Thursday, 30 April 2020

Christian Missionary History Tamil Part 7

கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883) பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது.

ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர்.

இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத்து

ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார். எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை.

வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார்.

ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.


கல்வி:

தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

ஆரம்பகாலப் பணி: ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார்.

1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.


நற்செய்தி ஊழியம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார்.

ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.


கீர்த்தனைகள் பாடிய விதம்:

கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன.

ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம்.

தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.


ஜான் பால்மரின் மறைவு:

இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்..

எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

யார் அந்த “அவர்”?

யூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்த போலந்து தேசத்தில், சுவால்க்கி என்னும் ஊரில், 1867ம் வருடம் ஆகஸ்ட் 6ம் தேதி யூத ரபிக்கும், பக்தி மிகுந்த யூத பெண்ணிற்கும் மகனாய் பிறந்தார் சாலமோன் கின்ஸ்பர்க்.

18 ம் நூற்றாண்டில் போலந்து தேசம் ரஷ்ய அரசின் ஆளுகையில் இருந்தமையால் படிப்பிற்கான வசதிகள் குறைவாக காணப்பட்டது.

சாலமோன் 6 வயதாக இருக்கும் போதே அவரது தாயாருக்கு அவரை ஜெர்மனியில் படிக்க வைக்கவேண்டுமென ஆவல் கொண்டார். ஆனால் யூத ரபியான அவரது தகப்பனோ யூத மத கலாச்சாரத்தில் அவரை வளர்த்து அவரையும் யூத ரபியாக உருவாக்க ஆவல் கொண்டார்.

தாயாரின் வற்ப்புறுத்துதலால் ஜெர்மனி சென்று, பல கப்பல்களுக்கு அதிபதியான தனது தாத்தா வீட்டில் 14 வயது வரை தங்கி படித்து பின்பு போலந்து சென்றார் சாலமோன்.

ஏசாயா 53 ல் சொல்லப்பட்டுள்ள “அவர்” யார்?: அது கூடாரப்பண்டிகை தினம். யூத ரபிகள் சாலொமோனின் வீட்டில் கூடினார்கள். வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் ஆராய தொடங்கினார்கள்.

ஏசாயா 53 ம் அதிகாரத்திற்கு நேராய் விவாதம் சென்றது. அறைக்கு வெளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த சாலொமோன் கின்ஸ்பர்க் அறைக்குள்ளே நுழைந்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள “அவர்”, “அவரை”, “அவருக்கு”, “அவர்மேல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த “அவர்” யார்? என்று தகப்பனிடம் கேட்டார்.

சினமடைந்த தகப்பன் கன்னத்தில் ஒரு அறையை பதிலாய் அளித்தார். இவனை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி, யூதர்களுக்கான பயிற்சி பள்ளியில் சாலொமோனை சேர்த்தார். லண்டனில் இயேசுவை எற்றுகொள்ளுதல்: இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் லண்டன் சென்று தூரத்து உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடும் முயற்சியில் இறங்கினார் சாலொமோன்.

ஒருநாள் வீட்ற்க்கு திரும்புகையில் யூத கிறிஸ்தவர் ஒருவரை வழியில் சந்தித்தார். அவர் அன்று மாலை தன்னுடைய வீட்டில் ஏசாயா 53 அதிகாரத்தை மைய்யமாக கொண்ட வேதபாட வகுப்பு நடக்க இருப்பதாய் தெரிவித்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள அந்த “அவர்” யார்? என்ற கேள்விக்கு பதிலறியும் ஆரவ்த்தில் அந்த வகுப்பிற்கு சென்றார். அந்த “அவர்” இயேசு கிறிஸ்துவே என்றும் அவரே மேசியா என்றும் அவருக்கு தெளிவான பதில் கிடைத்தது.

அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாக அறிக்கையும் செய்தார். சாலொமோனுடைய உறவினர்கள் இந்த செய்தியை அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார்கள்.


சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார்:

சாலொமோனுடைய பெற்றோர் அவருக்கு மிகவும் பிரியமான மாமா ஒருவரை இயேசு கிறிஸ்துவின் மீது சாலொமோன் கொண்டுள்ள விசுவாசத்தை கைவிட்டு தன்னோடு அழைத்து வரும்படி லண்டனுக்கு அனுப்பியிருந்தனர். சாலொமோனோ தன்னுடைய கிறிஸ்துவ விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார்.

இறுதியில் அந்த மாமாவும் அவரோடு வந்திருந்த யூத ரபிகளும் சாலொமோனை சுற்றி நின்று உபாகமம் 28 ம் அதிகாரத்தில் 16 ம் வசனம் முதல் 68 ம் வசனம் வரை சொல்லப்பட்டுள்ள சாபங்களை ஒருமித்து பாட்டாக பாடி பல முறை அவரை சபித்தனர். இதை கேட்க கேக்க சாலொமோனுடைய உள்ளத்தில் பயம் ஆட்கொண்டது.

இந்த நிலையில் திடீரென்று சிலுவையில் அறையுண்ட இயேசுவை தரிசனத்தில் கண்டார். அந்த சிலுவைக்கு மேல் பளிச்சென்று மின்னுகிற ஒரு வசனத்தை கண்டார். “கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்” கலா 3:13 என்ற வசனம் தான் அது. உள்ளத்தில் இருந்த பயம் நீங்கி மகிழ்ச்சி பொங்கியது. குடும்ப உறவு முறிபட கிறிஸ்துவே அவருக்கு தகப்பனாய் மாறினார். யூதர்கள் இரண்டு முறை அவரை கொள்ள முயன்று தாக்கினார். மரணம் ஏற்படாமல் கர்த்தர் காப்பாற்றினார்.

பின்னர் லண்டனிலுள்ள பிரிசிபிட்டேரியன் மிஷன் (PRESBYTERIAN MISSION) ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். பிரேசிலுக்கு மிஷனரியாய் சென்ற சாலமோன் கின்ஸ்பர்க்: ஒரு நாள் இந்தியாவில் இருந்து வந்திருந்த மிஷனரியை சந்தித்து பேசிகொண்டிருக்கையில் மிஷனரி தாகம் சாலொமோனுக்கும் ஏற்ப்பட்டது. பிரேசில் நாடு கத்தோலிக்கர்கள் மிகுந்த நாடு. அந்த நாட்டிற்க்கு சத்தியத்தை அறிவிக்க தன்னை அர்ப்பணித்தார். அங்கு சென்ற சிறிது நாட்களிலேயே பிரேசில் மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.

பின்னர் கத்தோலிக்கர்களின் சிலை வணக்கத்தைக் கண்டித்து பேச ஆரம்பித்தார். “தூய பேதுரு போப் அல்ல” என்றும் “கந்தையும் எலும்புமான மதம்” என்ற தலைப்பில் கத்தோலிக்க சபைக்கு எதிராக கைப்பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்தார்.

கத்தோலிக்க பாதிரியார்கள் அவர் மீது சினம் அடைந்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். எல்லா வித தீமையினின்றும் இயேசு அவரைக் காத்துக் கொண்டார். எதிர்ப்புகள் சோதனைகள் மத்தியில் சத்தியமாகிய இயேசுவை தைரியமாய் கூறி அநேக மிஷன் மைய்யங்களை உருவாக்கினார்.

தெளிப்பு ஞானஸ்நானமும் முழுக்கு ஞானஸ்நானமும்: இங்கிலாந்தின் சபை (Church of England) வழக்கத்தின்படி மக்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் (Sparkling Babtism) கொடுத்து வந்தார் சாலமோன் கின்ஸ்பர்க்.

இந்த நிலையில் பேப்டிஸ்ட் மிஷனரிகள் அவரை சந்தித்து, தெளிப்பு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதல்ல என்பதையும், முழுக்கு ஞானஸ்நானமே (Immersion Babtism) சரியானது என்றும் வேத ஆதாரத்தோடு விளக்கினார்கள். தெளிப்பு ஞானஸ்நானமே சரி என்று நம்பியிருந்த சாலொமோனுடைய கண்களை கர்த்தர் திறந்தார்.

தான் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதை அறிந்த இங்கிலாந்து சபை சாலமோன் கின்ஸ்பர்க்கை கடுமையாக கண்டித்தது.

இங்கிலாந்து சபையிலிருந்து வந்த கடிதத்திற்கு பின்வருமாறு பதில் எழுதினார், “ஞானஸ்நானத்தை குறித்து வேதத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் எலிசா தீர்க்கதரிசி குஷ்டரோகியாகிய நாகமானை யோர்தான் நதியில் “ஏழுதரம் ஸ்நானம் பண்ணு” (2 இரா 5:1௦) என்று சொன்னதை வாசிகின்றோம். தேவனுடைய மனுஷன் சொன்னபடி யோர்தானில் எழுதரம் முழுகின பொழுது அவன் சுத்தமானான் (வ.14) என்று வாசிகின்றோம். இதைப் பற்றி எபிரேய கிரேக்க மொழி வல்லுநர் டாக்டர். டேவிட் சி. கின்ஸ்பர்க் (Doctor. David C. Ginsburg) இவ்வாறு கூறியுள்ளார்.

பழைய ஏற்ப்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மூழ்கி ஞானஸ்நானம் செய்தல் என்ற அதே எபிரேய வார்த்தை தான் புதிய ஏற்பாடில் கிரேக்க மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஆகவே இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து சபை அவருக்கு அளித்து வந்த உதவியையும் தொடர்பையும் துண்டித்தது. லண்டனில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண்ணும், திருமண நியமத்தை முறிக்க போவதாக கடிதம் எழுதினாள். எனினும் தனது கோட்பாடிலிருந்து சற்றேனும் விலகவில்லை சாலமோன் கின்ஸ்பர்க்.

“வேதத்தை ஆராய்ந்து படி. முழுக்கு ஞானஸ்நானமே வேதம் அங்கிகரிக்கும் முறை என்பதை உன்னால் விளங்கி கொள்ள முடியாவிட்டால், நமது திருமண நியமத்தை முறித்து கொள்ளலாம்” என்று எந்த தயக்கமுமின்றி பதில் எழுதினார்.


பிரேசில் நாட்டில் மிஷனரிப் பணி:

பிரேசில் நாட்டின் கிராமங்கள் தோறும் சுற்றித் திரிந்து இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று போதித்து அநேக மக்களை இயேசுவண்டை நடத்தினார் சாலமோன் கின்ஸ்பர்க். சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளுக்கு வேதத்தை போதித்து அநேகரை மனம் திரும்ப செய்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பை முதன்மைப்படுத்தி பேசி அநேகரை இரட்சிப்பிற்க்குள் வழிநடத்தினார். தனிமனிதனாக உள்ளூர் கிராம மக்களின் துணையோடு அநேக சபைகளை நிறுவினார்.

35 வருட்ங்கள் இவர் செய்த மிஷனரி பணியினால் பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் சிக்குண்டிருந்த அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டு தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர்.

1927ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி தான் மிஷனரி பணி செய்த பிரேசில் நாட்டிலேயே கோதுமை மணியாய் வீழ்ந்தார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

கிறிஸ்துவிடம் நெருக்கி வரும் போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்களைக் குறித்த வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது என்று கூறிய ஜேம்ஸ் சால்மர்ஸ், நாகரீகமற்ற, மனித மாமிசம் உண்ணும் கொடூர பழங்குடிகள் நிறைந்த பசிபிக் கடலில் உள்ள நியு கினியா தீவிற்கு மிஷனரியாக சென்று துணிவுடன் நற்செய்தியை இறுதியில் பழங்குடி மக்களுக்கு உணவானார். இன்றைக்கு அந்த தீவில் உள்ள மக்களில் 96 சதவீதம் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

ஒரு காலத்தில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் இயேசுவை ஆராதித்து வருகின்றார்கள். இதற்காக தந்து உயிரை தியாகம் செய்த மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (James Chalmers) என்பவரது வாழ்க்கை வரலாறை இந்த காட்டுரையில் காண்போம்.

மனித மாமிசம் உண்பவர்கள் நைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்ததாக உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகசிரிய விடுதலைப் படைபோர் செய்த போது,விடுதலைப் படையிடம் பிடிபட்ட சிரிய இராணுவச் சிப்பாய் ஒருவரின் இதயத்தை வெட்டியெடுத்து, போராளி ஒருவர் உண்ற சம்பவம் நடந்தேறியது.

அவரது உடலத்தின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுக்கும், ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடிவரும் பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவரான அபு சக்கார் என்பவர், ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான இராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்’ என்று பலமாகக் கூறியபடி அதனை உண்றார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கும் நாம் வாழும் உலகத்தில் நடக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது. இவர்கள் நாகரீகம் அறிந்தும், தீய சக்திகளின் பிடியாலும், குருட்டு மதங்களை பின்பற்றுவதாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய நாகரீகம் வளர்ந்திராத நாட்களில், தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமும் மனித மாமிசத்தை உண்ணும பழக்கம் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது அப்படிப்பட்ட தீவுகளில் வாழ்கின்ற மக்கள், நம்மைப்போல மிகுந்த நாகரீகத்துடன் வாழ்கின்றார்கள். ஒரு காலத்தில் யார் அந்த தீவிற்கு சென்றாலும் நரபலியாகிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அந்த தீவுகள் எல்லாம், அநேகர் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களாக மாறிவிட்டது.

இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? மரணமே ஆனாலும் பரவாயில்லை. கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தே தீருவோம் என்று, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த மக்களிடமாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்ற மிஷனரிகளே.

ஜேம்ஸ் சால்மர்ஸ்-ன் இளமைப் பருவம் 1841 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி “ஜேம்ஸ் சால்மர்ஸ்” ஸ்காட்லாந்து தேசத்தில் கல்சிற்ப ஆசாரியின் மகனாக பிறந்தார். 18 வயதில் தனது ஊரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டு இயேசுவின் அன்பை அறிந்து, தமது வாழ்க்கையை மிஷனரியாக அற்பணித்தார். பட்ட படிப்புகளை முடித்தவுடன் தமது 26ம் வயதில் லண்டன மிஷனரி சங்கத்தில் இணைந்தார். “ரரோடோங்கா” தீவில் கிறிஸ்துவின் பணி 1867ம் வருடம்மே மாதம் “ரரோடோங்கா” (Rarotonga) என்ற தீவிற்கு மிஷனரியாக வந்திறங்கினார்

ஜேம்ஸ் சால்மர்ஸ்.கிறிஸ்துவை அறியாத “ரரோடோங்கா” தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியை வெகு விரைவில் கற்று,அந்த மொழியிலே கிறிஸ்த்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தார். அந்த தீவில் பத்து வருடம் மிஷனரி பணி செய்து இருளின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை மெய்யான ஒளியாகிய இயேசுவினிடத்தில் சேர்த்தார்.

தீவு நாடான நியு கினியா-வில் கிறிஸ்துவின் பணி 1877 ம் வருடம்தமது 36ம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு மேல் வடபகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான “நியு கினியா” விற்கு(New Guinea) தனது மனைவியோடு சென்றார்

ஜேம்ஸ் சால்மர்ஸ். அந்த தீவுகளில் வசித்த மக்கள் மனித மாமிசம் உண்பவர்களாக இருந்தனர். ஆபத்து மிகுந்த அந்த மக்களுக்கு சுவிசேஷம் சொல்ல போகையில் தமது கையில் எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்து செல்ல மாட்டார். ஏனென்றால் கையில் ஆயுதங்களோடு சென்றால் வெள்ளை மனிதன் நம்மை தாக்க வந்திருக்கிறான் என்று சொல்லி ஓடுவார்கள். இல்லையென்றால் தாக்க தொடங்குவார்கள். ஆபத்து நிறைந்த பழங்குடி மக்களின் மேல் கரிசனை கொண்டவராய் கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்தார். 105 க்கும் அதிகமான கிராம தீவுகளுக்கு சென்று கிறிஸ்துவின் அறிவித்தார். 90 கிராம தீவுகளில் முதலாவது சென்ற வெள்ளை மனிதனும் இவரே. இயேசுவின் அன்பை எடுத்து சென்றவரும் இவரே ஆவார்.


பழங்குடி மக்களுக்கு உணவாகுதல்

1901 ம் வருடம் ஏப்ரல் 8 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறாக இருந்தது. முந்தைய நாளில் “கோரிபாரி” (Goaribari Island) என்ற தீவிற்கு படகில் சென்றிருந்த ஜேம்ஸ் சால்மர்சை அத்தீவின் பழங்குடி மக்கள் சூழ்ந்து கொள்ளவே, படகை விட்டு அவர் இறங்காமல் நாளை வருவதாக கூறி தனது பகுதிக்கு வந்தார்.

அடுத்த நாள் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை முடித்து விட்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியை அறிவிக்க ஆபத்து நிறைந்த “கோரிபாரி” தீவிற்கு மீண்டும் சென்றார். ஒலிவர் டோம்கின்ஸ் (Oliver Tomkins) என்ற மிஷனரியும் உடன் சென்றார். இவர்களது வருகையால் மிகவும் மகிழ்ந்த அத்தீவின் பழங்குடி மக்கள் இருவரையும் உற்சாக வரவேற்புடன், புதிதாய் அமைக்கப்பட்ட “தூபு” (Dubu) என்று அழைக்கப்படும் கேளிக்கை குடிசைக்கு அழைத்து சென்றனர்.

அந்த இடத்தில் மனிதர்களை சாகும் வரை சண்டையிட வைத்து பின்னர் அவர்களை பலியாக்கி உணவாக உண்பார்கள். இதை அறிந்திராத ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தவன்னமாய் “தூபு” என்ற குடிசைக்கு சென்றனர்.

மரத்தினால் ஆன விக்ரகங்களை சுற்றிலும் அநேக மனித மண்டை ஓடுகள் குவிக்கபட்டிருந்தது. இருவரும் அதை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, எந்தவித எச்சரிப்பும் இன்றி அந்த பழங்குடி மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர்.

சில நிமிடங்களில் அவர்களது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் கொதித்து கொண்டிருந்த குழம்பில் போடப்பட்டது. ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும், இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஈஸ்டர் நாளில், இயேசுவை அறிவித்துக்கொண்டே அந்த பழங்குடி மக்களுக்கு உணவாக மாறினர்.

ஜேம்ஸ் சால்மர்ஸ் மற்றும் ஒலிவர் டோம்கின்சின் உடல்கள் விதையாகவும், அந்த மக்களுக்கு உணவாகவும் மாறியதை அறிந்து அநேக மிஷனரிகள் “நியு கினியா” தீவை நோக்கி சென்று இயேசுவின் அன்பை அறிவித்தனர்.

அநேக மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவு, 7 கோடிக்கும் அதிமான மக்கள் வாழும் அந்த தீவுல், இன்றைக்கு 96% கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான், மிகுந்தவிளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24) மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். முதலாவதாக நாம் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து சாதித்து அநேகருடைய வாழ்வில் கிறிஸ்துவை வளர்க்க வேண்டும். முடிவிலே அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவுக்காய் நாம் உருமாறி பின்னர் விதையாய் மாறவேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

ஆனால்,அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பும் அல்ல. அதினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் அல்ல.நீங்களும் நானும் கிறிஸ்துவைப் போல உருமாறி அவருக்காய் வாழ்ந்து சாதிக்க அழைக்கபட்டுள்ளோம். விதையாய் மண்ணில் வீழ்ந்து மிகுந்த விளைச்சலை கொடுக்கும் படியாகவும் அழைக்கபட்டுள்ளோம். எங்களை நேசித்து வழிநடத்தும் தெய்வமே, இயேசுவே,

ஜேம்ஸ் சால்மர்ஸ் போன்று துணிவுடன் உமக்காய் ஊழியம் செய்வேன். கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பேன். இயேசுவின் மூலமாய் ஜெபிகின்றேன் பிதாவே. ஆமேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நான் பாவிதான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான,பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம்.இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட்(Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை மிகவும், சந்தோஷமாய், எதைக் குறித்தும் கவலையில்லாதவராக, உற்சாகமானவராய், பாடிப் பறக்கும் பறவையைப் போல வாழ்ந்து வந்தார்.

அவர் 30 வயதை தாண்டிய போது, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அது அவரை படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியாதபடி, அந்தப் பறவையின் காலை ஒடித்துப் போட்டதுப் போல படுக்கை கிடையாக்கிப் போட்டது. அந்த அம்மையார் மனம் ஒடிந்துப் போனார்கள். தேவன் மேலும் உலகத்தில் உள்ள யாவர் மேலும் அவர்களுக்கு கோபம் வந்தது. சுயபரிதாபம் அவர்களை ஆட்கொண்டது.

அப்பொழுது அவருடைய தகப்பனார், தங்கள் குடும்ப உறவினரும் கர்த்தருடைய ஊழியரும் பாடகருமான டாக்டர், சீசர் மலான் (Dr. Caesar Malan)என்னும் ஊழியரை தங்களது வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்துப் பேசினால் மகளுடைய இருதயம் மாறும் என்று நினைத்தார். அதுப்போல, அந்த டாக்டரும் வந்து சார்லட்டிடம் பேசிய போது, அவர்கள் தன் இருதயத்திலுள்ள வெறுப்பை எடுத்துக் கொட்டினார்கள். தேவனைப் பற்றிக் குறை கூறினார்கள்.

அதைக் கேட்ட அந்த டாக்டர், ‘நீங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள், வெறுப்பையும், கோபத்தையும் உள்ளடக்கி, சோர்ந்துப் போயிருக்கிறீர்கள்’ என்றுச் சொன்னார். அப்போது, சார்லட், ‘நான் சந்தோஷத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும்’என்றார்.

அப்போது அவர்கள், ‘நான் என்வாழ்வில் சில காரியங்கள் சரிசெய்ய வேண்டி உள்ளது. அவற்றை சரிசெய்தப் பிறகு நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்" என்றுக் கூறினார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள், அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். மட்டுமல்ல,உங்கள் வெறுப்பு, கோபத்திற்கு பதிலாக, சந்தோஷத்தையும் சமாதானத்தையம் தருவார்’ என்றுக் கூறினார்.

அப்போதே அந்த அம்மையார், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அந்த நாளில்தானே இரட்சிக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து அந்த நாளை தனது ஆவிக்குரிய பிறந்தநாள் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடினர்கள். பதினான்கு வருடங்கள் கழித்து, அவருடைய சகோதரன் ஒரு போதகராக இருந்தவர், அவர் ஏழையான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு பள்ளியை ஆரம்பிக்க விழைந்தார்.

ஆனால், அவருக்கு போதிய பண உதவி இல்லாததால், என்ன செய்வது என்று சார்லட்டிடம் கேட்டபோது,அவர்கள் ஒரு பாடலை எழுதி அதை வைத்து, நிதியை திரட்டலாம் என்றுக் கூறினார்கள். அப்போது அந்த சீசர் மலான் என்ற டாக்டர் சொன்ன ‘இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள்’ என்றுச் சொன்ன வார்த்தைகளை, ஞாபகத்தில் வைத்து, இந்தப் பாடலை எழுதி, அதன் மூலம் பணத்தை திரட்டி, அந்தப் பள்ளியைக் கட்டினார்கள்.

சார்லட் தன் வியாதியிலிருந்து கடைசி வரை சுகமடையவில்லை என்றாலும், கடைசி வரை வீட்டிலேயே சிறைப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய இருதயம் தன் சிருஷ்டிகராகிய கர்த்தரை நித்தமும் துதித்து, அவர்கள், தன் தேவனிடத்தில் நேசத்தை வைத்திருந்தபடியால், 150 பாடல்களை இயற்றினார்கள்.

அவை ஆங்கில கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு எழுப்புதலை உருவாக்கிற்று என்பது உண்மை. தங்கள் பெலவீனத்திலும் கர்த்தருக்கென்று பாடல்களை இயற்றி பாடிய அந்தக் கவிக்குயில், தனது 82ஆவது வயதில், நித்தியமான சுகத்தோடு, பெலவீனங்கள் மாறி தான் நேசித்த தேவனோடு என்றென்றும் வாழும்படி பறந்துச் சென்றது.

ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அல்லேலூயா!

பாகம் 1

வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும், பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர். வேதநாயகம் சாஸ்திரியார் மூலமாய் கிறிஸ்துவ சமுதாயம் பெற்ற பாடல்களை நாம் இன்றளவும் சபைகளில் பாடி வருகின்றோம்.

இவர் 1774 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் தேதி ஞானப்பூ அம்மையாருக்கும், கவிஞர் அருணாசலம் என்ற தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார். அருணாசலம் கிறிஸ்தவராகி தனது பெயரை தேவசகாயம் என்று மாற்றிகொண்டார். வேதநாயகத்திற்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால்

குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்" என்று அழைத்தனர். தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் “எமனுக்குப் படிப்பு வந்தாலும் உனக்கு படிப்பு வராது!” என்று கடிந்து கொண்டார்.

அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றார். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்” எனத் தேற்றினார். சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை.

தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!. பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது.

பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும், சாஸ்திரங்கள் பல கற்ற சாஸ்திரியகவும் சர்வ வல்லமையுள்ள தேவன் வேதநாயகனை உருவாக்கினார்.

இப்படியாய் வேதநாயகம் சாஸ்திரியரை பலர் இகழ்ந்து பேசினாலும் கர்த்தர் அவரை ஏற்ற வேளையில் அவர்களுக்கு முன்பாக உயர்த்தினார். உங்களை அன்றைக்கு கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே (2 சாமுவேல் 22:1-3) என்று பாடி கர்த்தருடைய நாமத்தை உயர்த்தியது போல தேவன் இந்த நாளில் உங்களையும் உயர்த்துவாரக. ஆமேன். வேதநாயகம் சாஸ்திரியருடைய வாழ்க்கையின் தொடர்ச்சியை நாளை காணலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.


பாகம் 2

ஒரு நாள் வேதநாயகம் தன் பள்ளியில் சக மாணவர்களுடம் பாடம் படித்துகொண்டிருந்தார், அப்பொழுது ஒரு ஆள் உயரத்தில் காணப்பட்ட ஒரு சிலுவை ஆகாயத்திலிருந்து இறங்கி வேதநாயகனுக்கு சமீபமாய் வருவதை கண்டார். இந்த தரிசனத்தை காணும் போது அவருக்கு வயது 9. அந்த தரிசனத்தை பற்றி தன் பாட்டியிடம் வேதநாயகம் சொன்னபோது,

"இது எல்லோருக்கும் கிடைக்க கூடிய தரிசனம் அல்ல, இது இயேசு ஸ்வாமியினுடைய தரிசனம்; உன் வாழ்க்கையில் பெரிய அதிசயங்கள் நடக்கும்” என்றார்கள்,

அன்று முதல் வேதநாயகனுடைய வாழ்க்கை மாறியது. ஒரு முறை ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சைக்கு செல்லும் பொது வேதநாயகத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் "நீ என்னுடன் தஞ்சைக்கு வருகிறாயா உன்னை ஒரு சிறந்த மனிதனாக்குவேன் என்றார்" நல்லது ஐயா நான் உங்களுடன் வருகிறேன் என்றார்.

சில நாட்கள் கழித்து தன் தந்தையின் அனுமதியோடு வேதநாயகன் தஞ்சை புறப்பட்டார். ஸ்வார்ட்ஸ் ஐயர் மூலம் வேதநாயகத்திற்கு மனதிலும், ஆன்மாவிலும் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டது.

வேதநாயகன் தரங்கம்பாடியில் இருக்கும்போது தாமே ஒரு பாடலை இயற்றி பாடினார். இதை கேட்ட ஸ்வார்ட்ஸ் ஐயரின் உள்ளம் பூரித்தது, அப்பொழுது அவருக்கு வயது 15. 1809 ஆம் ஆண்டு ஞானதீப கவிஞர் என்ற பட்டதை சென்னை சீர்திருத்த சபையினரால் அவருக்கு வழங்கப்பட்டது.

சாஸ்திரியாருக்கு திருமணமான பின்பு நாட்டில் ஏற்ப்பட்ட பஞ்சத்தின் காரணமாக உணவின்றி தவித்தார். அது போன்ற ஒரு சமயத்தில் வயல் வெளியில் தனது பிள்ளைகளுடன் அமர்ந்து வயலின் வாசித்து தேவனை துதிப்பாராம்.

அவ்வாறு உணவின்றி தவித்த வேளையில் சாஸ்திரியார் தேவனை உயர்த்தி இவ்வாறு பாடலை எழுதினார் தேவா இரக்கம் இல்லையோ – இயேசு தேவா இரக்கம் இல்லையோ எல்லாம் அறிந்த பொருளே எங்கள் இல்லாமை நீக்கும் அருளே ஆ . . . ஆ . . . ஆ . . . பொல்லா மனதுடைய கல்லான பாவிகளை - கொடும் கொல்லாதருள் புரியும் நல்லாயன் இயேச நாதா - தேவா 2 . எங்கும் நிறைந்த ஜோதியே ஏழைப் பங்கில் உறைந்த நீதியே ஆ . . . ஆ . . . ஆ . . . சங்கடமான பாவ சங்கீதங்களை நீக்கும் - எங்கள் துங்க இஸ்ரவேலின் வங்கிஷ கீரீடாதிபதி - தேவா

சாஸ்திரியாரின் வீட்டில் , மனைவி , மக்கள் . வேலை செய்பவர்கள் , அவரிடம் கற்க வந்த மாணவர்கள் என்று ஏறத்தாழ 30 பேர் அனுதினமும் அவருடைய வீட்டில் தான் சாப்பிடுவார்கள் . இப்படி அனைவருக்கும் சாப்பாடு போடும் அளவிற்கு அவர் ஒரு பெரும் செல்வந்தரும் அல்லர் . வறுமை உண்டு , ஆனாலும் , தன்னிடம் இருந்த அனைவருக்கும் அன்னமிட்டு பராமரித்து வந்தார்கள் , சாஸ்திரியார் அவர்கள் .

ஒரு நாள் , மாலை வேளையில் சாஸ்திரியாரின் மகள் ஞானதீபம் சாஸ்திரியார் ( முதலாவது பெண் சாஸ்திரியார் இவர்தான் ) , தன்னுடைய தகப்பனாரிடம் , “ ஐயா , இன்று நம் அனைவருக்கும் சாப்பாடு இல்லை , பொருள் வாங்குதவற்குப் பணமும் இல்லை , எனவே , இன்றைக்கு நாம் அனைவரும் உபவாசம் இருந்து ஜெபம் பண்ணி , தண்ணீரைக் குடித்துப் படுத்துக் கொள்வோமா ? ” என்றார் .

உடனே , சாஸ்திரியார் அவர்கள் மிகுந்த துக்கம் நிறைந்தவராக , ஆனால் , அதை ' வெளிக்காட்டாது . தன் மகளிடம் , “ நீ ஒன்றும் கவலைப்படாதேயம்மா . . . நான் அந்த மரியாள் மகனோடு பேசிக் ' கொள்கிறேன் ” என்று கூறிவிட்டு தனிமையில் சென்று ' கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பித்தார் . அந்த ' வேளையில் அவர் ஜெபத்திலே , ஆண்டவரைத் ' நோக்கிப் பாடிய பாடல் தான் , *தேவா இரக்கம் ' இல்லையோ ?* என்பதாகும் . அந்தப் பாடலின் ' வரிகள் இப்படியாக வருகின்றது , *எல்லாம் அறிந்த பொருளே* *எம்இல்லாமை நீக்கும் அருளே . . . என்று !* அவர் ஜெபித்து , பாடி முடித்துவிட்டு ' எழுகின்ற வேளையிலே .

வீட்டு வாசலின் முன்பு ' வண்டிச்சத்தம் கேட்டது . இரண்டு மாடு பூட்டிய ' பெரிய கட்டை வண்டிகள் வந்து நின்றது . சாஸ்திரியார் அவர்கள் வெளியே வந்து பார்த்தார் . வண்டி நிறைய பெரிய பெரிய கல்யாண வீட்டில் சமைக்கும் பாத்திரங்கள் , விருந்துச் சாப்பாடு மணம் வேறு மூக்கைத் துளைத்தது . சாஸ்திரியாரைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியைவிட்டுக் குதித்து இறங்கி , “ ஐயா , நீங்கள் தான் சாஸ்திரியாரா ” என்றார் ? “ ஆமாம் , நான்தான் ” என்றார் சாஸ்திரியார் " . " ஐயா , நான் பக்கத்து ஊரிலிருந்து வருகின்றேன் ,

எங்கள் எஜமானின் வீட்டில் இன்று ஒரு திருமணம் நடைபெற்றது அதற்கு அழைப்பித்தவர்களில் அநேகம் பேர் இன்று வரவில்லை . எனவே விருந்து சாப்பாடு அதிகம் மீதமாகிவிட்டது . எங்கள் எஜமான் பக்கத்து ஊரில் சாஸ்திரியார் ஒருவர் இருப்பார் அவரிடம் கொடுத்து வா என்று அனுப்பினார் ” என்று கூறினார் . சாஸ்திரியார் அவர்களுக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை , அவர் கண்கள் ஆனந்தத்தால் குளமானது . வண்டிக்காரர் அனைத்து அறுசுவை உணவுகளையும் வீட்டில் இறக்கி வைத்துச் சென்றுவிட்டார் .

சாஸ்திரியார் தன்னோடு இருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார் , இன்றைக்கு இரவு நாம் மோசமான சாப்பாடு சாப்பிடக்கூடாது என்றுதான் , நம்மிடம் சாப்பாடும் , பணமும் இல்லை . நாம் அறுசுவை உணவு உண்ண வேண்டும் என்பது இறைவனின் சித்தம் என்றார் .

எத்தனை உண்மை ! -- இந்த பாடல் இன்றளவும் சபைகளில் பாடப்பட்டு தேவனுடைய நாமம் உயர்த்தப்பட்டு வருகின்றது. யாரிடம் கையேந்தி நிற்காமல் இறைவன் இயேசுவையே சார்ந்து வாழ்ந்த சாஸ்திரியார் போல நாமும் தேவனுக்கை வைராக்கியமாய் வாழுவோமாக. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய் (ஏசாயா 58:11) என்ற வேதவாகியத்தின்படியாய் சாஸ்திரியார் குடும்பத்தை வழிநடத்திய இயேசு இன்றைக்கு நம்மையும் வழிநடத்த போதுமானவராக இருகின்றார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ---------------------


பாகம் 3

தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், சாஸ்திரியாரின் சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார். “குற்றாலக் குறவஞ்சி” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார்.

இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார். பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான்.

இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா?” என்று கவலையுடன் அவர் மனைவி கேட்டார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அப்பொழுது எழுதிய பாடலே “இயேசுவையே துதி செய் நீ மனமே இயேசுவையே துதி செய்” என்ற பாடலாகும்.

அடுத்த நாள் மன்னர் அவையில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. சாஸ்திரியார் என்ன பாட்டுப்பாட போகிறார் என்று கேட்பதற்காக. எல்லாரும் சூழ நின்று பார்த்திருக்க, மன்னர் சரபோஜி அவரையே நோக்கி கொண்டிருந்தார்.

மன்னர் கேட்டுக்கொண்டபடியே அவர்கள் தெய்வத்தை பற்றி ஒரு பல்லவியையாவது சாஸ்திரியார் பாடுவார் என்று எதிர்பார்த்திருக்க முன்தினம் இரவில் கர்த்தர் கொடுத்த காலத்தால் அழியாத அந்த பாடலை தைரியமாய் தன்னுடைய கணீர் குரலால் கிறிஸ்துவை உயர்த்தி பாட ஆரம்பித்தார் இயேசுவையே துதிசெய் - நீ மனமே இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய் மாசணுகாத பராபர வஸ்து நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதி செய் என்று தொடர்ந்து மூன்று அடிகளை மனமுருக பாடி முடித்தார். உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த மன்னரிடமிருந்து கைத்தட்டல் ஆரம்பித்தது. இறைவன் இயேசுவின் மீது சாஸ்திரியார் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான் மன்னர் சரபோஜி. “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான். இன்றளவும் சபைகளில் இந்த பாடல் பாடப்பட்டு, தேவனுடைய நாமம் மகிமைப்பட்டு வருகிறது. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.


பாகம் 4

வேதநாயகம் சாஸ்திரியார் ஒரு முறை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு செல்ல நினைத்து,நாகப்பட்டினம் வந்து யாழ்ப்பாணம் செல்லும் தோணியில் ஏறி அமர்ந்தார், வெகுநேரம் ஆகியும் தோணி புறப்படாததினால் தோணி ஏன் புறப்படவில்லை என்று கேட்டார்.

அதற்கு தோணி ஓட்டுபவர் "எப்பொழுது வடகாற்று வீச துவங்குதோ அப்போதான் தோணி புறப்படும் என்றார்",அதற்கு வேதநாயகன் தோணி ஓட்டுபவரை பார்த்து "வடகாற்று எப்போது வரும் என்று கேட்டார்.அதை சொல்ல தெரியாது "என் குல தெய்வத்திற்கு கோழி வெட்டி,கோடாங்கி அடித்து கேட்க வேண்டும் என்றார்,

அதற்கு வேதநாயகன் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி வடபுறம் திரும்பி ஆண்டவரை நோக்கி ஒருபாடலை பாடதொடங்கினர்,அவர் பாடிகொண்டிருக்கும் போதே வடகாற்று வீச துவங்கிவிட்டது.இந்த காட்சியை கண்ட படகோட்டி அப்படியே பிரம்மித்து ஆண்டவரை விசுவாசித்து படகை செலுத்தினர்.

இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்ட நாள் முதல், தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். 1864ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 தேதி தன் ஊழியகாரனாகிய சாஸ்திரியாரை தேவன் இம்மையிலிருந்து, மறுமைக்கு எடுத்துக்கொண்டார். அந்த நாள் ஒரு Easter நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் தஞ்சையில் உள்ள St.Peter's சர்ச் பின்புறத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. "அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்" (எபிரெயர் 11:4 ) என்ற வசனத்திற்கு ஏற்றது போல், சாஸ்திரியாருடைய குடும்பம் இன்றளவும் கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்தி வருகிறார்கள். சகோதரன் கிளமெண்ட் சாஸ்திரியார் அவர்கள் வயலினில் பாடல்களை வாசித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். சங்கை தே.வேதநாயகம் சாஸ்திரியார் மரித்தும் தன் பாடல்கள் மூலம் இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

No comments:

Post a Comment