒப்புக்கொண்டான் . மரண தூதனோடு இப்படியொரு ஒப்பந்தம் செய்து கொண்டதில் அம்மனிதனுக்கு பெரும் மகிழ்ச்சி . வாரங்கள் பறந்தோடி மாதங்களாயின . மாதங்கள் பறந்தோடி ஆண்டுகள் ஆயின . பயங்கர குளிர்காலம் . மாலை வேளையில் அம்மனிதன் உட்கார்ந்து தன்னுடைய ஆஸ்திகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான் . “ மரணம் ” திடீரென்று அவனது அறைக்குள் நுழைந்து அவனது தோளில் தட்டியது . அம்மனிதன் பயந்து நடுங்கி அலறிவிட்டான் . “ நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நீ எனக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமலே வந்துவிட்டாயே ? ” என்று பதறினான் . " 

நான் ஒருநாளும் ஒப்பந்தத்தை மீறவில்லை . என்னுடைய வாக்கை நான் காத்துக்கொண்டேன் . நான் உனக்கு அநேக எச்சரிக்கையின் செய்திகளை அனுப்பினேன் . கண்ணாடியை உற்றுப்பார்த்து உன்னைக் கவனித்துப்பார் . உனக்கே விளங்கும் . உன் தலை முடியைப்பார் ! எவ்வளவு கறுப்பாக அடர்த்தியாக இருந்தது . இப்பொழுது அடர்த்தியெல்லாம் மாறி அத்தனையும் வெள்ளையாக மாறிவிட்டது . நான் சொல்கிறதைக் கேட்பதற்குக் கூட உன்தலையை என் பக்கமாக சாய்த்துதான் கேட்க வேண்டியதிருக்கிறது . இல்லையா !

 கண்ணாடியில் உன்னைப் பார்ப்பதற்குக்கூட முன்பைவிட மிக நெருங்கி நின்றுதான் பார்க்க முடிகிறது . ஆண்டுகள் தோறும் உனக்கு இத்தகைய எச்சரிக்கையின் செய்திகளை அனுப்பிக் கொண்டேதான் இருந்தேன் . ஆனால் நீதான் ஆயத்தமாக இல்லை . இப்பொழுது நேரமாகிறது புறப்படலாம் வா ” என்ற சொல் கடுமையாகவே இருந்தது .

 உங்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கலாம் . காலம் தாமதமாவதற்கு முன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள் . 

மரணத்தை சந்திக்கும் தவிர்க்க முடியாத நாளுக்கு அழைப்பு வருவதற்கு முன் அவரை இப்பொழுதே தேடுங்கள் . தேவனுடைய வார்த்தை 2005 மார்ச் 7/7 




216  நற்செய்தியை பறைசாற்றுங்கள்

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைக்குப்பின் போதகரும் அவருடைய பதினொரு வயது மகனும் அவர்களிருந்த நகரத்திற்குள் சென்று இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அடங்கிய துண்டுப்பிரதிகளை ( Gospel Tracts ) வீடுவீடாகச் சென்று விநியோகிப்பது வழக்கம் . 

ஒரு குறிப்பிட்ட ஞாயிறு மாலை வேளையில் சரியான மழை பெய்து கொண்டிருந்தது . ஆனாலும் போதகரின் மகன் மழை பெய்வதைப் பொருட்படுத்தாமல் ரெயின் கோட்டை அணிந்துகொண்டு " அப்பா , நான் ரெடி ” என்று சொன்னான் . “ எதற்கு ரெடி ? ” என்று அப்பா கேட்டார் . “ என்ன அப்பா அப்படிக் கேட்கிறீங்க ? நாம் இருவரும் கைப்பிரதிகள் கொடுக்கப் போகவேண்டாமா ? என்றான் .

 “ மகனே , இன்று மழை பெய்து கொண்டிருக்கிறது . அதோடு குளிராகவுமிருக் கிறது . ” என்று அப்பா வார்த்தையை இழுந்தார் . மகன் அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தான் . “ அப்பா , மழை பெய்து கொண்டிருந்தாலும் நரகத்திற்குப் போகிறவர்கள் போய்கொண்டுதானே இருப்பார்கள் . இல்லையா அப்பா ” என்றான் . அப்பா பதில் சொல்லத் தயங்கினார் . “ இல்லை , மகனே மழை பெய்கிறது . குளிராகவும் இருக்கிறது . இதில் எப்படிச் செய்வது ? ” என்றார் . 

மகன் ஏமாற்றமடைந்த வனாய் சோர்ந்துபோய் நின்றான் . “ அப்படியானால் இன்றைக்கு நான் மட்டும் போகிறேன் . தயவுசெய்து என்னை அனுமதியுங்கள் ” என்று குழந்தைகளுக்குரிய கெஞ்சுதலோடு கேட்டான் . அப்பா மகனைத் தனியாக அனுப்புவதற்குத் தயங்கினார் . ஆனாலும் “ சரி மகனே போய்வா , கைப்பிரதிகளை எடுத்துக்கொள் . கவனமாகப் போய்வா என்று சொல்லி அனுப்பி வைத்தார் . “ நன்றி , அப்பா  ” என்று சொல்லி விட்டு மகன் புறப்பட்டான் . 

அவன் வெளியே சென்று மழையையும் , பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று கைப்பிரதிகளை விநியோகம் செய்தான் . வெளியே சந்திக்கிறவர்களிடத்திலும் கைப்பிரதியைக் கொடுத்தான் . இரண்டு  மணி நேரமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் அலைந்து திரிந்த படியான குளிர் அவனை மிகவும் நடுங்கச்செய்தது . ஆனாலும் கையிலிருந்து ஒரு கைப்பிரதியை விநியோகித்து விட்டு திரும்ப வேண்டும் . தெருவின் ஒரு மூலையில் குளிரின் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்தான் . 

ஆட்கள் நடமாட்டம் இல்லை . எதிரிலுள்ள வீட்டிற்குப் போய் கொடுத்துவிடலாம் என்று எண்ணிச் சாலையைக் கடந்து மறுபுறம் சென்றான் . வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்தது . அழைப்பு மணி பட்டனை அழுத்தினான் . உள்ளே மணி ஓசை ஒலித்தது . ஆனால் யாரும் வந்து திறக்கவில்லை . மீண்டும் மீண்டும் மணி யோசையை ஒலித்தும் எந்த பதிலுமில்லை . கடைசியாக அச்சிறுவன் திரும்பிவிடலாம் என்று தீர்மானித்தான் . ஆனாலும் அவன் உள் மனதில் மீண்டும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது . மீண்டும் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான் . அப்பொழுதும் பதில் இல்லை .

 இப்பொழுது கதவைத் தட்ட ஆரம்பித்தான் . பதில் இல்லை . மீண்டும் தட்டினான் . பொறுத்திருந்தே பார்த்து விடுவோமே என் முன் வராந்தாவில் காத்திருந்தான் . சிறிது நேரம் கழித்து மெதுவாகக் கதவு திறந்தது . மிகுந்த துக்க முகத்தோடு வயது முதிர்ந்த ஒரு பெண்மணி கதவண்டை வந்து நின்றார்கள் . மெல்லிய குரலில் , “ மகனே , உனக்கு என்னவேண்டும் ? " என்று முகத்தில் புன்னகையை வருவித்துக்கொண்டு கேட்டார்கள் . “

 மேடம் , உங்களை தொந்தரவு செய்வதாகத் தோன்றினால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் . இயேசுவின் அன்பைக்குறித்து உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன் . ஜீவனுக்குள் குதித்தல் ( Leap to Life ) என்ற நற்செய்தி கைப்பிரதிகளை நான் விநியோகித்து வருகிறேன் . இது என் கையிலிருக்கும் கடைசிப்பிரதி . அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்தேன் . " என்று சொல்லிக்கொண்டே அந்தக் கைப்பிரதியைக் கொடுத்துவிட்டுத் திரும்பினான் . " நன்றி மகனே , ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக ” என்று அந்த வயதான அம்மையார் சொன்னார்கள் . 

இது நடந்த மறு ஞாயிறு காலை ஆராதனையின் போது போதகர் ஆராதனையை ஆரம்பித்தார் . ஆராதனையின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் " உங்களில் யாராவது உங்களது சாட்சிகளைப் பகிர்ந்து கொள்ள விருமாறாகளா ? என்று கேட்டார் . ஆலயத்தின் பின்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதிர்வயதான பெண்மணி மெதுவாக எழுந்து நின்றார்கள் . அந்த அம்மையார் பேச ஆரம்பிக்கும்போதே அவர்களுடைய முகத்தில் மகிமையான ஒரு பிரகாசத்தைக் காண முடிந்தது . 

“ என்னை இந்த சபையிலுள்ள யாருக்கும் தெரியாது , இதற்கு முன்பு நான் இந்த சபைக்கு வந்ததுமில்லை . போன ஞாயிற்றுக் கிழமைக்கு முன்புவரை நான் ஒரு கிறிஸ்தவள் அல்ல . என் கணவர் இந்த உலகத்தில் என்னைத் தனிமையாக விட்டுவிட்டு சில காலத்திற்கு முன் கடந்துபோய்விட்டார் . 

போன ஞாயிற்றுகிழமை மிகவும் குளிரான நாள் . மழையும் பெய்து கொண்டி ருந்தது . அன்று இரவும் என்னுடைய இருதயமும் அந்த நிலையில்தான் இருந்தது . நான் அன்று என் வாழ்க்கையில் விரக்தி நிலையின் எல்லைக்கே வந்துவிட்டேன் . அதற்கு மேல் இவ்வுலகத்தில் வாழும் நம்பிக்கையும் மனதிடமும் எனக்கு இல்லை . ஆகவே நான் ஒரு கயிரையும் நாற்காலியையும் எடுத்துக்கொண்டு என் வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றேன் . அங்கு சென்று சாமான்கள் போடும் பரண் ( Attic ) ஒன்று இருக்கிறது . பரணுக்கு ஏறும்படிக் கட்டில் ஏறிகயிற்றின் ஒரு முனையை கூரையிலுள்ள உத்திரத்தில் கட்டினேன் . பரணை விட்டுக்கீழே இறங்கி வந்து நாற்காலியில் ஏறி நின்று கயிற்றின் மறுமுனையில் என் கழுத்தில் சுருக்கு முடிச்சாகக் கட்டினேன் . தனிமை யில் , உடைந்த உள்ளத்தோடு நாற்காலியிலேயே சிறிது நேரம் நின்றேன் . 

நான் நாற்காலியிலிருந்து குதிக்கப்போகும் நேரத்தில் என்னுடைய வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்தது . கீழேசென்று அழைத்தவரைச் சந்தித்துவிட்டு வருவோமா வேண்டாமா என்ற ஒரு மனப்போராட்டம் . பொதுவாக என்னைத் தேடி யாரும் பார்க்க வருவதில்லை . ஆனால் இன்று தொடர்ந்து அழைப்பு மணி அடிப்பதால் அழைத்தவரை சந்தித்து அனுப்பி வைத்துவிட்டு வந்து இதைச் செய்துவிடலாம் என்று எண்ணம் ஏற்பட்டது . இப்பொழுது கதவு தடதடவென்று தட்டப்பட்டது . 

இப்பொழுது கழுத்தில் மாட்டிய கயிறை கழட்டிவிட்டு நாற்காலியை விட்டு கீழே இறங்கி வந்து கதவைத் திறந்தேன் . நான் கதவைத் திறந்தபோது முன் வராந்தாவின் கதவு ஓரத்தில் தேவ தூதனைப்போல பிரகாசமான சிரித்த முகத்துடன் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான் . 

அப்படிப்பட்டதொரு காட்சியை என் வாழ்நாட்களில கண்டதில்லை . அச்சிறுவனின் புன்சிரிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்றோ மரித்திருந்த என் இருதயத்தை உயிர்ப்பித்தது . “ ஜீவனுக்குள் குதித்தல் " ( Leap to Life ) என்று அவன் கையில் வைத்திருந்த கைப்பிரதியின் தலைப்பைப் புன் சிரிப்போடு சொல்லித் தொடர்ந்தான் . “ மேடம் , இயேசுவின் அன்பைக் குறித்து உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன் ” என்று சொல்லி இப்பொழுது நான் கையில் வைத்திருக்கிற சுவிசேஷ கைப்பிரதியை என்னிடத்தில் கொடுத்தான் . 

அச்சிறிய தூதன் மீண்டும் கடும் குளிரிலும் மழைக்குள் சென்று மறைந்துவிட்டான் . நான் கதவை அடைத்துவிட்டு அந்தக் கைப்பிரதியை ஒவ்வொரு வார்த்தையாக மிகக்கவனமாகப் படித்தேன் . நான் மேல் அறைக்குச் சென்று கூரை உத்திரத்தில் கட்டியிருந்த கயிற்றையும் அங்கு வைத்திருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு கீழறைக்கு வந்து விட்டேன் . இனிமேல் அந்தக் கயிற்றுக்கு வேலையில்லை .

 நான் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன் . இப்பொழுது நான் இராஜாதி இராஜாவின் பிள்ளை . அந்தக் கைப்பிரதியின் பின்பக்கம் இந்த சபையின் முகவரி இருந்தது . ஆகவே நேரில் வந்து உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன் . தேவனின் சிறிய தூதன் சரியான நேரத்தில் வராதிருந்தால் ஜீவனுக்குள் குதித்தல் ( Leap to Life ) என்ற கைப்பிரதி எனக்குக் கிடைக்காதிருந்திருக்குமானால ் நான் மரணத்திற்குள் குதித்திருப்பேன் ( Leap to Death ) என் ஆத்துமா நித்திய நரகத்திற்குச் சென்றிருக்கும் . "

 சபையிலிருந்த எல்லோருடைய கண்களும் கண்ணீரால் நனைந்தன . சபையார் அனைவரும் ஆலயத்தில் கூரை பிளக்கும் அளவுக்கு இராஜாதி இராஜாவைத் துதித்து ஆரவாரித்தனர் . ஆராதனை முடித்து போதகர் பீடத்திலிருந்து இறங்கி வந்து முன் வரிசையில் உட்கார்ந்திருந்த தனது மகனை கட்டி அணைத்து மகிழ்ச்சியால் கண்ணீர் சொரிந்தார் . ஒரு சபைக்கு இதுதான் மகிமையான நேரம் . ஒரு தகப்பன் அன்பின் நிறைவோடு மகனைக் கனப்படுத்தும் நேரம் . பரலோகத்தில் பரலோக பிதாவுக்கும் , தேவதூதர்களுக்கு மத்தியில் மிகுந்த சந்தோஷம் நம்முடைய பரலோக பிதா தம்முடைய ஒரே குமாரனை குளிர்ந்த , இருண்ட உலகத்திற்குள் மனுக்குலத்தை மீட்கும் பொருட்டு அனுப்பி வைத்தார் . அவர் மூலமாக மனிதர்கள் மீட்கப்படும்போது பரலோக.. பிதாவுக்கு சந்தோஷம் . யாவரும் இதன் காரணமாக பிதாவைத் துதிப்பார்கள் . ஆகவே பிதாவானவர் அவருக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைக் கொடுத்து அவரோடு சிங்காசனத்தில் உட்கார வைத்தார் . அதே சிலாக்கியத்தை ஜெயங்கொண்டவர்களுக்கும் அருளுகிறார் ( வெளி .3 : 21 ) என்றால் அந்தத் தனிப்பெரும் சிலாக்கியத்தை எண்ணிப்பாருங்கள் . தேவனுடைய நற்செய்தி ஒருவனுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் உள்ளது . ஆகவே அந்த ஆச்சரியமான செய்தியை உங்களுக்கு அன்பானவர்களுக்கு மாத்திரமல்ல மற்றவர்க ளோடும் பகிர்ந்துகொள்ள வெட்கப்படாமல் யாவருக்கும் சொல்லுங்கள் . 

தேவனுடைய வார்த்தை 2007 பிப்ரவரி 


217 என்னை ஏன் தெரிந்து கொண்டீர் ?

 இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . “ இயேசு , யூதாஸ்காரியோத்தை ஏன் தமது சீஷராகத் தெரிந்துகொண்டார் ? ஆழ்ந்து யோசித்துப்பார்த்தார் . ஆனால் பதில் கூறமுடியவில்லை . கேள்வி அவரை திணறடித்து விட்டது . 

இந்தக் கேள்வி அவருக்கு மற்றுமொரு கேள்வியை உருவாக்கிவிட்டது . அது அவரை இன்னும் திணறடித்தது . “ என்னை ஏன் தெரிந்துகொண்டார் ? " அதுதான் அவரில் எழுந்த கேள்வி . இதே கேள்வி பலநூற்றாண்டுகளாகக் கேட்கப்பட்டு வருகிற கேள்விதான் . நாம் பாவத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாவ உணர்வால் குத்தப்பட்டு வேதனையடையும்போது இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காகக் கதறி அழுகிறோம் . 

ஆண்டவராகிய இயேசு நம்மை நேசித்து நமக்காக , நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார் என்ற சத்தியத்தை உணர்ந்து நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கையிடும்போது அவரது மகா பெரிய இரக்கத்தினால் நமது பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுகிறோம் . இது நமது சிந்தனைக்கு எட்டாத பெரிய காரியமாக இருக்கிறது .

 மன்னிப்பைப் பெற்ற நாம் ஆச்சரியமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம் . ' ஆண்டவரே , என்னை ஏன் தெரிந்துகொண்டீர் ? ” என்று நாம் கேட்கிறோம் . ஆனால் " நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் ( ரோமர் 5 : 8 ) என வேதம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது . அது அவருடைய பெரிய அன்பு ( SUPREME LOVE ) . 

நாம் அதற்குத் தகுதியற்ற , நிர்ப்பந்தமான நிலையில் இருந்தோம் . ஆனாலும் தம்முடைய விரித்தக் கரங்களோடும் திறந்த இருதயத்தோடும் நம்மை அணைத்துக்கொண்டு நம்முடைய காதில் தமது மெல்லிய குரலில் " நீ பாவத்தை நேசித்ததை விட நான் உன்னை நேசிக்கிறேன் ( I LOVE YOU EVEN MORE THAN YOU LOVED YOUR SIN ) என்று கூறுகிறார் . 

எவ்வளவு பெரிய அன்பு ! உண்மைதான் நாம் பாவத்தை நேசித்தோம் . ஆனாலும் அவர் நம்மை நேசித்து மன்னித்து விடுதலையாக்கினார் . " என்னை ஏன் தெரிந்து கொண்டார் ? அது நமது புத்திக்கு எட்டாத அறிவுக் கெட்டாத அன்பு ! " நாம் தேவனுடைய பிள்ளைகளென் று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு  பெரிதென்று பாருங்கள் ;
( 1 யோவான் 3 : 1 ) . 



 218வழக்காடும் தேவன் 

" தேவனே , நீர் என் நியாயத்தை விசாரித்து , பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி , சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும் ” ( சங் .43 : 1 ) . 

ஜோன்ஸ் , ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டிக்கொடுக்கும் தொழில் ( Construction Business ) செய்து நிறைய பணம் சம்பாதித்தான் . அவனது மிக நெருங்கிய உறவினரான மாமா ஒருவர் , அவர் நடத்தி வரும் ஒரு சாதாரண வியாபார நிறுவனத்துடன் சேர்ந்து தொழில் செய்யும்படி மிகவும் அன்புடன் வற்புறுத்தி அழைத்தார் . ஆகவே ஜோன்ஸ் அதற்கு சம்மதித்து , கட்டிடத் தொழிலில் சம்பாதித்து வைத்திருந்த முழுத்தொகையையும் வியாபார நிறுவனத்தில் முதலீடு செய்தான் . அந்நிறுவனத்தில் தனது மாமாவுடன் உற்சாகமாக வேலைபார்த்தான் . குறுகிய காலத்திற்குள் அந்நிறுவனம் நன்கு வளர்ந்தோங்கியது . தானும் தனது மாமாவும் செய்து வருகிற வியாபாரத்தில் நல்ல வருமானம் வருகிறது என பெருமையாகத் தன் நண்பர்களோடு பேசிக்கொள்வான் . 

ஒருநாள் அவனது மாமா , நிறுவனம் முழுவதும் தன்னுடையது தான் என்றும் , அவரே ஏக உரிமையாளர் ( Sole Owner ) என்றும் கூறி ஜோன்சை நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிடக்  கூறினார் . தனது மாமாவை முற்றிலும் நம்பி ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து அதிர்ச்சிக் குள்ளானான் . தந்திரமாக அவர் நிறுவனத்தையும் ஜோன்ஸ் கொடுத்த முழு முதலீட்டையும் தனது முதலீடாகவே பதிவு செய்துள்ளார் என்பதையும் அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றான் . தனது முதலீட்டையும் போட்டு தனது முழு உழைப்பையும் கொடுத்து வளர்த்த நிறுவனத்தில் தனக்கு ஒன்றுமில்லை என வெளியேற்றியதைக் குறித்து தனது மாமா மீது மிகுந்த கோபம்கொண்டான் . அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரும்பினான் . 


ஜோன்ஸ் நல்ல கிறிஸ்தவன் . அவனது மாமா தேவனை அறியாத ஒரு மனிதர் , ஜோன்ஸ் தனக்கு சம்பவித்த நிலவரத்தையும் வழக்கு தொடர
விரும்புவதையும் தனது பாஸ்டரிடம் போய் சொன்னான் . 

வழக்கு தொடர நமக்கு நியாயமான காரணமும் சட்டப்பூர்வமான உரிமையும் இருப்பினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 5 : 38-48இல் சொல்லியிருக்கிற கோட்பாட்டின் படி நாம் நீதிமன்றத்திற்குச் சென்று நமது உரிமையை நிலைநாட்ட விரும்பாமல் நமது உரிமையை நாம் விட்டுக் கொடுப்போமானால் “ சர்வலோக நியாயாதிபதி ” நமக்காகச் செயல்படுவார் . அதுதான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கான சாட்சியாக அமையும் என்று பாஸ்டர் கூறினார் . ஜோன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் திகைத்து நின்றான் . எனினும் சூழ்நிலைகளை விளங்கிக்கொண்ட பாஸ்டர் தனக்கு அறிமுகமான கிறிஸ்தவ வழக்கறிஞரான ஜான் தக்கரிடம் அனுப்பி வைத்தார் . 

ஜோன்ஸ் வழக்கறிஞரின் ஆலோசனைக்காகச் சென்றான் . வழக்கறிஞர் நீதி மன்றத்திற்குச் செல்வதானால் ஏற்படும் செலவையும் தீர்ப்பு கிடைக்க ஏற்படும் காலதாமதம் குறித்தும் பாஸ்டர் கூறிய வேத ஆலோசனையின் அடிப்படையில் ( Biblical Counselling ) அவரது மாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் . 

அன்புள்ள மாமா அவர்களுக்கு , இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் , சிலகாலம் தங்களோடு இணைந்து வியாபாரம் செய்யும் வாய்ப்பை ஆண்டவர் எனக்குத் தந்தபடியால் நான் அவருக்கு நன்றி செலுத்து கிறேன் . இப்பொழுதும் வியாபார நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப் பட்டாலும் என் ஆண்டவர் அவர் விரும்புகிற பாதையில் என்னை நடத்திவருகிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . 

எனினும் பிரபல வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தேன் . தங்களிடம் 40,000 டாலர் ( ரூ .20,00,000 ) கேட்டு வழக்கு தொடர எனக்கு உரிமை இருக்கிறது என்றும் அதை நிரூபிப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது என்றும் அவர் எனக்கு தெளிவுபடுத்தினார் . 

ஆனாலும் நான் ஒரு கிறிஸ்தவன் . என் ஆண்டவர் எனக்காக வழக்காடி நீதி செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன் . ஆகவேதான் இக்கடிதத்தை எழுதுகிறேன் . எனவே நீங்கள் உங்களது மனச்சாட்சியின்படி எனக்கு நீதி செய்யமுடியும் . ஒரு வேளை உங்களது மனச்சாட்சியைக் கடினப்படுத்தினாலும் என் ஆண்டவர் எனக்காக வழக்காடுவார் என்று விசுவாசிக்கிறேன் . நீதிமன்ற வாசலில் காத்திருக்காமல் தேவனின் சந்நிதியில் காத்திருக்கிறேன் . ஏனெனில் இந்த ஏழையின் வழக்கை அவர் விசாரிப்பார்  வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன் . அன்புள்ள , ஜோன்ஸ் ,


 கடிதம் அனுப்பிய இரண்டே வாரங்களுக்குள்ளாக ஜோன்சுக்கு 40,000 டாலருக்கு காசோலை வந்து சேர்ந்தது . நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் வழக்கு முடிய குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் . இதே 40,000 டாலர் கிடைத்திருந்தாலும் வழக்கறிஞருக்கான செலவு நீதிமன்றச் செலவு இவற்றில் பாதி தொகை செலவாகியிருக்கும் . 

ஆனால் தனது உரிமையை நீதிமன்றத்தில் நிலைநாட்டச் செல்லாமல் வேத ஆலோசனைக்குக் கீழ்படிந்து தேவனுடைய நீதியுள்ள சிங்காசனத் திற்கு முன்பு வைக்கத் தீர்மானித்தபடியால் தேவன் அதைக் கனப் படுத்தினார் . தேவன் ஜோன்சுக்காக அவனது மாமாவின் இருதயத்தில் கிரியைசெய்து ஜோன்சுக்கு நீதி கிடைக்கச்செய்தார் . மிகப் பிரபல்யமான வழக்கறிஞர்களால் சாதிக்க முடியாததையும் தேவனால் சாதிக்கமுடியும் . 

“ நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது . அப்படிச் செய்கிறதை விட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை , ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை ( Suffer to be defrauded ) " ( 1 கொரி . 6 : 7 ) என்று வேதம் நம்மைப் போதிக்கிறது . நமது வழக்கை நாம் அவரிடம் ஒப்புவித்துவிடும் போது அவர் நமக்காக வழக்காடுவார் . “

 ஏழையா யிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே ; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே . கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி , அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார் ” ( நீதி .22 : 22 , 23 ) என்று வேதம் தெளிவுபடுத்துகிறது . 

ஜோன்சுக்காக வழக்காடி நீதி செய்தவர் உங்களுக்கும் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் . " சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ ” ( ஆதி .18 : 25 ) . தேவனுடைய வார்த்தை 2005 ஜூன்

No comments:

Post a Comment