Friday, 17 July 2020

சிறுகதை 292-306

 

".  

292                   அன்பு

ஒரு காட்டில் இரண்டு மான்கள் தாகத்தோடு தண்ணீருக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிந்தன. கடைசியில் ஓர் இடத்தில் மிக கொஞ்சம் தண்ணீரைக் கண்டு, ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண்மான் காத்திருந்தது. பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மான் காத்திருந்தது.

கடைசியில், ஒன்றில்லாமல் மற்றது குடிக்காது என்பதை அறிந்த அவை இரண்டுமே தண்ணீரில் வாய் வைத்தது. ஆனால் தண்ணீரோ குறையவில்லை. காரணம், இரண்டுமே ஒன்றுக்கொன்று பாசாங்கு செய்து, "மற்றது குடிக்கட்டும்" என்று காத்திருந்தன. அன்பு, தியாகஞ் செய்யும்.

 "ஒருவன் தன் சிநேகிதருக்காகச் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமாக அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (#யோவான் 15:13)

293                சினேகம்

ஓர் கணவனும் மனைவியும் ரெயில்வே பாதையைக் குறுக்க நடந்து செல்லும்போது மனைவியின் கால்கள் தண்டவாளத்திற்கும் மரக் கட்டைக்கும் இடையில் நன்றாக சிக்கிக்கொண்டது. மனைவியின் காலை எடுக்க கணவன் ஆனமட்டும் முயற்சித்தான். முடியவில்லை.

ஒரு துரித இரயில் வண்டி வேகமாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நகர முடியாத மனைவி, "ஐயோ, அத்தான் நீங்கள் தப்பித்துகொள்ளுங்கள் என்று வேண்டினாள்.

ஆனால் அவனோ, தன் மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் நிமித்தம், தொடர்ந்து அவளை காப்பாற்ற முயன்றுக்கொண்டிருந்தான்.  கடைசியில் விரைவாக வந்த இரயில் வண்டி மோதி இருவரும் ஒன்றாகவே மரித்தார்கள்.

நம் அருமை ஆண்டவர், "தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்த படியே, முடிவுபரியந்தமும் அவர்களிடம் அன்புவைத்தார்" (யோவான் 13:1)

அவர் சிலுவையைக் கண்டு பயந்து ஓடி விடாமல், உங்களுக்காக பாடு மரணங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இத்தனை அன்புள்ள இரட்சகரை உங்களால் எப்படிப் புறக்கணிக்க முடியும்?

 "ஒருவன் தன் சிநேகிதருக்காகச் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமாக அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (#யோவான் 15:13)



294          புத்திசாலி ராணுவவீரர்
     
அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நூற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.      
அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார்.

 இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.      “இவ்வளவு தூரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார். 

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.      

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார். 

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.      

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”      
“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி. “சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.     

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன். இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.      “இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம். 

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி. பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். 

ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார். நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.      “இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. “இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’ 

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது. இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…? நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது. அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
     
பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை. ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார்.

 அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது. பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.
    
 “இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.  ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார். 

என் அன்பு வாசகர்களே,
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே இக்கதையின் கருத்து. புத்தி மாத்திரமல்ல நம்பிக்கை, தைரியம் ஆகிய இவையும் இருந்தால் எதையும் சுலபமாய் வெல்லலாம்.

இக்கதையில் அமெரிக்க ராணுவ வீரர் தான் இருக்கிற பீப்பாய் தன்னை சிதறடிக்காது என்ற நம்பிக்கையில் தான் தைரியமாக இருந்தார் ஆனால் ஆங்கிலேய அதிகாரியோ நம்பிக்கையற்றவராய் காணப்பட்டதால் அந்த போட்டியில் தோல்வியை தழுவுகிறார்.

அதுபோலவே நாமும் நிற்கின்ற இடம் எப்படிப்பட்டது என்பதை அறிந்தால் தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். நாம் கற்பாறையில் நிற்கின்றோமா?? அல்லது மண்ணில் நிற்கின்றோமா?? என்பதை நாம் தான் நிதானித்து அறிய வேண்டும். இதை பிரதிபலிக்கும் ஒரு காரியத்தை இயேசுவும் கூறுகிறார் இவ்விதமாக

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன். 
லூக்கா 6:47

48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 
லூக்கா 6:48

49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 
லூக்கா 6:49

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை அநேக விதமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் ஆனால் அவைகளின்படி செய்ய வேண்டும் என்றால் தான் கடினமாக தோன்றுகிறது. தேவனுடைய வார்த்தையின்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் அந்த அமெரிக்க வீரனைப்போல இருந்த இடத்தில் இருந்தே சமாளிக்கும் திறனை தேவன் தருவார்.

மழை, புயல், பூகம்பம் என எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும் கற்பாறை அசையாமல் இருப்பது போல நாமும் நம் வாழ்க்கையில்  தேவ வார்த்தையை கைக்கொண்டு நம் அஸ்திவாரத்தை கற்பாறையாகிய இயேசுவின் மேல் போடுவோம் அசையாமல் என்றும் நிலைத்திருப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


    

295        முகம்_பாா்க்கும்_கண்ணாடி ..


அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? 
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!  ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி  தானே அது?”

“ஆமாம்!”

“பிறகு 
ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவா்  புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”

 " பாடமா? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? ஐயா "

 அப்படிக் கேள். 

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
' எத்தணை ஆழமான உவமை இது!  '

“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது. "

“எப்படி? ஐயா ”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? "

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ 
அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். 

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! ஐயா அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! ஐயா அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய் தம்பி. 
அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை
யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்காிக்கும்."

பொியவா் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.

என் அன்புக்குாியவா்களே,
பைபிள் சொல்கிறது, 

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையை  வேத வசனமாகிய கண்ணாடியிலே முகம் பார்ப்பது போல் பாா்ப்பதற்கு ஒப்பாக   படிக்கும்போதும் தியானிக்கும் போதும்  நம்முடைய அகத்தின் குறைகளை காண்கிறோம்.   

1. அது  நம்மை விட்டு அகற்றும்படியாக  குறைகளைச் சுட்டிக் காட்டுகிறது.   
மட்டுமல்லாமல்  
ஆவியானவராகிய கர்த்தர் நம்மை  இயேசுவின் சாயலைப் போல அதாவது இயேசுவின் குணத்தைப்போல அப்போதே சரிபண்ணி  மகிமையின்மேல் மகிமையடைய செய்து மறுரூபப்படுத்துகிறாா். -   2 கொ. 3:18

2. நீங்கள்  யாராவது ஒருவர் மேல் குறை காணும்போது தன்னைப் போலவே அவா்களிடம்  மட்டுமே சொல்லி சாி செய்ய வேண்டும்.  எல்லாாிடத்திலும் சொல்லி மகிழ்வுறக் கூடாது.  

3. வேறு யாராவது உங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டும் பொது அவா்களை வெறுத்து விடாதீா்கள்.  
 
5. நீதிமான என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும், அது என் தலைக்கு எண்ணையைப் போலிருக்கும், என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை. - சங் 141:5
என்ற  மூன்று விஷயங்களைக் 
கற்றுக் கொள்ளுங்கள், கைக்கொள்ளுங்கள்.  
அதனால் உங்கள் வாழ்க்கை மிக மிக மேன்மையுள்ளதாயிருக்கும்.  

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !


296  தேவதையா_சூனியக்காாி_கிழவியா

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ....
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் 
சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், 
தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கும் நாடு கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்

நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள்,

"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; 

ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் 
"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், 

முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°
ஆம்! என் அன்புக்குாியவா்களே, 

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். 
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். இதை 
அனைவரும் புாிந்து செயல்பட்டால் எப்பவும் உங்கள் மனைவி  தேவதையாகவே  காட்சி தருவாள். 

பைபிள் சொல்கிறது.. 
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். (நீதிமொழி. 14 :1)

குடும்பத்தைக் கட்டுவதற்கு  தேவன் ஒரு புருஷனுக்கு மனைவியைத் தருகிறாா். அதுவும் ஏற்ற துணையாகத் தருகிறார்.  

துணை என்ற வாா்த்தைக்கு ஆங்கிலத்தில் ஹெல்பா்  (HELPER)  என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. புருஷன் ராஜாவானால் மனைவி மந்திாியாக இருக்க வேண்டும். 

குடும்பத்திற்கு ,பணம் சம்பாதிப்பது புருஷன் குடும்பத்தை நடத்துவது, ஆலோசனை செய்வது  
பணத்தை சேமிப்பது அதை எப்படி செலவு செய்வது, பிள்ளைகளுக்குாிய காாியங்கள், புருஷனுக்குாிய காாியங்கள்  நிலம்,வீடு,காா்  வாங்குவது, விற்பது, உணவுக்கடுத்த விஷயங்கள்,குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வருவது போன்ற அனைத்துக்குமே  தேவன் மனைவியை மட்டுமே  வைத்துள்ளாா். அவா்கள் தேவதையாகவே உங்கள் குடும்பத்தில்  வலம் வருவாா்கள். 

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள், சங்.128:3

உங்கள் மனைவி சந்திரனைப் போல் அழகும்,
சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிப்பாா்கள்.    - உன் 6:10

எனவே  உங்கள் மனைவி தேவதையாகவே  வைத்துக் கொள்ளுங்கள்.. 

உங்கள் மனைவியைத் தவிர
வேறு யாரும் தலையிட்டால் அந்த குடும்பம் சிதைந்து கடனிலேயும்,  இல்லாமையிலேயும், தரித்திரம், வறுமை, கொடுமையிலேயும் தான் காணப்படும். சண்டை, சச்சரவு அடிதடி, இதெல்லாம் கூட நடைபெறும்.  

சாா் நீங்க 
சொன்னது போல  என் மனைவி இல்லையே  னு  நீங்க சொல்வது என் காதுக்குக்கு  கேட்குது சாா்.  
அதுக்கு என் பதில்..  அவுங்க பைபிள் சொல்லிய படி   உங்களுக்கு ஏற்ற துணையாக  இல்லாம கூட  இருக்கலாம்.   

ஆனாலும் 
நீங்க விரும்பினா  தேவன் உங்களுக்கு  ஏற்ற துணையாக உங்கள் மனைவியை மாற்றமுடியும் அதற்கென்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் போதகாிடம் கேளுங்கள். 

அவா் கிருபையின் உபதேசத்தில் ஊழியம் செய்கிறவராயிருந்தால் வேதத்தின் ஆலோசனைகளையும், சிலுவையில்  அறையப்பட்ட இயேசுவின்  ஆசீா்வாதங்களையும் போதிக்கும் போதே அவா்கள் அதை ஏற்ற கொள்ள செய்து  சில நிமிஷங்களிலேயே ஆவியானவரால் ஏற்ற துணையாக மாறி விடுவார்கள்.  

பாரம்பாியமாய் ஊழியம் செய்கிறவராய் இருந்தால் உபவாசம், காணிக்கை ,7வாரம்,12 வாரம் என்று சொல்லி  உங்களை அனுப்பி விடுவாா்கள்.   

ஆனால் ஆவியானவரால் முடியாத காாியம்  ஒன்றுமேயில்லை.  

உங்கள் மனைவி  காத்தருக்குள் இருப்பவா்கள் என்றால் உங்கள் குடும்பம் ஒரு சொா்க்கமே

உங்கள் 
மனைவியிடம் எல்லாவற்றையும்  ஒப்படைத்து பாருங்கள்.உங்கள் மனைவி  குணசாலியான தேவதையைப் போல போலிருப்பாா்கள். 

அவா்களது வாழ்க்கை முறையை நீதிமொழி 31.10 -29 வரையுள்ள வசனங்களில் வாசித்து  அதைப் போலவே உங்கள் குடும்பம்   ஆசீாவதிக்கப்படும்.  என்பது நிச்சயம்!!! 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!

 

297       இட்லியைத் துரத்திய பாட்டி


ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.

அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.

இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.

பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’

அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.

ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.

‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.

அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.

பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.

சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’ என்றது.

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’ என்றது.

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’

‘ஏன்?’

‘இதோ, அரக்கி வர்றா.’ என்றது.

இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.

சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.

‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’

‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.

‘என்னை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டாள் பாட்டி

‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’

கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’

‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.

‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’

‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.

சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.

‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.

‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’

‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.

‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’

‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.

பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.

சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.

மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள்.

பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.

இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.

அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.

அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.

சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.

இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.

சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.

பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள்.

‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.

அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!

என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் அந்த பாட்டியை போலத்தான் நம் மனம்போன போக்கில் வாழ்கின்றோம். எத்தனையோ முறை தேவன் நம்மை எச்சரித்தும் அவர் வார்த்தைக்கு செவி கொடுக்காமல் சொந்த இஷ்டப்படி வாழ தேவையில்லாதை பின்தொடர்ந்து செல்கின்றோம். 

இதற்கு சிறந்த உதாரணமாக அநேகர் இந்நாளில் பயன்படுத்தும் Google Maps ஐ சொல்லலாம். நாம் இதுவரை சென்றிராத இடத்திற்கு முதன்முறையாக செல்லும் போது அதற்கான வழியை காட்டும் நாமும் அதை தொடர்ந்து செல்வோம். சில நேரங்களில் செல்கின்ற பாதை தவறாக இருக்கும் பட்சத்தில் அங்குள்ள மனிதர்களிடம் விசாரித்து சரியான பாதையில் செல்வர். ஆனால் பலரோ தன்மான பிரச்சினை காரணமாக எவ்வளவு எச்சரித்தும் தவறான வழியிலேயே செல்கின்றனர் முடிவோ இந்த பாட்டியை போல எங்காவது மாட்டிக் கொள்கிறார்கள்.

தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழியை ஏற்படுத்தி அதில் நடக்க நம்மை போதிக்கிறார் ஆனால் நாமோ வழி தவறிப்போன ஆட்டைப்போல நம் தேவனுடைய வார்த்தைக்கு செவிசாய்க்காமல் மனம்போன போக்கில் வாழ்கின்றோம். வேதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்,

21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

ரோமர் 1:21

ஆம் அன்பானவர்களே, தங்கள் சிந்தனையால் உயர்ந்தவர்கள் சிலர் இருந்தாலும், வீணரானவர்கள் அநேகன்.  இன்றைய கதையிலும் கூட பாட்டி அந்த கடவுள்கள் சொன்ன வார்த்தையை உணராமல் தன் சிந்தனையினால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று எண்ணி தானாக வலிய சென்று அங்கு சிக்கிக் கொள்கிறார். 

எனவே நமது வாழ்க்கை இருளடைந்து எங்காவது சிக்கிக்கொள்ளாதபடிக்கு நம் இருதயம் தேவனை குறித்து உணர்வடைந்து, சிந்தனைகளை நேராக்கி ஒளியாகிய இயேசுவை ஏற்றுக்கொள்வோம் அநேகரை ஒளியினிடத்திற்கு வரவழைப்போம். 

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

      --
298     எலி தந்த பரிசு!

முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றிவந்தார். தாத்தா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் சிறப்பா குடும்பம் நடத்துவாங்க பாட்டி.

   அன்று காலையில் பாட்டி பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு காட்டிற்கு விறகு வெட்ட புறப்பட்டார் தாத்தா. 

தாத்தா பச்சை மரங்களை வெட்ட மாட்டார். உலர்ந்து போன பட்டுப்போன மரங்களைத்தான் வெட்டுவார். அப்படி ஒரு பட்டுப்போன மரத்தினை கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. கொண்டு வந்த உணவு மூட்டையை ஓர் மரத்தின் அடியில் வைத்துவிட்டு மரத்தினை வெட்ட ஆரம்பித்தார். தேவையான அளவு வெட்டி முடித்ததும் அதை சுமையாக கட்டி வைத்தார்.

     நண்பகல் உச்சி வெயில் மண்டையை கொளுத்தவும் அருகில் இருந்த ஓடையில் முகம் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று முகம் கழுவிக்கொண்டு தான் உணவினை வைத்த மரத்தடிக்கு வந்தார்.

        ஐயோ! பாவம்! அவரது உணவு மூட்டையைக் காணவில்லை! அந்த மரத்தின் அடியில் ஓர் எலிப்பொந்து இருந்தது. அதனுள் வசிக்கும் எலிகள் பொரி அரிசி வாசம் மூக்கைத் துளைக்கவும் மூட்டையைத் தூக்கிச்சென்றுவிட்டன. அதில் இருந்த மாவு முழுவதையும் தின்றும் தீர்த்துவிட்டன.

              பொந்து வாசலில் தன்னுடைய துணி தென்படுவதை பார்த்து அதை இழுத்துப் பார்த்தார் தாத்தா. துணி முதலில் வரவில்லை. பின்னர் சிறிது சிறிதாக வெளியே வர துணியை கவ்வியபடி ஓர் சுண்டெலி வெளியே வந்து நின்றது.

                அது, தாத்தா! சுவையான உணவை எங்களுக்குத் தந்தீர்! மிக்க நன்றி என்று சொன்னது. எலி பேசுவதை ஆச்சர்யமுடன் பார்த்த தாத்தா, எலியே! வயிறு நிரம்ப உண்டீர்களா? உங்களுக்கு உணவு போதுமானதாக இருந்ததா? என்று வினவினார் தாத்தா.

                      தன்னுடைய உணவை இவர்கள் உண்டுவிட்டார்களே! என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் தாத்தா தன்னை விசாரிப்பதை கேட்டு எலி நெஞ்சுருகிப் போனது. “தாத்தா! உங்கள் உணவை அனுமதியில்லாமல் எடுத்துச்சென்று சாப்பிட்டுவிட்டோம்!” நீங்கள் அதற்காக கோபப்படுவீர்கள் என்று பார்த்தால் எங்களுக்கு உணவு போதுமா? என்று விசாரிக்கிறீர்களே! உங்கள் உயர்ந்த மனசு யாருக்கும் வராது. எங்களுடைய மாளிகைக்கு வந்து சற்று இளைப்பாறிவிட்டு போகலாமே! என்று கூப்பிட்டது சுண்டெலி.

                          உங்கள் மாளிகைக்குள் நான் எப்படி நுழைய முடியும்? சிறிய வாயிலில் என்னால் நுழைய முடியாதே! என்றார் தாத்தா.

                             “ நான் கூட்டிச் செல்கிறேன்!” என்ற எலி அவர் மீது தாவி அவரது காதில் ஏதோ கூறியது. மறு நிமிடம் எலி அளவு சிறிய உருவமாக தாத்தா மாறிப் போனார். எலியுடன் அந்த பொந்தில் நுழைந்தார் தாத்தா. அந்த மாளிகையில் அவருக்கு தடபுடலான வரவேற்பும் விருந்தும் பறிமாறப்பட்டன. முடிவில் எலிகள் அனைத்தும் சுமக்க மாட்டாமல் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கி வந்தன. அதை தாத்தாவிடம் கொடுத்து, உமது இரக்க உணர்விற்கு எங்களது அன்புப் பரிசு! என்று சொன்னன.

                                தாத்தா பையை பிரித்து பார்த்தார். பை நிறைய் தங்க காசுகள் இருந்தன. இவ்வளவு காசுகள் எனக்கு எதற்கு? ஒன்று போதுமே? என்றார் தாத்தா. அப்படியா  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இதோ இந்த பையில் அந்த ஒற்றைநாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செலவழித்ததும் மீண்டும் ஓர் தங்க நாணயம் தோன்றும். நீங்களும் பாட்டியும் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி வழி அனுப்பிய எலி தாத்தாவை பொந்து வாயிலில் கொண்டு வந்து விட்டு பழைய படி பெரிய உருவமாக காதில் மந்திரம் சொல்லி மாற்றி விட்டது.

                                   தாத்தா அந்த தங்க நாணயப் பையோடு வீட்டிற்கு சென்றார். அன்று நீண்ட நேரம் கழித்து தாத்தா விறகு கட்டுடன் ஒரு புதிய பையையும் எடுத்து வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் காரன் தாத்தா என்ன சொல்லப் போகிறார் என்று மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான்.

                                        பாட்டியிடம் நடந்ததை எல்லாம் சொன்னார் தாத்தா! அதை ஒன்றுவிடாமல் கேட்டான் பக்கத்துவீட்டுக்காரன். அட கிழவனுக்கு வந்த வாழ்வைப் பார்! ஒரு மூட்டை தங்க நாணயத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டானே! நாம் போய் கொண்டு வந்து விடவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான்.
                                           மறுநாள் தாத்தாவிடம், தாத்தா! காய்ந்த விறகே கிடைக்க மாட்டேன் என்கிறது. நீங்கள் எங்கிருந்து விறகு வெட்டி வந்தீர்கள்! அங்கு விறகு கிடைத்தால் போய் வெட்டி எடுத்து வந்து விடுவேன்” என்று விசாரித்தான். தாத்தாவும் தான் விறகு வெட்டிய இடத்தை அடையாளமாக சொல்லவும் அவன் கையில் ஒரு கோடரியும் கொஞ்சம் பொரி அரிசியும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

                                             எப்படியோ காட்டில் அலைந்து திரிந்து தாத்தா சொன்ன மரத்தை கண்டு பிடித்து விட்டான். விறகு வெட்டாமல் தான் கொண்டு வந்த பொரி அரிசி உருண்டையை பொந்தினுள் வீசினான். பின்னர் மரத்தினடியில் படுத்து உறங்கினான்.
                                                மாலை ஆகிப் போனது. விழித்து எழுந்தவன் எலி ஏதும் வராது போகவே கோபம் அடைந்தான். ஏய் எலிகளே! மரியாதையாக வெளியே வாருங்கள்! என் பொரிமாவுக்கு தங்கம் தாருங்கள் என்று கத்தினான்.
                                                   அப்போது சுண்டெலி ஒன்று கோபமாக வெளியே வந்தது. நீதான் பொரிமாவை உள்ளே கொட்டியவனா? அது ஒன்றும் தாத்தா கொண்டுவந்தது போல சுவையாக இல்லை! போனால் போகட்டும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
                                                                   எனக்கு நிறைய தங்கம் வேண்டும்! 
  அவ்வளவுதானே! சரி வா! எலி அவன் காதில் மந்திரம் சொல்ல சிறு உருவம் அடைந்தான் . பொந்தினுள் நுழைந்தான். அங்கே பொந்து முழுக்க தங்க நாணயங்கள் சிதறிக் கிடந்தன. எல்லாவற்றையும் பொறுக்கி பைகளில் போட்டுக் கொண்டான்.

  போதுமா? உணவு சாப்பிடுகிறாயா? கேட்டது சுண்டெலி.
    இந்த பொந்து முழுவதும் உள்ள நாணயங்கள் அனைத்தும் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்த அவன் 

 எலிகளே! இந்த மாளிகை முழுதும் உள்ள பொன் நாணயங்கள் எனக்கே! இதோ இந்த மருந்தை அடிக்கப் போகிறேன்! நீங்கள் அழிந்து போவீர்கள்! அப்புறம் எல்லாம் எனக்கே! எனக்கே! என்று கையோடு கொண்டு சென்றிருந்த ஒரு மருந்தை தூவினான். அதன் நெடி அங்கே  பரவ எலிகள்  மாயமாக மறையத் துவங்கின. எலிகள் மறையவும் அங்கே இருந்த தங்க நாணயங்களும் காணமல் போயின. பொந்தின் வாயில் அடைத்துக் கொண்டது.
        விஷ மருந்தின் நெடி அவனையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் விழித்த போது பொந்தில் யாரும் இல்லை! நாணயங்கள் காணாமல் போயிருந்தன. இருள் சூழ்ந்திருக்க வெளியே வர வழி தெரியாது தவித்து போனான் ஆத்திரக் கார பக்கத்து வீட்டுக்காரன்.
           எலிகளே! என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை பழைய படி வெளியே கொண்டு சென்று விடுங்கள்! எனக்கு நாணயங்கள் வேண்டாம்! என்னை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினான். ஆனால் அவன் குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை.
             அந்த பொறாமை பிடித்த பேராசை பிடித்த எலியாக மாறிப் போன மனிதன் தான் உருவத்தில் பெரிய பெருச்சாளியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எவ்வளவு உணவு கிடைத்தும் திருப்தி இல்லாமல் வளைகளை தோண்டிக்கொண்டிருக்கும் பெருச்சாளிகளை பார்த்து இருக்கிறீர்களா குழந்தைகளே! அதுதான் இந்த மனிதன்.

என் அன்பு வாசகர்களே,
நமக்கு இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

நமக்கு அன்றாடம் தேவையானதை தேவன் நமக்குதந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை அவசர தேவை ஏதாகிலும் ஏற்படுமாயின் அதற்கும் தேவையானதை நமது கடின உழைப்பின் முகாந்திரம் நமக்கு கட்டளையிடுகிறார். தேவை அதிகமாகிறபோது நாம் அந்த தேவையை ஈடுகட்ட முயன்று  தேவ பக்தியற்றவர்களாகி உலகத்தை நாடி ஓடுகிறோம்.

வேதத்தில் எலியா நாகமான் கொண்டு வந்த காணிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் அவனை அனுப்பி விட்டான். ஆனால் எலியாவின் ஊழியக்காரனோ நாகமானை தொடர்ந்து போய் கொஞ்சம் காணிக்கையை மட்டும் வாங்கி வருகிறான். சிந்தித்து பாருங்கள்

 எலியாவை தேவன் போஷிக்கும்போது அவன் ஊழியக்காரனை போஷியாமல் இருப்பாரோ??. போஷித்தார் ஆனால் அழிந்து போகின்ற உலக பொருட்களை அதுவும் ராஜாக்கள் உபயோகிக்கின்ற பொருட்கள் கிடைத்தால் வேண்டாமென்று விடுவார்களோ??. அவன் விடவில்லை ஆகவேதான் நாகமானின் குஷ்டமும் அவனை பிடித்துக்கொண்டது.

இக்கதையில் பக்கத்து வீட்டுக்காரன் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு தனக்கு இருந்த அந்த நல்ல வாழ்க்கையை நஷ்டப்படுத்திக்கொண்டான்.  வேதம் சொல்கிறது,

6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

1 தீமோத்தேயு 6:6

நமக்கு தேவ பக்தி மிகுந்து காணப்படும்போது நமக்கு இப்போது இருக்கின்றவை போதும் என்ற மனப்பான்மை ஏற்படும் அவ்வாறு போதுமென்று வாழும் போது நம் வேண்டாம் வேண்டாம் என்கிற அளவிற்கு ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். எனவே போதுமென்கிற மனதோடு வாழ்வோம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.......

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..


299  வீண் பழியும் இலவம் பஞ்சும்

ஒரு ஊரில் வெட்டுபுலி  என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.

பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
...
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடம் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.

என் அன்பு வாசகர்களே,
செய்தபின் வருந்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே இக்கதையின் கருத்து. 

பிறருக்கு ஏதேனும் மனதரிந்து ஒரு பழியை சுமத்தும்போது ஒருவேளை  பாதிக்கப்பட்டவர்கள் மறந்தாலும் அந்த மனிதரை காணும்போது பாதிப்பு ஏற்ப்படுத்திய மனிதனுக்கு நிச்சயம் மனது உறுத்தும் என்பதே உண்மை.

வேதத்தில் அற்பமான திராட்சை தோட்டத்திற்காக தான் ராஜாவாய் இருந்தும் தன் மனைவி முகாந்திரம் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரிக்க அவன்‌ மேல் வீண் பழி சுமத்தி அவனை கல்லெறிந்து கொலை செய்து விட்டு அந்த திராட்சை தோட்டத்தை தன் புருஷனுக்கு பரிசளித்தாள் அவன் மனைவியாகிய யேசபேல். அதனால் கிடைத்த வெகுமதியோ மிகவும் கொடூரமானது அதை 1 இராஜாக்கள் 21 ஆம் அதிகாரத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, ஒரு‌ சிலர் நான் தேவனுக்காக தான் அப்படி செய்தேன், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என்று தாங்கள் செய்த அநியாயத்தை நியாயப்படுத்துவார்கள். இவ்வாறு தன்‌ நாவை அடக்காமல் மற்றவர்கள் மேல் வீண்பழி சுமத்தி அதனால் தன் தங்களை தாங்களே வஞ்சித்துக்கொள்கிறவர்களை வேதம் இவ்வாறு கூறுகிறது,

26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

யாக்கோபு 1:21

எனவே நம் தேவ பக்தி ஒருபோதும் வீணாய் போகாதபடிக்கு நம் நாவை அடக்கி, நம் இருதயத்தை வஞ்சிக்காமல் நம்மை நாமே நிதானித்து அறிந்து தேவபக்திக்கேற்ற காரியங்களை நடப்பிப்போம் தேவ பக்தியுள்ளவர்களாய் வாழ்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

300       மாற்று கோணம் நமக்கு முக்கியம்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்  ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

என் அன்பு வாசகர்களே,
முட்டாளாய் இருக்க வேண்டிய இடத்தில் முட்டாளாய் தான் இருக்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

நாம் அறிவாளிகளாய் இருந்தாலும் ஒரு சில இடங்களில் முட்டாளாய் மாறினால் தான் நம்மால் நிலை நிற்க முடியும். அதுபோலவே பலசாலிகள் பலவீனர்களாகவும், ஞானிகள் பைத்தியமாகவும் மாறினால் தான் அவர்கள் மனம் மகிழும் நமக்கு தேவையானதும் கிடைக்கும்.

இக்கதையில் ஊர்த்தலைவர் அறிவாளியின் மகனை முட்டாளாக மட்டந்தட்டி அதை அந்த அறிவாளியிடமே கூறினார். இதனால் அந்த அறிவாளிக்கோ, அவரின் மகனுக்கோ எந்த குறைவும் ஏற்படவில்லை. ஆனால் அந்த ஊர்த்தலைவர்க்கோ தினமும் ஒரு வெள்ளிக்காசு என ஓராண்டாக நஷ்டம் தான். ஆனால் அந்த ஊர்த்தலைவர் அதை உணரவில்லை ஏதோ பெரிய காரியத்தை சாதித்ததைபோல் தன்னை தானே நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

வேதத்தில் யோசுவா ஒவ்வொரு பட்டணங்களாய் முறியடித்துக் கொண்டு வரும்போது கிபியோனின் குடிகளாகிய ஏவியர் தங்களை ஸ்தானாபதிகளை போல வேடமிட்டு யோசுவாவினிடத்தில் வந்து உடன்படிக்கை செய்து அவனுக்கு அடிமைகளானார்கள். உண்மையில் ஏவியர்கள் எண்ணிக்கையில் இஸ்ரவேலரை விட அதிகமானவர்கள். ஆனால் தேவன் இஸ்ரவேலோடு இருப்பதால் எளிதில் வீழ்த்திவிடுவார்கள் என்று நன்றாக அறிந்ததால் யோசுவாவோடு உடன்படிக்கை செய்து அடிமைகளானார்கள். அதனால் அவர்களும் அவர்கள் பட்டணமும் இஸ்ரவேலரின் கைக்கு தப்புவித்தது.


இதை போன்று இந்திய வரலாற்றில் ஒரு சம்பவமும் உண்டு என்னவெனில் படை பலத்திலும், ஆயுத பலத்திலும், போர் பயிற்சியிலும்  இந்தியாவை விட பன்மடங்கு அதிகமாக உள்ள சீனா இந்தியாவின் எல்லைகள் ஒவ்வொன்றாய் ஆக்கிரமித்து இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து. சீனாவின் தாக்குதல்களை இந்தியாவால் எதிர்க்கொள்ள முடியாமல் திணறியது. போதுமான பயிற்சி, ஆயுதம் என் எதுவும் இல்லாமல் என்ன செய்ய முடியும். எனவே ஒவ்வொரு பகுதியாக சீனா தன்வசப்படுத்தியது. உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தும் சீனா பின்வாங்கவில்லை. எல்லைகளின் பெரும்பகுதி சீனா கைப்பற்றியது. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சீனா போர் நிறுத்தம் செய்து சமாதான உடன்படிக்கை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. காரணம் ஏராளம் இருந்தாலும் இயற்கை சூழ்நிலை காரணமாக சீனா தோற்று போக வேண்டிய நிலை ஏற்ப்படும் என்று உணர்ந்ததால் சமாதான உடன்படிக்கை செய்தது. அதனால் தன் படைகளையும், தன் தேசத்தையும் பெரிய சேதத்திலிருந்து பாதுகாத்தது. 

பிரசங்கி இவ்வாறு கூறுகிறார்

16 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?

பிரசங்கி 7:16

நீதியில் மட்டுமல்ல, ஞானம், பலம் என எல்லாவற்றிலும் மிஞ்சாமல் எல்லைமீறாமல் இருக்கும் போது நமக்கும் நம் குடும்பத்திற்கும், நம் சுற்றுப்புறத்தாருக்கும் நம்மால் எந்த கெடுதலும் ஏற்ப்படாத வண்ணம் செயல்படுவோம் ஆசீர்வாதமாய் வாழ்வோம். 

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!


301                வெற்றி வேந்தன் !

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் சிறந்த கல்விமான்; பல இலக்கியங்களையும் பயின்று தேர்ச்சி பெற்று விளங்கினான். நல்ல பண்புடைய பிள்ளைகள் இருவரையும் பெற்றிருந்தான். அம்மன்னனுக்கு வயதாக ஆரம்பித்தது.

அம்மன்னனது நாட்டில் வானுயுற உயர்ந்த மரங்களும், நீரோட்டம் மிகுந்த காட்டாறுகளும், துள்ளித் திரியும் புள்ளிமான்களும், கொல்லும் புலிகள் முதலிய கொடிய விலங்குகள் வாழும் காடுகளும் இருந்தன. அதனால் அவனது நாட்டு மக்கள் வேட்டைத் தொழிலில் சிறந்து விளங்கினர்.

அச்சிற்றரசன் நாளுக்கு நாள் தளர்ச்சி மிகுந்து முதுமை அடைந்து வந்தான். அதனால் அரசியல் காரியங்களைக் கவனிக்க முடியாத நிலைக்கு ஆளானான். அந்நிலையில் அவன் தனது ஆட்சிப் பொறுப்பை தன் புதல்வர்களிடம் ஒப்புவிக்க நினைத்தான்.

அக்காலத்தில் “அரசு பதவி மூத்தவர்க்கு உரியது’ என்னும் நடைமுறை இருந்து வந்தது. அதன் படி மன்னன், தனது ஆட்சிப் பொறுப்பைத் தன் மூத்த மகனிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

“நாட்டை ஆள்பவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது; பரந்த மனமும் உயர்ந்த எண்ணமும் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். வயதால் மூத்தவனாக மட்டும் இருந்தால் போதாது; அறிவால் முதிர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும்’ என்று எண்ணினான்.

ஒரு நாள் தன் புதல்வர் இருவரையும் அழைத்தான். மூத்தவன் இளையவன் ஆகிய இருவரும் வந்து தந்தையை பணிந்து வணங்கி நின்றனர்.

புதல்வர்களின் பணிவைக் கண்டு மகிழ்ந்த மன்னன், “”புதல்வர்களே! நாளை காலை நீங்கள் இருவரும் வேட்டைக்குச் செல்ல வேண்டும்; மாலை வெற்றியோடு திரும்பி வர வேண்டும். இது உங்கள் இருவருக்குமிடையே நடத்தப்படும் வீரப் போட்டி மட்டுமன்று; அறிவுப் போட்டியுமாகும். உங்களில் வெற்றி பெறுவோர், நாட்டை ஆளும் தகுதி பெறுவர்!” என்று கூறினான்.
தந்தையின் மொழி கேட்ட மைந்தர்கள் இருவரும் மனம் மகிழ்ந்தனர்.

மறுநாள் காலை-

மைந்தர்கள் இருவரில் இளையவன் வில்லும், அம்பும் ஏந்தி விரைந்து புறப்பட்டான்; மூத்தவன் வேல் ஒன்று மட்டும் ஏந்திய வண்ணம் புறப்பட்டான்.
வேட்டையாடப் புறப்பட்டுச் சென்ற வீரப் புதல்வர்கள் இருவரும் காட்டில் அலைந்து திருந்தனர். தங்கள் நோக்கத்தில் மிகவும் கவனம் கொண்டு செயல்பட்டனர்.

 பிற்பகலும் வந்து சேர்ந்தது. கதிரவன் மேற்திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். மன்னன் தன் புதல்வர்களை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.

இளைய மகன் ஏறு நடைபோட்டு வந்தான். அவனது இடது தோளில் வில்லும், அம்பும் இருந்தன; வலது கையிலே அம்பு பாய்ந்த முயல் இருந்தது.

“”வா மகனே! வெற்றியோடு வந்தாயா? வேட்டைப் பொருள் எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு இளையவன், “”தந்தையே! இதோ பாருங்கள்! வேட்டைக்காரனைக் கண்டு காட்டு முயல் நிற்குமா? நிலைக்குமா? நான் அதை விட்டு வைப்பேனா? ஒரே அம்பு, வைத்த குறி தவறாது பாய்ந்தது! இதோ முயல்!” என்று தன் வெற்றியை உற்சாகத்துடன் கூறினான்.

அதைக் கேட்ட மன்னன், “”மகிழ்ச்சி மகனே! உன் வெற்றியைப் பாராட்டுகிறேன். உன் அண்ணன் எங்கே?” என்று கேட்டான்.

மன்னன் அவ்வாறு கேட்ட போது, மூத்த மகன் தலை தாழ்த்தி வெறுங்கையுடன் வந்து சேர்ந்தான். அவனது வலது கையில் முனை முறிந்த வேல் மட்டுமே இருந்தது. அவன் முகத்திலே ஒருவித நாணம்; தெம்பு குறைந்த நடை; பார்வையிலே ஒரு வித வருத்தம் காணப்பட்டது.

மூத்த மகனது வருகையைக் கண்ட மன்னன், “”வா மகனே! வேட்டையாடி என்ன கொண்டு வந்தாய்? யானையா? புலியா? கொண்டு வந்த வேட்டைப் பொருள் யாது?” என்று கேட்டான்.

“”தந்தையே! இல்லை, நான் வேட்டைபொருள் எதுவும் கொண்டு வரவில்லை. வெறுங்கையுடனேயே வந்திருக்கிறேன். சிந்தை கலங்கிய நிலையில் வந்திருக்கிறேன். வேட்டையை விரும்பி காட்டிற்குச் சென்றேன். கொடிய யானை ஒன்றையாவது வேட்டையாடிக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றேன். களிறு ஒன்று மதம் கொண்டு வந்தது. வேலை உயர்த்தி வேகமாக அந்தக் களிற்றின் மீது வீசினேன். தந்தையே! தங்களிடம் நான் வேல் பயிற்சி பெறவில்லை; வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த அந்த களிறு பிளிறியது; ஆனாலும் வேலினை விசிறி எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது. கறைபட்ட வேல் இதோ!

 கறைபட்ட வேலோடு மறக்குடிக்குக் களங்கம் தேடியவனாக நான் வந்து நிற்கிறேன். மன்னியுங்கள் தந்தையே!” என்று மனக் கலக்கத்துடன் கூறினான்.

மூத்த மகன் கூறியதை கேட்ட மன்னன், “”கவலை கொள்ள வேண்டாம் மகனே!” என்று ஆறுதல் கூறி, மூத்தவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

அவ்வாறு தழுவி மகிழ்ந்த மன்னன், மூத்த மகனை நோக்கி, “”மகனே! யானை வேட்டைக்குச் செல்பவன் யானையைப் பெற்று வருதலும் உண்டு; சிறு பறவை வேட்டைக்குச் செல்பவன் வெறுங்கையோடு திரும்பி வருதலும் உண்டு! அது அவரவர் வினைப்பயன்.

“”மகனே! இதோ, உன் தம்பி முயல் வேட்டைக்குச் சென்றான்; வெற்றி நடைபோட்டு வந்திருக்கிறான். இதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை.

“”நீயோ யானை வேட்டைக்குச் சென்றாய். யானையும் எதிர்பட்டது. வேலையும் எறிந்தாய். நீ வெற்றி பெற வில்லையென்றாலும், என் உள்ளம் உன் வகையில் மகிழ்ச்சி கொள்கிறது.

“”மகனே! நீ உயர்ந்ததையே எண்ணினாய்! உயர்வான குறிக்கோளைக் கொண்டாய்! அதனால் உயர்ந்தவன் ஆனாய்! உன்னைப் பாராட்டுகிறேன்! உன் முயற்சியைப் போற்றுகிறேன்! நீயே வெற்றிக்குரியவன்! நீயே இந்நாட்டிற்குத் தலைவன்!” என்று பாராட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.
மூத்த மகன் முடிசூட்டிக் கொண்டு மகிழ்ந்தான்; நாட்டை நலமுடன் ஆண்டான்.

என் அன்பு வாசகரே,
"சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று நரி கூறியது போலத்தான் அநேகர் முயற்சி செய்து தோல்வியை தழுவும்போது கூறுகின்றனர் ஆனால் அந்த முயற்சியில் தாங்கள் பெற்ற அனுபவங்கள் பிற்காலத்தில் உதவும் என்பதை மறந்துவிடுகின்றனர். 

"முயற்சி திருவினையாக்கும்" என்ற பழமொழிக்கேற்ப மேலான காரியங்களுக்காக நாம் எடுக்கிற முயற்சியும் நிச்சயம் விருதாவாக முடிவதில்லை. நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். "Try, try , try again", "Stop not till the goal is reached" என்பன போன்ற அநேக பழமொழிகள் நாம் அறிந்ததே. எனவே கீழானவைகளை அல்ல எப்போதும் எந்நேரமும் மேலானவைகளையே நாடுங்கள் தேடுங்கள்.

1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

கொலோசெயர் 3:1,2

இன்று முதல் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கும் மேலானவைகைளை தேடுவோம் மேலானவைகளை பற்றிக்கொள்வோம்.

நீங்கள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


302      கற்பனைக் கோட்டை

ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். கணவன், மனைவி இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.

அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். “”என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?” என்றான் சுந்தரம். “”பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!” என்றாள் விஜயா.

“”நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!” என்றான் சுந்தரம்.

“”விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்…” எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.

“”அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?” என்று கவலைப்பட்டான் சுந்தரம்.

“”இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!” என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.

“”நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!” என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.

இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, “”ஹை… ஹை…” என்று விரட்டினார்.

“”ரங்கா…! எதை விரட்டுகிறீர்கள்?” என்றான் சுந்தரம்.

“”உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!” என்றான்.

“”யோவ்! என்னய்யா சொல்ற… இது என்ன புது கதை… எங்ககிட்ட ஏது பசு?” என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.

“”இப்போ புரியுதா… இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!” என்றார்.இருவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர். 

என் அன்பு வாசகரே, 
நம் அன்றாட வாழ்வில் இதுபோன்ற அநேகரை சந்தித்திருக்கக்கூடும். உதாரணமாக நமது வாகனத்தை சரி செய்வதற்காக மெக்கானிக்கிடம் கொடுத்துவிட்டு நாம் நம்முடைய வேலையை செய்ய கிளம்பி விடுவோம். ஆனால் அவரோ சரிசெய்து கொண்டிருக்கிறேன், செய்துவிட்டேன், முடித்துவிட்டேன் என்று வாயால் மட்டுமே வேலை செய்துவிட்டு செயலில் ஒன்று செய்வதில்லை. எக்காரணம் கொண்டும் நாமும் அவரைப் போல மாறிவிடக்கூடாது. 

சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்,

4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்: சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

நீதிமொழிகள் 10:4

25 சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

நீதிமொழிகள் 21:25

அருமையானவர்களே, நாம் இக்கதையில் வரும் கணவன் மனைவிப்போல் சோம்பேறிகளாய், ஆசை நிராசையாய் போகதபடிக்கு எப்பொழுதும் சுறுசுறுப்புடன் நமக்கு தேவன் கொடுத்த வேலையை ஜாக்கிரதையுடன் செய்வோம் நமது கண்களே ஆச்சரியப்படத்தக்க விதமாய் ஆவிக்குரிய பூமிக்குரிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்பி வழிநடத்துவார்.

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!!



  303      நள்ளியும் புள்ளியும்

ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது.  குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. 

இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.

நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது.

 முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.

தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும்.  நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..

இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.

ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.

பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..

நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.

மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..

எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.

நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.

என் அன்பு வாசகர்களே,
இரக்க குணம் நல்லதுதான் ஆனால் நாம் யாரிடத்தில் இரக்கம் காண்பிக்கிறோமோ அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பொறுத்தே அதன் விளைவு தெரியும்.

இரக்க குணம் எங்கு காணப்படும்?? நாம்‌ யாரிடத்தில் மிகுந்த அன்பு செலுத்துகிறோமோ அவர்களிடம் தான் மிகுந்த இரக்கத்தோடு நடந்துக்கொள்வோம். ஆனால் அவர்களோ அந்த அன்பை இரக்கத்தை தவறாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். 

இக்கதையிலும் கூட அந்த ஓநாய் தனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்ப்ட்டபோது தன்னோடு அன்பாய் ஆதரவாய் மற்றவர்கள் எதிர்த்தபோதும் தன்னோடு பழகிய நள்ளியை இரையாக்கிக்கொண்டது. இதுபோலத்தான் அநேகர் தனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் மற்றவர்கள் யார் என்று பார்ப்பதில்லை அவர்கள் முதலாவது தங்களை தற்காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

வேதத்தில் சிம்சோனின் வாழ்க்கை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தன்‌ பார்வைக்கு அழகாய் இருந்த பெலிஸ்திய பெண்ணை விவாகம் செய்ய தன்‌ தகப்பனையும் தாயையும் அழைத்து சென்ற போது அங்கு ஏழு நாட்கள் விருந்து செய்யப்பட்டது. அந்த நாட்களில் சிம்சோன் அவளுடைய விருந்தாளிகளிடம் ஒரு‌ விடுகதையை கேட்டு ஏழு நாட்களில் விடுகதையை விடுவித்தால் 30 மாற்று வஸ்திரங்கள் தருவதாக ஒப்புக்கொண்டான். அவர்களும் தாங்கள் விடுவிக்கவில்லையென்றால் 30 மாற்று வஸ்திரங்கள் தருவதாக ஒப்புக்கொண்டான். 

ஆனால் ஆறு நாளளவும் அவர்களால் விடுவிக்க முடியவில்லை எனவே அந்த பெலிஸ்தியர் அந்த பெண்ணிடம் சென்று அவளையும் அவள் வீட்டாரையும் விடுகதையை விடுவிக்கவில்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். எனவே தான் திருமணம் செய்ய போகின்றவர் என்றும், அதிகமாய் நேசித்தவர் என்றும் பாராமல் அனுதினமும் தன்னை அவனுக்கு முன்பு அலட்டிக்கொண்டிருந்தபடியால் அவளுக்கு அந்த விடுகதையை விடுவித்தார். அவளோ அதை தன் ஜனங்களிடத்தில் விடுவித்தாள். அவர்கள் மறுநாள் அதிகாலையில் சிம்சோன் முன்பாக சென்று அந்த விடுகதையை விடுவித்தார்கள்.  அவனோ அவன் சொன்னதுபோல் 30 மாற்று வஸ்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தான். 

இந்த உலகத்தில் நாம் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் தான் நமக்கு எதிராய் அவர்களின் இக்கட்டு சூழ்நிலையில் மாறுகிறார்கள். ஆனால் நம் தேவனோ தன்னை சாவுக்கு ஒப்புக்கொடுப்பார்கள் என் தெரிந்தும் நம் மீது கொண்ட அன்பால் தன்னை சாவுக்கு ஒப்புக்கொடுத்தார். தனக்கு இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை என்றபோதும் தான் தப்பித்துக்கொள்ள முயற்சிக்காமல் தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். எனவே நாம் நமது அன்பை மற்ற மனிதர்களை விட தேவனிடம் அதிகமாய் செலுத்துவோம். எப்படி தேவனிடம் அன்பு செலுத்துவது?? வேதம் வாசித்து, ஜெபித்து தேவனிடம் நெருங்கி வாழ்வோம் நம் இக்கட்டான சூழ்நிலையில் நம் தேவன் நம்மோடு என்றும் இருப்பார் நாம் சுகமாய் வாழ்வோம். 

23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

யோவான் 14:23


304   யானைக்கு வந்த திருமண ஆசை


மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.

ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.

நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.

"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. 

மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.

என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.

மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தையும் அழிவையும் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார். பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையின் சம்பவத்தை போலத்தான் அநேகர் தங்கள் பிள்ளைகளாலோ, பெற்றோர்களாலோ, இன  ஜன பந்தங்களாலோ மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அதை குறித்து முழுவதும் ஆராயாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்து அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று வாக்குவாதம் செய்து அவர்களை தப்புவிக்க நினைக்கிறார்கள். 

உண்மையில் அவர்களால் ஏற்ப்பட்ட பாதிப்பு கொஞ்சமல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி தங்கள் ஜீவனையே வெறுக்கிற அளவிற்கு அவர்கள் செய்கிற காரியம் இருக்கும் ஆனாலும் அவர்கள் பட்சமாகத்தான் பேசுவார்கள். இப்படி அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் தாங்கள் அதற்குரிய பிரதிபலனை நிச்சயம் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

நாம் என்ன செய்கை செய்து கொண்டிருக்கிறோம்? நம்முடைய செய்கைக்கு ஏற்ற பூரண பலன் காத்துக்கொண்டிருக்கிறது.  நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை என எல்லாவற்றிற்கும் இருக்கிறது. அதை நாம் இழந்துபோகாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதம் கூறுகிறது,

8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

2 யோவான் 1:8

எனவே நன்மையை மாத்திரம் செய்து அதற்கேற்ற பிரதிபலனை இழந்து போகாமல் பெற்றுக்கொள்வோம்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


 அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.



305  சிட்டு குருவியும் குட்டி யானையும்


”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு,  தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, ‘வணக்கம் யானை நண்பா’ என்று கூறியது”

அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது
‘உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம்  எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?”

உடனே குருவி பதில் சொன்னது’

‘ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில்  ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது? ” என்று கேட்டது.

”அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,
இந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு” என்றது

அதைக்கேட்ட குருவி சொன்னது

”அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தால் இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள்  நான் வெற்றி அடைந்தால்  மரத்தை ஒடிக்க்கூடாது’ என்றது சிட்டுக்குருவி.

‘பொடிப் பயல் உன்னோடு போட்டியா? சரி சொல்லு’ என்றது யானைக் குட்டி.

”நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி” என்றது சிட்டுக்குருவி.

யானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது.

போட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது.

பறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது.

”கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும்,  நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு” என்றது.

அதைக்கேட்ட கோழி சொன்னது ”அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி! அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்” என்றது.
யானையும் ஒத்துக் கொண்டது

கோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு இறக்கை அடித்தபடியே தாவியது,  சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. ‘இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்’ என்றது.

யானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது,  அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு. யம்மா, யப்பானு  கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி. எங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று  பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.

யானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்’னு நினைச்சது.

அப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், ‘உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு.”

யானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,

காக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது.

அதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,
யானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,

அதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,

‘ ஏன் அண்ணே கோபப்படுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே  என்றது.

யானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது
என்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது

யானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது, 

யானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை, 

இந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களால பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது

யானை யோசித்துப் பார்த்தது,

குருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,
அன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.

நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்.

என் அன்பு வாசகர்களே,
உயரமோ, உயர்‌ பதவியோ, உயர்ந்த கல்வி அறிவோ எதுவாயினும் அவர்களால் செய்ய முடியாத காரியத்தை அவர்களை விட சிறியவர்கள் மிக எளிதாக செய்து முடித்து விடுவார்கள். 

உதாரணமாக வேதியியலில் (Chemistry) தலை சிறந்த ஒரு விஞ்ஞானி எந்த பொருளாயினும் அதை கருக்கிடும் ஒரு அமிலத்தை(Acid) உருவாக்கினார். அதற்கு உயரிய விருதையும் பெற்றார். அதன் பின்னர் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது எந்த பொருளிலும் சேமிக்க முடியாத அமிலத்தை உருவாக்க போவதாக கூறினார். இதை கேட்டுக்கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அவரிடம் சென்று உங்களால் அதை உருவாக்க முடியாது என்று கூறினார். இதை கேட்ட அந்த விஞ்ஞானி மிகுந்த கோபத்தோடு "ஏன் முடியாது, என்னால் நிச்சயம் முடியும் என்று சவால் விட்டார்". அவருடைய உதவியாளர் மிகுந்த பணிவுடன், ஐயா எந்த பாத்திரத்திலும் சேமிக்க முடியாததை எதில் சேமித்து வைப்பீர்கள் என்று கேட்டான். அப்போது தான் அந்த விஞ்ஞானிக்கு புரிந்தது. தான் ஒரு தலைசிறந்த ஞானியாயிருந்தும் தனக்கு ஞானம் இல்லை என்று ஒப்புக்கொண்டார். 

சிலர் கணிதத்தில் தேறினவர்களாக இருப்பர் அவர்களிடம் எப்பேர்ப்பட்ட கடினமான கணக்கை கொடுத்தாலும் எளிதாக விடை கண்டுபிடித்துவிடுவர். ஆனால் அவர்களால் நான்கைந்து பக்கமுள்ள விடையை மனப்பாடம் செய்ய முடியாது. சிலருக்கோ சுட்டு போட்டாலும் கணக்கு வராது, ஆனால் எத்தனை பக்கம் இருந்தாலும் ஒன்று விடாமல் மனப்பாடம் செய்து எழுதிவிடுவர். அதுபோல வேலை இடங்களிலும் மூத்த ஊழியர்களால் செய்ய முடியாததை இளம் ஊழியர்கள் மிக எளிதில் செய்து முடிப்பர். ஊழியத்திலும் இதே நிலைதான். 

வேதமும் அதைதான் சொல்கிறது,

22. சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

ஏசாயா 60:22

யார் யார்‌ எந்த இடத்தில் சிறியவர்களாக்கபடுகிறோமோ அந்த இடத்தில் அவர்கள் கண்கள் முன்னே பலத்த ஜாதியாய் அநேகர் ஆச்சரியப்படத்தக்க விதமாய் சிறுமைப்பட்ட இடத்தில் தேவன் உங்களை உயர்த்துவார். இந்த வருடம் இந்த கொடிய நோயினால் உங்கள் வேலை, வருமானம், பதவி என எல்லாம் இழந்துவிட்டீர்களா?? சிறியவர்களாகிய உங்களை தேவன் உயர்த்தி பலத்த ஜாதியாய் தீவிரமாய் மாற்றுவார். இதை விசுவாசியுங்கள் பலத்த ஜாதியாய் மாறுங்கள்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
தினம்

306.      கழுதையிடம் கற்றுகொள்!

ஒரு ஞானி இருந்தார்
குடும்ப வாழ்க்கை வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார். தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு  அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார். எனவே தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும்  மாலையில் திரும்பும்போதும் கழுதையை கவனிக்கும் படியும் கூறினார்.

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு  பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார். 

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை."  அதே போல் மாலையில்  "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" அதுபோல துன்பம் வரும்போது அதிக துன்பம்மின்மையும் இன்பம்  வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான  மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சிறந்த தானம். இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.

என் அன்பு வாசகர்களே,
"வசதி வந்தால் ஆடாதே, வறுமை வந்தால் வாடாதே" என்பது பொதுமொழி. வசதி வாய்ப்புகள் இருக்கின்ற போது தலை, கால் புரியாமல் ஆடக்கூடாது. அதுபோலவே வறுமை காலங்களில் துவண்டு விடாமல் தைரியமாய் எல்லாவற்றையும் எதிர்க்கொள்ள வேண்டும்.

சிலர் கொஞ்சம் வசதி அல்லது உயர் பதவி கிடைத்ததும் அவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பர். தவறில்லை ஆனால் அதற்காக மற்றவர்களை அடிமைகளாக நினைக்கக்கூடாது. உங்களுக்கு மரியாதை தர விரும்புகிறவர்கள் தாங்களாகவே உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். நீங்களாக வருந்தி கேட்டுக்கொண்டால் அதற்கு பெயர் மரியாதையல்ல. 

வேறுசிலர் தங்கள் வறுமை நிலை எண்ணி எண்ணி வருந்திக்கொண்டே இருப்பர். அதனால் எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. வறுமை உடலுக்கு தானே தவிர, உள்ளத்திற்கு அல்ல. வறுமை உடலில் இருக்கும் வரை எந்தவித பாதிப்பும் இல்லை அதுவே உள்ளத்தில் வறுமை வந்துவிட்டால் பின்பு எந்த விதத்திலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட முடியாது. வசதியும் அதுபோலத்தான் உள்ளத்தில் சென்றுவிட்டால் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும். 

இதற்கு வேதாகமத்தில் மிகச்சிறந்த உதாரணம் இளைய குமாரன் கதை. தன் தகப்பன் சம்பாதித்த பணத்தை பெற்றுக்கொண்டு தன்‌ தகப்பன் சொல்லை கேளாமல்  மனப்போக்கில் செலவழித்து இறுதியில் வறுமை அடைந்தான். வறுமை அடைந்தபோது வாடிப்போகாமல் உடனே தன் தகப்பன் வீட்டிற்கு திரும்பினான். அதினால் தன் ஜீவனை லாபப்படுத்திக்கொண்டான்.

வேதம் சொல்கிறது,

19 தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

பிரசங்கி 5:19

நமக்கு வறுமையை அல்ல ஐசுவரியத்தை தர தான் தேவன் விரும்புகிறார். ஆனாலும் அதை நாம் அனுபவிக்க தேவன் கிருபை செய்தால் மட்டுமே அதை நம்மால் அனுபவிக்க முடியும். எனவே தேவனுடைய அனுக்கிரகத்தை பெறுவோம், ஐசுவரியவான்களாய் வாழ்வோம்.

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!

Wednesday, 1 July 2020

சிறு கதை 281-291

281                 புன்னகை

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று  நடப்பட்டது.

  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.

 வாழைக்கன்று
 தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "*
 
தென்னங்கன்று சொன்னது, 
*" ஒரு வருஷம் ".*

"ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.
  
தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

           ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்துவிட்டது. 

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.

         வாழைக்கன்றை  நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு  உயரமாகி விட்டது.

 தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை

*"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*

நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. 

 தென்னங்கன்றிடம் புன்னகை  தவிர வேறெந்த பதிலும் வரவில்லை. 

         இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும் ,  காய்களுமாக அழகாக மாறியது. 

அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது. 

        நல்ல  உயரம் .  பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை .  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .

        ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .

 இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள ,  அதன் குலைகளை வெட்டி எடுத்தான். 

 வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.  

ஆம்   வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது.  

ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.
 
                 தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.

*ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?*

*கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் ,  வேகமாகவே காணாமல் போகும்.* 

*" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது,*
 *பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...*




282            கணவன் மனைவி 

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

 
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே… என்று பாய….

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா… என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க…

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பெரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

நீதிமொழிகள் 31

283              நன்றி கெட்டவன்

முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான்.

வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள்.

""ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து கொள். உன் ஆசை எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன்,'' என்றாள் தேவதை.

இப்படி ஒரு நல்வாழ்க்கை கிடைத்ததை அவனால் நம்ப முடியவில்லை.

""தேவதையே! உன் விருப்பம் போல நடப்பேன்,'' என்றான் அவன்.

அடுத்த நொடியே அவன் பேரழகனாக ஆனான். அரசனைப் போல ஆடை, அணிகலன்கள் அணிந்து இருந்தான். தன் தோற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்.

"என்னை அவலட்சணம் என்று இகழ்ந்தவர்கள் முன் செல்ல வேண்டும். நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்' என்று நினைத்தான்.

""தேவதையே! நம் திருமணத்திற்கு முன் நகரத்திற்குச் சென்று வர ஆசைப்படுகிறேன்,'' என்றான் பொன்னுரங்கம்.

அவன் முன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட பொன் தேர் ஒன்று நின்றது.

""உனக்காக காத்திருப்பேன். விரைவில் திரும்பி வா,'' என்றது தேவதை.

அரசனைப் போல அந்தப் பொன் தேரில் அமர்ந்தான் அவன். பெருமிதமாக நகரத்திற்குள் சென்றான்.அங்கே இருந்தவர்கள் அவனைப் பார்த்து வியப்பு அடைந்தனர்.

அரண்மனை மாடத்தில் நின்ற அரசி தேரில் வரும் அவனைப் பார்த்தாள். அவன் அழகில் மயங்கினாள்.

வாயிலுக்கு வந்த அவள், அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள். அரசி தன்னை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிந்தான் அவன்.

"தேவதையை மணப்பதை விட அரசியை மணப்பதே சிறந்தது' என்று நினைத்தான்.

அரசியை வணங்கிய அவன், ""இந்த அடிமையைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன்,'' என்றான்.

அங்கே என்ன நடந்தது என்பதை அறிந்தது தேவதை.

அவன் அரச வடிவம் மறைந்தது. முன்பு இருந்தது போல அவலட்சண மாக காட்சி அளித்தான் பொன்னுரங்கம்.

எரிச்சல் அடைந்த அரசி,""இந்த அவலட்சணத்தை யார் அரண்மனைக்குள் விட்டது? அடித்து விரட்டுங்கள்,'' என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டாள்.

ஏமாற்றத்துடன் காட்டிற்கு வந்தான். நீண்ட நேரம் புல்லாங்குழலை இசைத்தான். தேவதை அவன் முன் தோன்றவே இல்லை.

""நன்றி கெட்ட எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது,'' என்று கதறி அழுதான் பொன்னுரங்கம்.

என் அன்பு வாசகர்களே,
பிறர் நமக்கு செய்த உதவிக்கு என்றும் நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து. 

இக்கதையில் வருவது போல தான் அநேக விசுவாசிகளும் ஏன் ஊழியர்களும் கூட நடக்கின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் தங்களுக்கு உறுதுணையாய் இருந்த விசுவாசிகளையும், ஊழியரையும் மறந்து தாங்கள் சுக ஜீவனும் செய்யும்போது அவர்களை நினைத்து பார்ப்பதில்லை. விசுவாசிகள் ஆரம்பத்தில், தங்களின் கஷ்ட காலத்தில் உதவியாக இருந்த ஊழியரை மறந்து, புதிதாய் ஒரு சபையில் உறுப்பினராகி அதன் மூலம் தங்கள் ஆசீர்வாதத்தை பெருக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால் உங்களின் ஆசீர்வாதம் எங்கு துவங்கப்பட்டதோ அங்கே தான் நிறைவடையும். இடையில் வருகிற ஆசீர்வாதங்கள் ஒருவேளை தற்சமயம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம் ஆனால் அது நிலைநிற்காது.

அதுபோலவே ஊழியர்களும் தங்களின் ஆரம்ப நாட்களில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த விசுவாசியின் அவர்களின் கஷ்டத்திலும் பகிரந்தளித்த அன்பை மறந்து புதிதாய் வந்த கொஞ்சம் வசதி படைத்த விசுவாசிகளை ஆதரித்து அவர்களை புறக்கணிக்கின்றனர். வேதம் சொல்கிறது,

 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்,
வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்,இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.

மாற்கு 4:17

தங்களுக்குள்ளே வேர்கொள்ள வேண்டுமெனில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். ஒரு செடியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அதை ஓர் இடத்தில் நட்டு அது கனி கொடுக்கக்கூடிய நிலையை அடையும்போது அதை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் அது கனி கொடுக்காது அதுபோலவே ஒரு சபையிலிருந்து வேறு சபைக்கு ஆசீர்வாதத்திற்க்காக மாத்திரம் சென்றால் எந்த பிரயோஜனமும் இருக்காது. 

எனவே நாம் இப்போது இருக்கின்ற சபையில் நிலையாய் நிற்கும் போது நாமும் நம்மால் நம் சபை போதகரும் ஆசீர்வாதம் நம் சபையும் ஆசீர்வாதம் பெறும். அதுபோலவே சபை போதகர்களும் விசுவாசிகளின் நிலை அறிந்து பாரபட்சமில்லாமல் ஊழியம் செய்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.


284  அலட்சியத்தால்

ஒரு ஏழை மனிதன் இருந்தான்.

அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!

அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.

மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.

அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.

அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.

இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. 

நிற்கவும் நேரமில்லை.

ஆண்டுகள் ஓடின. 

மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.

தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். 

ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.

மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். 

இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.

அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.

அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.

ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.

காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!.

இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!.

சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். 

அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. 

அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. 

சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள்.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. 

இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.

அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள், 

"இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".

அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. 

இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே " என்றான்.

மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். 

"சரி போ. 

நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*

நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.

மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். 

அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.

குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.

"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் ".போய் பார்த்தான்.

அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.

கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.

மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.

அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? ".

அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, 

புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். 

முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.

சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். 

உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.

வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக  பார்க்காதீர்கள்.

விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.

*குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!.*... 



285       ஏமி_காா்மைக்கேல்... 

அயர்லாந்து தேசத்திலே கடற்கரை ஓரத்தில் ஒரு அழகான வீடு.  அந்த வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறந்தாள் ஏமி.  அவளுடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.  குட்டிப்பிள்ளைகள் எல்லோரும் அடிக்கடி கடற்கரைக்கு சென்று விளையாடுவார்கள்.  

பிள்ளைகள் சூப்பரா நீச்சலும் அடிப்பாங்க.  உனக்கு நீச்சல் தெரியுமா? லீவுநாளில் நல்லா குளித்து என்ஜாய் பண்ணு.  ஆனால் அதில் ஆபத்தும் இருக்கும். ஆகையால் ரொம்ப கவனமா    இருக்கணும் சாியா.  சரி ஏமி அக்கா 

கதைக்கு வருவோம்.  
ஏமி பயங்கர வெள்ளை.  
அவளோட கண் என்ன கலர் தெரியுமா? பிரவுன்.  ஆனால் அவளோட அம்மா, கூட பிறந்தவங்க எல்லோரோட கண்ணும் ப்ளூ கலரில் இருந்திச்சு.  

ஏமி அம்மாகிட்ட, ...
“எனக்கு மட்டும் ஏன் பிரவுன் கலர் கண்?” என்று கேட்டாள்.  “இயேசப்பா உன்னை விசேஷமா படைச்சிருக்காங்க.  இது ஏன் என்று இப்பத் தெரியாது.  ஆனால் ஒரு நாள் அது உனக்குப் புாியும்” என்றார்கள்.  

ஏமிக்கோ பிரவுன் கருவிழி பிடிக்கவில்லை.  ஒருநாள் இரவு படுக்கும்போது இப்படி ஜெபம் பண்ணினாள்,

 “இயேசப்பா நான் நாளைக்கு காலையிலே எழுந்திருக்கும்போது என் கண் ப்ளூவா மாறிடணும்னு” உறுதியாக ஜெபித்துவிட்டு படுத்தாள்.  காலையில் எழும்பினவுடன் ஏமி கண்ணாடி முன்னாடி போய் நின்று கண்களை அகல விரித்து பார்த்தாள்.  
சோகத்தில் முகம் சுருங்கியது.  அழுதுகொண்டே அம்மாவிடம் போய் சொன்னாள்.  அம்மா சொன்னாங்க, 

“தேவன் எதை நமக்கு செய்தாலும் அது நன்மை யாகத்தான் இருக்கும்.  பிரவுன் கண்ணும் நன்மைக்குத்தான்” 

என்று ஆறுதல் படுத்தினாங்க.

வருஷங்கள் கடந்தன.  ஏமி இந்தியாவிலுள்ள பெண்பிள்ளைகளுக்கு நிகழும் கொடுமைகளைக் குறித்துக் கேள்விப்பட்டாள்.  நம் நாட்டின் மீது பாரம் கொண்டு, நம் நாட்டிற்கே சேவை செய்யும்படி வந்தாள்.  

இந்தியாவிற்கு வந்து இறங்கியதும் அவளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம்.  இந்தியர்களின் கண்கள் அவளுடைய கண்ணைப்போலவே இருந்தது.  

“ஓ, நான் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை இந்தியாவில் ஊழியம் செய்யும்படி முன்குறித்ததால் எனக்கு இந்தியரைப் போலவே கண்களைத் தந்துள்ளார்” 

என தேவனைத் துதித்தாள்.

என் அன்புக்குாியவா்களே, 
கர்த்தர் தெரிந்து கொண்டவர்களின்  செயல் களும், அவர்களது சகல விஷயங்களும் எங்கே கா்த்தா் உபயோகிக்க விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல்  காணப்படும்.

கர்த்தர் சவுலை ராஜாவாக தெரிந்து கொண்ட பொழுது  நடந்த அடையாளங்கள். 

கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். 
நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார். 

சவுல் ராஜாவான பின்பு  
ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, 
எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 

 அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள். 
சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.  (1 சாமுவேல் 10: 6-24)

இன்றும்  உங்களைப் பார்த்து 
கர்த்தர் சொல்கிறார்.. கர்த்தர் எதற்காக என்னை அழைத்திருக்கிறாரோ.. ..

அதற்குரிய சகல அடையாளங்களை உங்கள் பேச்சில் உங்கள் சாரத்தில் உங்கள் நடைமுறை  பழக்கவழக்கங்களில்  ஏற்படுத்துவார். 

ஏமி அம்மையார் நம் நாட்டில் வந்து சேவை செய்தது அயர்லாந்து தேசத்தில் சிறுமியாயிருந்த போதே அவ்விதமான அடையாளங்கள்  காணப்பட்டது. 

அதைப்போலவே,  
உங்கள் எதிர்காலத்தின்  திட்டத்திற்காகவே உங்களை  அழைத்தவர்  நீங்கள் அறிந்து கொள்ளும்படியான  அடையாளங்களை உங்களில் ஏற்படுத்துவார். 

"பயப்படாதே;… உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” – ஏசாயா 43:1

தேவன் சகலத்தையும் நன்மையாகவே செய்வார்.  இப்போது உங்களுக்கு  இருக்கும் நிலைமை எப்படி இருந்தாலும் அதை மகிழ்வாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.  உங்களை உண்டாக்கின ஆண்டவர் உங்களைக் குறித்து பெரிய நோக்கம் வைத்துள்ளார்.எல்லாம் நன்மையாகவே முடியும்.

#நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!



286  தேவன் நம்மேல் வைத்த தமது அன்பு

ஒரு ஊரில் ஒரு போதகரும், ஒரு நாத்திகரும் நண்பர்களாய் இருந்தனர். போதகர் இயேசு கிறிஸ்துவையும், சிலுவைபாடுகளையும் எவ்வளவோ விளக்கி நாத்திகருக்கு சொல்லியும், நாத்திகர் கேலியும் பரியாசமும் செய்து விட்டு போய் விடுவார்.

ஒரு நாள் காலை, போதகர் அவசரமாக நாத்திகர் வீட்டிற்கு வந்து, "வாரும், எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு வேடிக்கையைப் பாரும்" என்று அவசரமாக அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தார்.

அங்கே கோழிக் கூண்டுக்குள் ஒரு கோழியின் இறக்கைக்குள்ளிருந்து ஏழெட்டு குஞ்சுகள் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

அந்தக் கோழியைப் பாரும். அது குளிர்ந்து போயிருக்கிறது. அதன் தலையை பாரும், ஒரு கீறி பிள்ளை கடித்து அதனுடைய இரத்தத்தை உறிஞ்சி குடித்திருக்கிறது.

தான் அந்த இடத்தை விட்டு அசைந்தால், தன் குஞ்சுகளுக்கு சேதம் வரும் என்று அந்த இடத்தைவிட்டு அசையாதபடி இருந்திருக்கிறது பாரும்" என்றார்.

நாத்திகர் கண்கள் கோழியின் தலையில் வழிந்த இரத்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர் உள்ளத்தை யாரோ உலுக்குவது போலிருந்தது.

"கிறிஸ்துவின் இரத்தத்தை இவ்வளவு நாளும் நான் அலட்சியம் செய்தேனே, அந்த அன்பின் மேன்மையை அறியாதிருந்தேனே" என்று கதறி அங்கேயே முழங்காற்படியிட்டார்!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ( ரோமர் 5:8 )


287      சோழ நாட்டு வீரச்சிறுவன்

    
 சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.
    
 அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.
     
அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர். சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?” என்று ஆணவத்துடன் கேட்டான். மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
     
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—

     
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
     
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன. கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
     
“”மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?” என்று இறுமாப்புடன் சொன்னான். மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—
     
“”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான். “”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.
     
என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான். கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது. யாரிந்தச் சிறுவன்?

    
 உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான். 

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் வருவது போல நம் வேதாகமத்திலும் ஒரு சரித்திரம் நாம் நன்றாய் அறிந்தது ஒன்று உண்டு. தாவீது, கோலியாத்தின் சரித்திரம். சிறுமையும், எளிமையுமான சிறிய தாவீதைக்கொண்டு தேவன் பலத்தவனான கோலியாத்தை ஒரே அடியில் வீழ்த்தினான். 

சரி தாவீது எவ்வாறு கோலியாத்தை வீழ்த்தினான் என்றால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவோம் தேவ பெலத்தை கொண்டு தான் வென்றான் என்று. ஆம் அது உண்மைதான். எனினும் ஏன் நெற்றியில் குறி வைத்து கல்லை எறிய வேண்டும் என்றால் அந்த இடம் மட்டும் தான் திறந்திருக்கும் மற்ற இடமெல்லாம் கவசங்களால் மூடி மறைத்திருப்பான் என்று பதில்.

பெரும்பாலான வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, கோலியாத் மட்டுமல்ல அவனை போன்ற இராட்சதர்கள் (Acromegaly) என்னும் ஒருவித நோயின் காரணமாக தான் இவ்வாறு அசுரத்தனமாக வளர்கின்றனர். மேலும் இவர்களுக்கு கிட்டப்பார்வை (short sight) குறைவாகத்தான் இருக்குமாம். 

தாவீதின் கையிலிருந்தது ஏதோ பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு பொருளல்ல மாறாக ஒவ்வொரு ஆட்டு மேய்ப்பனும் காட்டு விலங்குகளிடமிருந்து தன்னையும் தன் மந்தையையும் பாதுகாக்க உபயோகப்படுத்துகிற ஒரு ஆயுதம் தான் அந்த கவண். சிந்தித்துப் பாருங்கள் ஒரு காட்டு விலங்கை துரத்த வேண்டும் என்றால் எப்பேற்பட்ட ஆயுதம் தேவைப்படும் என்று. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது தாவீது பயன்படுத்திய கவண்  ஒரு துப்பாக்கியிலிருந்து (.45 caliber pistol) வெளிவரும் வேகத்திற்கு நிகரானது என்று. 

இவ்வளவு வலிமை நிறைந்த ஆயுதத்துடன் தேவனுடைய பெலனும் சேர்ந்ததால் தாவீது கோலியாத்தை எளிதில் வென்றான். தாவீது சொல்கிறார்,

17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.

சங்கீதம் 40:17

எனவே நம்மேல் நினைவாயிருக்கிற தேவன் அனுதினமும் நம்மை வழிநடத்தி கோலியாத்தை போன்ற எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு உறுதுணையாய் நின்று நம்மை விடுவித்து நம்மை காத்துக் கொள்வார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


288               சுட்ட நாக்கு

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.

மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்றிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.

அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?

மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.

குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான்.

 அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்.

சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.

சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தன் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*



289                      பெருமை


ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது.

மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. "நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது என் அலகு எவ்வளவு பெலன் வாய்ந்தது" என்று பெருமை கொண்டது.

அதுமட்டுமல்ல, இன்னும் பெரிய மரங்களையும் நான் வீழ்த்திக் காட்டுகிறேன் பாருங்கள், என்று சவால் விட்டு போய், தன் அலகை முறித்துக் கொண்டது.

இன்று நம்மில் அநேகர் இப்படித்தான் பரிசுத்தாவியானவர் அவர்கள் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் கிரியை செய்திருக்க, கர்த்தருக்கு மகிமை செலுத்தி தங்களை மறைத்து ஜீவிக்காமல், என் ஊழியத்தில் இத்தனை பேர் ஒப்புக்கொடுத்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள் என்று "டமாரம்" அடித்து கடைசியில் விழுந்து போய்விடுகிறார்கள்.

உங்கள் மூலம் இதுவரை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று தேவ மனிதர் மூடியிடம் கேட்டபோது,

அவர் தாழ்மையாக சொன்னார்:- "நான் கணக்குப் பார்க்க ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகம் என்னிடத்தில் இல்லை. நான் அப்பிரயோஜன மற்ற ஊழியக்காரன்" என்றாராம்!!

கர்த்தர் D.L மூடி பிரசங்கியாரை கடைசிவரையும் வல்லமையாக உபயோகப்படுத்தினதின் இரகசியம் இதுதான். தேவஜனமே, உங்களைத் தாழ்த்தி, கிறிஸ்துவில் மறைந்து ஊழியஞ்செய்யுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஆமென்.

சங்கீதம் 106:2

கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?




-----

290         அழகியபுரம் என்ற கிராமம்

     
நகரத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த “அழகியபுரம்’ கிராமம். பெயருக்கேற்றபடி மிகவும் அழகு வாய்ந்தது அந்தக் கிராமம். எங்கு பார்த்தாலும் “பச்சைப் பசேல்’ என்றுதான் காட்சியளிக்கும். வளமான நீர் நிலைகள் கண்களுக்குக் குளுமை சேர்க்கும். ஓங்கி வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பன்னீர் பூக்கள் பார்ப்பதற்கு பூமழை பொழிவது போல் தோற்றமளிக்கும். அளவான வீடுகளுடன், அமைதியான சூழலில் இருந்தது அந்தக் கிராமம். பட்டணத்திலிருந்து அந்த ஊரில் வசிக்கும் பண்ணையார் வீட்டிற்கு அவரது மகளும், பேரனும் வந்திருந்தனர். பேரனுக்கு கிராமம் என்றாலே இளக்காரம்.
     
“மம்மி… உங்க ஊரு சரியான நாட்டுப்புறம். அந்த வயல் வரப்புகள்ல நடப்பது அய்யோ அம்மா… என் கால் எல்லாம் டர்டி ஆயிடும். படிக்காத உங்க சொந்தக்காரங்க… “தம்பி… புள்ள எப்படா வந்த…’ என ராகம் போட்டு கூப்பிடுவது எல்லாம் எனக்கு பிடிக்காது…’ மம்மி’ என்பான்.

 அதைக் கேட்டு மந்தகாசமாக சிரிப்பார் கணவர். சந்திராவுக்கு அழுகையா வரும். என்ன செய்வது அப்படியே தாங்கிக் கொள்வாள். மாலை நேரத்தில் தகப்பனாருடன் மாடியில் நின்று கிராமத்தை பார்த்தான் சந்தோஷ். அப்போது நகரத்தின் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்ட கிராமத்தின் எழில், அதன் அமைதியான சூழ்நிலை அவன் மனதை கொள்ளைக் கொண்டது. அதிகாலையிலேயே எழுந்து கையில் பேஸ்ட், பிரஷ்ஷுடன் வெளியே வந்த சந்தோஷை கணக்குப் பிள்ளை அன்போடு அழைத்தார்.
     
“”தம்பி எங்க ஊரு எப்படி இருக்கு?” என்றபடியே கையில் ஒரு குச்சி, அதை தன் வாயில் வைத்து தேய்த்துக் கொண்டே பேசினார்.
     
“”என்ன தாத்தா இந்த குச்சி வைத்து என்ன பண்ணுறீங்க… பேஸ்ட், பிரஷ் எதுவுமே இல்லாம இப்படி குச்சி வைத்து கண்டபடி இழுக்குறீங்களே! உங்க வாய் தான் புண்ணாயிடாதா?” என்றான். இதைக் கேட்ட முதியவர்,

 “”தம்பி! நீங்க பட்டணத்து தம்பி… இங்கிலீஸ் படிப்பெல்லாம் படிக்கிறீங்க. பட்டணத்துலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன உங்களுக்கு இந்தக் கிராமத்து சூழல் பற்றியும், இங்கு இருக்கிறவர்கள் பற்றியும் தெரிஞ்சிருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
     
நான் விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து இந்தக் குச்சியால்தான் பல் தேய்ச்சிட்டு வர்றேன். அப்படி ஒண்ணும் என் வாய் புண்ணாகிடல. மாறாக என்னோட ஒரு பல் கூட இதுவரைக்கும் விழுந்ததில்லை, ஒரு சொத்தைப் பல் கூட இன்னும் எனக்குக் கிடையாது. காரணம், இது வெறும் குச்சி இல்ல; ஆலங்குச்சி. 

அதோ அந்த ஆலமரத்திலிருந்துதான் தினமும் ஒரு சிறுகுச்சியை ஒடித்து பல் தேய்ப்பேன்.      “”உங்க பேஸ்ட், பிரஷ்ல இல்லாத மருத்துவ குணமெல்லாம் இயற்கையான இந்த ஆலங்குச்சியில் இருக்கு. “ஆலும், வேலும் பல்லுக்குறுதி.’     
இதுமட்டுமில்லாம காலையில் எங்க ஊர் குளத்தில் குளிச்சிட்டுப் போய் பாருங்க! உங்களுக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சியே தனிதான். அதுதான் சொல்லியிருக்காங்க. குளிர்ந்த நீரில் குளிச்சா உடம்பு சுத்தமாகிறது மட்டுமல்லாமல் நம்ம மனசும் குளுமையா இருக்கும். இன்னும் எவ்வளவோ இருக்கு தம்பி. இதெல்லாம், நீங்க அடிக்கடி வரும்போது தெரிஞ்சிக்குவீங்க…

 டிபன் சாப்பிட்டு விட்டு ரெடியா இருங்க. நான் வந்து கிராமத்தை சுத்திப் பார்க்க கூட்டிகிட்டு போறேன்,” என்றார். முதல் முறையாக சந்தோஷின் மனதில் கிராமத்தை பற்றிய எண்ணம் மாறியது. காரணம், 15 வயதிலேயே சொத்தைப் பல்… அடிக்கடி பல் கூசும். பல்லில் ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தோஷ்க்கு. 

முதல் முறையாக கணக்குப்பிள்ளை சொன்ன ஆரோக்கியமான பற்கள் மற்றும் பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சி பற்றி அவர் சொன்னது அவன் மனதை தொட்டது. அம்மா சொல்லும் போது, புத்தகத்தில் படிக்கும் போதெல்லாம் ஏற்படாத ஒரு நம்பிக்கை அவன் மனதில் முதன் முதலாக உண்டாகியது. அத்துடன் அம்மாவின் ஆசைப்படி பத்து நாட்கள் தாத்தா வீட்டில் இருந்து கிராமத்து மண்ணின் மான்புகளை தெரிந்துக் கொள்ளலாம் என நினைத்தான்.

என் அன்பு வாசகர்களே,
இவ்வுலகில் தேவன் படைத்த அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை. அதில் ஒன்று தான் கிராமத்து வாழ்க்கை. இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் மற்றும் நல்ல தட்பவெப்ப நிலை என சொல்லிக்கொண்டே போகலாம்.

மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் வித்தியாசமின்றி உழைத்துக்கொண்டிருக்கும் நகர வாழ்க்கை வாழ்பவர்கள் அநேகர் தங்களின் விடுமுறை நாட்களை ஏதாகிலும் ஒரு கிராமப்புறத்தில் தான் செலவிடுகின்றனர். ஏன் அவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்றால் பட்டணங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரும் பொழுதுபோக்கு என்னவெனில் வணிக வளாகங்கள் (shopping malls) மட்டுமே. அதுவே கிராமப்புறத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கோ தங்கள் வீடே ஒரு பெரும் பொழுதுபோக்கு அங்கமாய் இருக்கிறது.

தங்கள் வீட்டை சுற்றி தோட்டம், தோட்டத்திற்கு தேவையான நீரை கிணறு, ஏரி, குளம் என பல்வேறு நீர் ஆதாரங்கள் மிகுந்து காணப்படுகிறது. கிராமத்தின் பழக்கவழக்கங்கள் உடலை இயற்கையான முறையில் ஆரோக்கியத்துடன் பாதுகாக்க உதவுகிறது. காலத்தால் அழியாத கலாச்சாரங்கள் கிராமங்களில் தான் மிகுந்து காணப்படுகிறது. 

அது மாத்திரமல்ல கிராமத்து வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்து தேவனை தேடி, தங்கள் கடைமைகளை செய்வார்கள். 

ஆனால் நகர வாழ்க்கையில் தங்கள் பணி முடிந்து தூங்க செல்வதே இரவு 12 அல்லது 1 மணியாகிறது. காலை எழுவதை சொல்லவா வேண்டும். நகர வாழ்க்கை வாழ்கின்ற அநேகர் அதிகாலையிலே எழுந்து தேவனை தேடி தான் தங்கள் கடைமைகளை செய்கின்றனர் அவர்கள் வெகு சிலரே. 

 நகர வாழ்க்கை தோன்றிய பிறகு அநேகர் கிராமத்து வாழ்க்கையை விட்டுவிட்டார்கள்.  கிராமத்து வாழ்க்கையின் மீதுள்ள பற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுபோலத்தான் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆரம்ப காலக்கட்டத்தில் கிராமத்தை போல, இருப்பதை கொண்டு செழிப்பாய் குறை ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தபோது தேவனை தேடி நாடி ஓடினார்கள். ஆனால் நகர வாழ்க்கை வாழ  ஆசைப்பட்டபோது தேவனை விட்டு உலகத்தை நாடி தேடி ஓட ஆரம்பித்ததால் தேவனை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டனர் காரணம் உலகத்திற்கு கொடுப்பதற்கு தான் நேரம் சரியாக இருக்கிறது. வேதம் சொல்கிறது, 


4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 
வெளிப்படுத்தின விசேஷம் 2:4


எனவே அன்பானவர்களே, இக்கதையில் அந்த பையனுக்கு இறுதியில் தோன்றியது போலவே நாமும் நம்முடைய தேவனை தேடுவதற்கு நேரத்தை ஒதுக்குவோம் குறை இல்லாத வாழ்க்கை வாழ்வோம். 


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


291.            கழுகு

    ஒரு பெரிய கழுகு ஒன்றைக் கடைக்காரன் ஒருவன் ஒரு பெரிய கூண்டில் அடைத்து, அதன் கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி, காட்சிப் பொருளாய் வைத்திருந்தான். ஏராளமான சிறுவர்களும், பெரியவர்களும் வேடிக்கை பார்க்க அங்கே கூடுவதுண்டு.

வாலிபன் ஒருவன் அந்தக் கழுகின் மேல் இரக்கம் கொண்டு, அந்த கடைக்காரனிடம், அந்தக் கழுகை எனக்குத் தந்துவிட முடியுமா? என்று கேட்டான். கடைக்காரன் ஒரு பெருந்தொகையை வாங்கிக் கொண்டு, கழுகை விற்று விட்டான்.

ஒரு மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு சென்று, கூண்டிலிருந்து கழுகை எடுத்து, காலில் இருந்த சங்கிலியை அவிழ்த்து வெளியே விட்டான் அந்த வாலிபன்.

ஆனால் அந்தக் கழுகு பறக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தான் விடுதலை பெற்று விட்டதையும், தன்னால் இனி உன்னதங்களிலே பறக்க முடியும் என்பதையும் கழுகு உணரவே இல்லை!

சற்று நேரத்திற்குப்பின், ஆகாயத்தில் ஏதோ ஒரு கழுகு பறப்பதைக் கண்டு, இந்தக் கழுகும் தன்னை அறியாமல் செட்டைகளை அடித்து பறக்க ஆரம்பித்துவிட்டது!

இப்படிதான் சாத்தானும் அநேகரை பாவ அடிமைத்தனத்திற்குள் கட்டி வைத்திருக்கிறான். இயேசு கல்வாரியின் கிரயம் செலுத்தி மீட்டுங்கூட, அவர்களுக்குள் பழைய பாவ சுபாவம் இருக்கிறபடியால், செட்டைகளை அடித்து உயர எழும்பாமலிருக்கிறார்கள்.

#ரோமர் 8:2

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.