Thursday, 21 May 2020

சிறுகதை151-161

151     மூத்தோர் சொல்லைக்கேள்..*


 புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னதுரை ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னதுரைக்கு புல்லாங்குழல்  வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான். அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருந்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

 வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது   அதைப் பார்த்த அந்த ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல் போனது. ... “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது. ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க,  இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும்  என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று,  தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.

 “ஓ...! அப்படியா!  நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார் களே?” என்று ஆச்சாியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெல்லாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய். ஓ அப்படியா “சரி அங்கேயேஇருங்கள். 

நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் சென்றது, 

ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென  அதன் காலை பிடித்து கொண்டது. ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னதுரையும்ஆடு போடுகிற சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினான். ஓநாய்  அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து  விரட்டிவிட்டார்கள்.

  அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல்  இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னதுரைக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி


 என்_அன்புக்குரியவர்ளே..* பெரியோர் சொல்லையும், பெற்றோர் சொல்லையும் கேட்க வேண்டும். கேட்காவிட்டால்  உயிருக்கு கூட ஆபத்தாகி விடும்.

 பைபிள் சொல்கிறது.. பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள். இது கர்த்தருக்கப் பிரியமானது  - கொலோ.  3:20

 ஓநாயை போன்ற மனிதர்கள் கள்ளதீர்க்கத் தரிசிகள், உங்களுக்குள்ளே வருவார்கள்.என்று அப்போஸ்தல நடபடிக ளில் பவுல் சொல்கிறார்.  நான் போனபின்பு மந்தையைத் தப்ப விடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக் குள்ளயே வருவார்கள்   - அப்.20:29 இயேசு சொன்னார், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கை யாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். - மத்  7:15 

எனவே உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை பாதுகாத்துக்கொள்ள கிறிஸ்துவுக்குள் ளேயும், நல்ல ஆவிக்குரிய சபையிலேயும் ஐக்கியமாயிருங்கள். கூலிக்கு வேலை செய்கிறவனைப் போல பணத்துக்காக ஊழியம் செய்கிறவா்கள்.  ஆடுகளை பாராமரிக்கவோ,  போஷிக்கவோ மாட்டார்கள். குறிப்பாக   பட்சிக்கிற ஓநாய்களைப் போலிருக்கிற மோசமான மனுஷர்களின் உபதேசத்திற்கு  விலக்கி   பாதுகாக்கமாட்டார்கள்.

 எனவே  உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆவியானவரின்  நடத்துதலின்படியும் நல்ல போதகரின் ஐக்கியத்திற்குள்ளும் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!*


 152                    நிம்மதி எங்கே ? 

நிம்மதி இழந்து தவித்த ஓர் ஆலை முதலாளி கடற்கரையின் பக்கம் நின்றுகொண்டிருந்தார் . சிகரெட் அவர் உதடுகளையும் , விரல்களையும் சுட்டுக்கொண்டிருந்தது . அங்கு நின்ற ஒரு படகில் பெரிய பெரிய மீன்கள் நிறையத் துடித்துக் கொண்டிருந்தன . அப்பொழுது படகுக்குரிய மீனவத்தொழிலாளி வந்தார் . ஆலைப் பெருமுதலாளிக்கும் , மீனவச் சிறு தொழிலாளிக்கும் உரையாடல் நடந்தது . முதலாளி : இந்த மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் ?

 தொழிலாளி : கொஞ்சநேரம்தான் .

 முதலாளி : கூடக் கொஞ்சநேரம் செலவிட்டிருந்தால் இன்னும் நிறைய மீன்கள் கிடைத்திருக்குமே .

 தொழிலாளி : அன்றன்றுள்ள என் குடும்பப் பராமரிப்பிற்குக் கிடைத்தால் அதுவே போதும் .

 முதலாளி : அப்படியானால் மீதமுள்ள நேரங்களில் என்ன செய்வீர்கள் ?

 தொழிலாளி : பிள்ளைகளோடு விளையாடுவேன் , பாடம் படிக்க வைப்பேன் . மனைவியோடு அமர்ந்து நாளைய காரியங்களை சிந்திப்போம் . சிறிது நேரம் ஓய்வு எடுப்பேன் . மாலை நேரங்களில் தெருவைச் சுற்றி உலாவருவேன் . சூடாக டீ அருந்துவேன் . ஆலயத்திற்குப்போய் வழிபடுவேன் . இரவு குடும்பமாகக் கூடிப்பாடி வேண்டுவோம் . குடும்ப வாழ்க்கை நிறைவும் , மனரம்மியமுமாய் செல்கிறது .

 முதலாளி : நீங்கள் மீன்பிடி தொழிலில் அதிக நேரம் செலவிட்டால் இரண்டு படகுகள் வாங்கலாம் . மேலும் மேலும் படகுகளை வாங்கிக்கொண்டே இருக்கலாம் . நேரடியாக மீன்களை விற்று பெரும் பணக்காரர் ஆகலாம் . மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டலாம் . பிள்ளைகளைப் படிக்க வைக்க சென்னை சென்று செட்டில் ஆகலாம் . அங்கு உங்கள் வாணிபம் வான் உயரக் கொடி கட்டிப்பறக்கும் . 

தொழிலாளி : அந்த நிலைக்குவர எவ்வளவு காலம் பிடிக்கும் ? முதலாளி : பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் .

 தொழிலாளி : அடேங்கப்பா . . . .

 முதலாளி : உங்கள் படகுகளை விற்று நீங்கள் கோடீஸ்பிரபு ஆகிவிடலாம் .

 தொழிலாளி : நாங்கள் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறோம் . எனக்குக் கிடைக்கும் கோடாகோடியைக் கொடுத்து நிம்மதியை விலைக்கு வாங்க முடியுமா ? முதலாளி கண்விழி பிதுங்க லொக் , லொக் என்று துரத்தியவாறு வந்தவழியே போய்விட்டார் . 


153                       நாயின் நேயம் 

போலந்து நாட்டுச் சிறுமி ஜுலி கொள்ளை அழகு , அன்று அதிகமாகப் பனி கொட்டிக்கொண்டிருந்தது . முகம் தெரியாத மூடுபனி .

 வீட்டுத் தோட்டத்தில் குட்டி நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் , மாலை இருட்டில் திடீரென்று சிறுமியைக் காணவில்லை . பெற்றோர் துடித்தனர் . அந்தத் தெரு முழுக்க அழுதது . ஊரே சிறுமியைத் தேடியது . கிடைக்கவில்லை . இறுதியாகத் தீயணைக்கும் படையினர் ஒரு காட்டுப் புதருக்குள் கண்டுபிடித்தனர் . ஆனால் அங்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது .

 அவள் வீட்டுப் பெரியநாய் சிறுமியை அரவணைத்தபடி இருந்தது . தீயணைக்கும் படையினர் திடுக்கிட்டனர் . சிறுமி இறந்து கிடப்பதாகவே கருதினர் . ஆனால் நாயின் பலத்த அரவணைப்பிலிருந்து குழந்தையை உருவி எடுத்தனர் . சிறுமியின் உடலில் உயிர் இருந்தது கண்டு சிலிர்த்தனர் . ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றார்கள் . 

அதிகாலை இருட்டோடே கொல்லும் குளிர்வாட்டிக்கொண்டிருந்தது . சிறுகுழந்தை பனிப்பொழிவில் இறந்துவிடாதவாறு பெரிய நாய் சிறுமிக்குக் கதகதப்பைக் கொடுத்து பச்சிளம் பூவைப் பாதுகாத்துள்ளது .

 மனநிலை பாதித்த ஒருவன் சிறுமியை தூக்கிச்சென்று , காட்டில் கொண்டு போட்டுள்ளான் . நாய் தேடிச்சென்று சிறுமியை மீட்டது . இது நிகழ்ந்தது . 3 . 3 . 2013

 154           கல்லறை பேசுகிறது 

ஜான் ஹெடி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் . கொடிய அரக்கர்கள் வாழும் ஹைப்ரட்டீஸ் தீவுக்கூட்டத்தில் குடும்பமாகச் சென்று ஊழியம் செய்தார்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்கள் மத்தியில் முழு அர்ப்பணிப்போடு தொண்டாற்றினர் . .

 மனுஷனாக வாழக் கற்றுக்கொடுப்பதே பெரும் ஊழியமாயிருந்தது . கொடிய வியாதி காரணமாக தாம் நேசித்த அன்புக்குழந்தை இறந்தது . தம் கரங்களாலே குழி தோண்டி அடக்கம் செய்தார் . மனைவி வியாதிப்பட்டு சில நாட்களில் மரித்தாள் . கதவைப் பூட்டிக்கொண்டு கதறி அழுதார் . - " ஹெடி , நீ என்னை நேசிக்கிறாயா ? ” என்று மூன்று முறை கடவுள் கேட்டார் . " ஆம் , ஆண்டவரே , நான் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது பேதுரு நினைவிற்கு வந்தார் .

 தன் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் எண்ணம் வந்துவிடக்கூடாது என்று கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை சுக்கு நூறாக உடைத்தெரிந்தார் . 24 ஆண்டுகள் அந்தத் தீவில் ஊழியம் செய்தார் . 14 . 12 . 1872ல் 57 வயதில் மரித்தார் . மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர் . 

" 1848ஆம் ஆண்டு ஹெடி இங்கு வரும்போது ஒரு கிறிஸ்தவர்கூட இங்கு இல்லை . 1872ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது இங்கு கிறிஸ்துவை அறியாதவர் ஒருவர் கூட இல்லை ” என்று அவருடைய கல்லறை வாசகக் கல்வெட்டு கூறுகிறது .

 அர்ப்பணிப்பு என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டிய அவரது கல்லறை இன்றும் பேசுகிறது . 


155         எங்கள் நிருபம் நீங்கள்தானே !

 தமிழ்நாட்டிற்குக் குறிப்பாகப் பரந்த நெல்லைமாவட்டத்திற்கு வந்த ஆரம்பகால மேல்நாட்டு மிஷனெரிகள் இம்மக்களின் கல்விக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தங்களையே பரித்தியாகம் செய்தார்கள் . அன்னை தெரசாவின் முன்னோடியான கார்மைக்கேல் அம்மா , கால்டு வெல் பேராயர் போன்றோரின் உடல்கள் இந்த மண்ணில் புதைக்கப் பட்டுள்ளன .

 மருத்துவ மிஷனெரி ஒருவர் மிகவும் சோர்ந்து தம் பணியை முடித்துத் தங்குமிடம் சென்றுகொண்டிருந்தார் . வீட்டுப்பக்கம் வரும்போது சிறுவன் ஒருவன் மூச்சு இரைக்க ஓடி வந்தான் . “

 துரைகளே , எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஓர் அம்மா மிகமோசமான நிலையில் இருக்கிறார்கள் . நீங்கள் உடனே வரவேண்டும் ” என்று நெஞ்சுருகச் சொன்னான் . மிகவும் களைத்துப் போயிருந்த மிஷனெரி சிறுவனிடம் , “ தம்பி , இந்த வேதாகமத்தைக் கொண்டுபோய இதை வாசித்து ஜெபியுங்கள் , நான் சீக்கிரமாக வருகிறேன் ” என்றார் . உடனே சிறுவன் , “ துரைகளே , அவர்களில் யாருக்கும் படிக்கத் தெரியாது அவர்கள் படித்த வேதப்புத்தகம் நீங்கள்தான் ” என்றான் . மிஷனெரி அதிர்ந்துபோனார் . சோர்வை தூரத்தள்ளிவிட்டு அங்கு சென்றார் ." எங்கள் நிருபம் நீங்கள்தானே ? ” ( 2 கொரி . 3 : 2 ) .


 156         இரண்டு வேதாகமங்கள்

 அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா இரண்டு வேதாகமங்கள் மீது கைவைத்து பதவிப் பிரமாணம் எடுத்தார் . ஒன்று : ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய வேதாகமம் . இரண்டு : மார்ட்டின் லூதர்கிங் உபயோகித்த வேதாகமம் . இருவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் வளர்ந்த பிரபலங்கள் . இனப்பாகு பாட்டிற்கு எதிர்த்து நின்ற புரட்சியாளர்கள் . லிங்கன் 1863 ஜுன் முதலாம்தேதி அடிமைத்த ன விடுதலையின் பிரகடனத்தின்போது இப்படிப் பேசினார் . " ஒருவர்மீதுகூட எனக்குக் கசப்பில்லை . அனைவர்மீதும் அன்பு கூருகிறேன் . " மார்ட்டின் லூதர்களில் 1963 ஆகஸ்ட் 26ஆம் நாள் ஆபிரகாம் லிங்கனின் நினைவுச் சின்னத்தில் இரண்டு இலட்சம் மக்கள் கூடியிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க கூட்டத்தில் இப்படிப் பேசினார் : “ இனப்பாகுபாடுகள் காரணமாக மக்கள் புறக்கணிக்கப்படுவது தேவனுடைய சித்தத்திற்கு மாறானது . அவர்களின் அடிச்சுவட்டை ஒபாமா பின்பற்ற விரும்பினார் . கிறிஸ்தவம் சமூகப் புரட்சியையும் மானுட மேன்மையையும் நாடுகிறது . ஆனால் நடைமுறைக் கிறிஸ்தவம் முதலாளிழ்வச்சேற்றில் வீழ்ந்து கிடக்கிறது . " நீயோ எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி ” ( தீத்து 1 : 12 ) . 

157      இறைவன் பாதுகாத்த இலக்கிய ஏடுகள்

 பாகியான் சீன யாத்திரிகன் . இந்தியாவை ஆய்வு நோக்கில் சுற்றினார் . கங்கையாற்றின் அக்கரை சென்றபோது பழமையான சில ஓலைச் சுவடிகள் கிடைத்தன . பாகியான் அவைகளைப் பத்திரமாகப் பாதுகாத்து படகில் பயணம் செய்தார் . அவரோடு இருவர் துணைக்குச் சென்றனர் . நடு ஆற்றில் படகுத் தடுமாறியது . புயற்காற்று சீறிவீசியது . பாகியானுடன் வந்த கல்வி அறிவு இல்லாத இருவரும் ஆற்றினுள் வீழ்ந்து மாய்ந்தனர் . ஓலைச்சுவடிகளும் , பாகியானும் , படகோட்டியும் பத்திரமாகக் கரை சேர்ந்தனர் . இன்றுவரை அந்த ஓலைச் சுவடிகள் சீனாவில் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன . அது புத்தகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது . அந்தச் சுவடிகளிலிருந்து வாழ்க்கை முறைகள் , நாகரீகங்கள் , அறிவியல் சிந்தனைகள் , கோட்பாடுகள் கிடைக்கப்பெற்றன . இறைவனே பாதுகாத்துத் தந்த இலக்கியக் காலச்சுவடுகளாக இன்றும் இலங்குகின்றன . " அவரைப்பாடி , அவரைக் கீர்த்தனம்பண்ணி , அவருடைய அதிசயங்களை யெல்லாம் தியானித்துப்பேசுங்கள் ” ( 1 நாளா . 16 : 9 ) . 

158          நாத்திகர் நாணிப்போனார் 

நாத்திகர் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது . அழுத்தமான கிறிஸ்தவர் ஒருவர் உள்ளே நுழைந்தார் . “ என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் ' என்ற ஆர்வத்தில் சென்றிருந்தார் . மேசையின்மீது பல நூற்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன . ஒருவர் தாம் சமீபத்தில் வெளியிட்ட நாத்திக நூலின் பெருமையைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது , அடுக்கி இருந்த நூற்களில் பரிசுத்த வேதாகமமும் இருந்தது . இவரைப் பார்த்தவுடன் அங்கிருந்த ஒருவர் வேதப்புத்தகத்தை மட்டுப்படுத்து வதற்காக அங்கிருந்த அனைத்து நூற்களுக்கும் அடியில் வைத்தார் . வைத்ததோடல்லாமல் கிறிஸ்தவ நண்பரை ஏளனமாகப் பார்த்தார் . கிறிஸ்தவர் அங்குக் கூடியிருந்த அனைவரையும் நோக்கி , “ எல்லாப் புத்தகங்களுக்கும் ஆதாரம் , அடிப்படை வேதப்புத்தகமே என்று நண்பர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார் ” என்றார் . ஆத்திரம் கொண்ட நாத்திகர் , பைபிளை அடியிலிருந்து உருவி எடுத்தார் . எல்லாப் புத்தகங்களுக்கும் மேலாக வைத்தார் . உடனே கிறிஸ்தவ ஊழியர் ஆம் , அனைத்துப் புத்தகங்களையும்விட வேதமே உயர்ந்தது என்றார் . நாத்திகர் நாணிப் போனார் . “ இந்தப் பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும் , கேட்கிறவர்களும் இதில் எழுதியிருக்கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்களை ( வெளி . 1 : 3 ) . 

159            உண்மை எங்கே ?

 மாதத்தின் முதல் ஞாயிறு ஆராதனை . கிறிஸ்து ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது . பிரசங்க வேளை வந்தது . அனைவரும் இறுக்கி , நெருக்கி புளிபோல் அடைத்து அமர்ந்தனர் . புதிதாக ஒரு வெங்கலக்குரல் பிரசங்க பீடத்திலிருந்து கணீரென்று ஒலித்தது . “ உண்மையாயிருத்தல் " பற்றிய போதனை நம் சபைகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது . உண்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை ஏற்பட்டு விட்டது . “ லஞ்சம் கொடுக்காதே . வாங்காதே . குறுக்கு வழியில் சம்பாதிக்க முயலாதே என்ற எச்சரிப்புகள் நமது ஆலயப் புல்பிட்டில் ஓங்கி ஒலிக்க வில்லை . உண்மையாய் நாம் வாழ ஆசைப்படுகிறோம் என்ற மௌன - நீர்த்துப் போன - செயலற்ற பிரசங்கமே குரல் கம்மி வலுவிழந்து ஒலிக்கிறது . காணிக்கைக் கணக்குகளில் உண்மை சுத்தமாய் குறைந்துவிட்டது . போலி வவுச்சர்கள் . போலி பில்கள் மூலம் கணக்குகள் சரிக்கட்டப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது . வெகுமதிகளுக்காக பதவிகளுக்காக மந்திரிகள் பின்னே ஓடும் கேயாசிகள் பெருகிவிட்டனர் . எருசலேமுக்கும் , சமாரியாவுக்கும் விரோதமாய் பிரசங்கித்த மீகா தீர்க்கன் - அவர்களின் கள்ளத்தராசையும் , அளவு குறைந்த மரக்கா ையும் எச்சரிக்கிறார் . வியாபாரிகளே . பணம் படைத்தவர்களே உங்களுக்கு ஐயோ ! " பெருமழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது . மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் ஆலயத்தின் உள்ளிருந்து முறுமுறுப்புகள் எழுந்தன . உயர்மட்டக் குழுவினரிடமிருந்து உரத்த கண்டனக் குரல்கள் ஒலித்தன . லே பிரீச்சரை நம்ம கோயிலுக்குள்ள எவண்டா விட்டான் ? ஐயர் இருக்கும் போது இந்த ஓட்டப் பிரசங்கியார் எதுக்கு ? " மலேசியா மைனர் மோசே மீசையை முறுக்கினார் . பாதிரியார் தவிர யாரும் கோயிலில் பிரசங்கம் பண்ணக்கூடாதென்று எல் . சி . எப் . கமிட்டியில் தீர்மானம் போடணும் என்று கத்தினார் டாஸ்மாக் கடை நடத்தும் டேனியல் . ஆராதனை முடியுமுன் சலசலப்புகளும் , முறுமுறுப்புகளும் ஆங்காங்கு வெடித்தன . கண்டித்துப்பேச வேண்டியது தானே . இப்படிப் பிரசங்கிமார்தான் தேவை ' என்று ஓர் அப்பாவி உண்மைக் கிறிஸ்தவர் ஒடிந்த குரலில் சொன்னார் . வழிபாடு முடியவும் டாஸ்மாக் பிரமுகர் நேரே பிரசங்கியாரிடம் போய் , மார்க்கெட் மைதானத்தில் பேசவேண்டியதை கோயிலில் வந்து கூப்பாடு போடுகிறீரே . . . உமக்கு அறிவு இருக்கா ? ' என்று அடிக்க போகிறவர்போல் நெருங்கி மோதினார் . ஆளுக்கொரு பக்கம் கூப்பாடு போட்டார்கள் . உண்மை உடைந்து நொறுங்குவது போலிருந்தது . ஆயினும் உண்மையின் பக்கம் அநேகர் செவி சாய்த்தனர் . தங்கள் பொய்மைகளுக்காகக் குமுறினர் . " மரணபரியந்தம் உண்மையாயிரு . '" 

160                  பாலு ஏம்மா இனிக்குது ? 

என் மனைவியின் ஆசிரியப்பணி காரணமாக நாங்கள் சிலகாலம் ஆழ்வார் குறிச்சி என்ற ஊரில் தங்கி இருந்தோம் . அது மேற்கு நெல்லை அம்பை பக்கமுள்ள ஊர் .  

1960 ஆம் ஆண்டில் எங்கள் மூத்த இரு பெண் பிள்ளைகளுக்காக ஓர் உரைநடையிட்ட படிப்பினைக் கவிதை எழுதினேன் . “ பாலு ஏம்மா இனிக்குது ? சர்க்கரை போட்டேன் இனிக்குது . சர்க்கரை ஏம்மா இனிக்குது ? கரும்புச்சாறு ருசிக்குது . 
. . கரும்பு ஏம்மா ருசிக்குது ? கடவுள் செய்தார் ருசிக்குது . கடவுள் கூட ருசிப்பாரா ? ஆமா கண்ணே ருசிப்பார் . ' ' " கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் ” சங்கீதம் 34 : 8 .

 அப்பொழுது நான் நெல்லைத் திருமண்டல சிறுவர் மிஷனரியாக இருந்தமையால் நாடு முழுவதும் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன் . எங்கெல்லாம் செய்தி கொடுக்கச் சென்றேனோ அங்கெல்லாம் விதைத்தேன் . இன்று தமிழ் தேசம் முழுவதும் பரவி உள்ளது . மனதிற்கு மகிழ்ச்சியா யிருக்கிறது . இப்பாடலின் படைப்பாளியை மறந்துவிடாதிருக்கப் திவு செய்கிறேன் ) . 

161                 மகிழ்ச்சியான_குடும்பம்".... 

கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான் இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க..... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்... என்று இழுத்தாள்... ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. ஏதும் தவறு பண்ணிட்டிங்களா .. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். என்னங்க இது .. படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான். அவள் படிக்க தொடங்கினாள் ... அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது... அன்புள்ள மகனுக்கு, கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவா இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத. உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு. அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ... நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு... கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன். ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்.... நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா? அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான். உங்கப்பா வாழ்ற காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம் என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன். இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது... உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு. இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உன்கிட்ட சொல்றேன். நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா... காத்திட்டு இருக்காங்க... உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா .. பாத்தியா வாழ்க்கைய ? நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிக்கோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்... ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா? செய்வேனு நம்புறேன். ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற... கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... காபி குடித்த பின்னும் இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்..... .நான் தான்மா.... ஏன் சும்மா பேசக்கூடாதா? ... என்ன செய்ற...அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை. #பிரியமானவர்களே, நீங்கள் தேவனுக்கு அடுத்ததாக உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். மனைவி பிள்ளைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.  உங்கள் புருஷனோடு உட்காந்து மனம்விட்டு பேசுங்கள்.  உங்கள் நண்பர்களை விட உங்களை பெற்ற தாய் தகப்பனிடத்தில் பேசுங்கள் குடும்பத்தில் யாரையும்  ஒதுக்கி வைக்காதீர்கள்.  நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம். என்பதை புாிந்து கொள்ளுங்கள். "மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்". -(நீதிமொழிகள் 18 :22) "உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு". -(நீதிமொழிகள் 5:18) "உன் இளவயதின் மனைவி. உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாயிருக்கிறாள். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு, உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே!! நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்: ஞானமுள்ள பிள்ளையைபப் பெற்றவன் அவனால் மகிழ்வான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்: உன்னைப்பெற்றவள் மகிழ்வாள்". -(நீதிமொழிகள் 23:22-25) 

காலம் கடந்தல்ல. இப்போதே  மகிழ்ச்சியான குடும்பமாயிருங்கள்.!!. 

சிறுகதை 128-136




128       இங்கே என்ன செய்கிறீர்கள் ? 

ஒரு மிஷனரி துருக்கிக்குச் சென்றார் . மிகவும் கடினமாக உழைத்து , கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முயற்சித்தார் . பன்னிரெண்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாலிபன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ரட்சிக்கப்பட்டான் .

 ஒரு நாள் அந்த மிஷனரி - சொந்த தேசத்தில் வெளியான ஒரு கிறிஸ்தவப் பத்திரிகையை நன்பனிடம் காட்டிக்கொண்டிருந்தார் . ஆலயம் நிறைய மக்கள் தம் கைகளை உயர்த்தி தேவனைத் துதிப்பதைக் கண்டு அவன் அதிர்ச் சியடைந்தான் . நெஞ்சை உடைக்கும் ஒரு கேள்வியை அவன் மிஷனரியிடம் கேட் டான் . " கோடிக்கணக்கானோர் இங்கே நரகத்திற்குப் போய்க் கொண்டிருந்கும்போது அந்தக் கிறிஸ்தவர்களெல்லாம் தேவனைத் துதித்துக் கொண்டு அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? " 

தேவனுடைய அருமையான பிள்ளையே , மக்கள் இருளில் உட்கார்ந்துகொண்டு , யாராவது தங்களுக்கு ஒளியைக் கொண்டுவர மாட்டார்களா என்று காத்திருக்கும்போது நீ என்ன செய்து கொண் டிருக்கிறாய் ?

 129                    கருப்பு பலூன் 

பலூன்காரர் ஒருவர் பல பல வர்ண பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார் - பச்சை , ஊதா , சிவப்பு , மஞ்சள் . பலவிதமான சிறுவர் , சிறுமியர் பலூன்களை வாங்கிப் பறக்கவிட்டுக் கொண்டி ருந்தனர் . கருத்த சிறுவன் ஒருவன் பலூன்காரரிடம் , கருப்பு பலூனைச் சுட்டிக்காட்டி , “ ஐயா , கருப்பு பலூன்கூடப் பறக்குமா ? " என்று கேட்டான் . பலூன்காரர் , " நிச்சயமாக கருப்பு பலூன்கூடப் பறக்கும் . பலூன் தானாகப் பறப்பதில்லை . அது என்ன நிறமா யிருந்தாலும் அதற்குள் இருக்கும் காற்றுதான் அதைப் பறக்கச் செய்கிறது , " என்றார் . அருமைப் பிள்ளையே , உன் உடல் தோற்றத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாதே . கடவுள் உன்னை நிரப்ப இடமளிப்பாயானால் விண் ணைத் தாண்டிப் பறப்பாய் ! 115

 130                மனதை_கவர்ந்த_மான்...


 ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.


 மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந் தான். 

மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எாிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. மூன்று பக்கமும் ஆபத்து... அதுவால் எதுவுமே செய்ய முடியாது.  *என்ன நடக்கும்?...* *மான் பிழைக்குமா?...* *மகவை ஈனுமா?...* *மகவும் பிழைக்குமா?...* *இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...* *வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...* *புலியின் பசிக்கு உணவாகுமா?...* பற்றி எாியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிா் புறம். *மான் என்ன செய்யும்?...* 

மான் எதற்கும் கவலைப்படாமல் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.ஒரு உயிரை உலகத்தில் கொண்டு வருவதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்...ஆச்சாியமானது.  மானுக்காக தேவன் செய்த காரியம் 🌑 

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். 🌚

 அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது. 🌚 

தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது. 🌑 

அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது. 

#என்_அன்புக்குாியவா்களே,.. உங்கள் வாழ்விலும், இப்படிபட்ட சந்தா்ப்பங்கள் நிறைய வந்து கொண்டேயிருக்கலாம். அல்லது  இதுவரை இல்லைபென்றால்  இனி மேல் கூட  வரலாம் . அந்த நேரத்தில் பல எதிா்மறை சிந்தனைகள் உங்களைச் சுற்றி நின்று அச்சுறுத்தும். சில எண்ணங்களின் பலம், உங்களை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.

 நீங்கள் இந்த மானிடம் இருந்து கற்றுக்கொள்வது எது?  . அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது தன்னை காப்பாற்றிக்கொள்ள கை வசம் எதையும் வைத்திருக்கவுமில்லை. மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும். இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

 எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை நம் கா்த்தராகிய இயேசுவிடம் விட்டு விடுங்கள். அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டாா். 

அவா்  தூங்குவதும் இல்லை.. உறங்குவதும் இல்லை அவா் நம்மை காக்கி்றவா் எனவே உங்கள்  செயலில் நீங்கள்  அதிக கவனம் செலுத்துங்கள் .மற்றவை  எல்லாம் நன்மையாகவும் ஆசீா்வாதமாகவுமே நடந்தே தீரும்.

 இயேசு  சொல்கிறாா். .. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே,நான்உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.- ஏசா.41:10 

பைபிள் சொல்கிறது... அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7

 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலானதேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6,7 இந்த வசனங்கள் எல்லாம் உங்கள் வேலையில், படிப்பில் ஊழியத்தில் உங்கள்  சம்பாத்தியத்தில் நீங்கள்  கவனம் செலுத்தி சாதிக்கிறவா்களாய் இருங்கள். உங்களை கவலைக்குள்ளாக்குவதை எல்லாம்  தேவனிடத்தில் விட்டு விடுங்கள்.அவா் எல்லாவற்றையும் பாா்த்துக் கொள்வாா்.  உங்களுக்கு வெற்றியைத் தருவாா்.  பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகி லும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்  -  சங்.121 : 6 - 8         நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்

 131                  ஒரு குழந்தை என்பது 

. அப்படி ஒரு சுதந்திரம் வேண்டுமா நமக்கு ? அப்பப்போ . . . எத்தனை உயிர்கள் பாரதத் தாய்க்குக் காவு கொடுக்கப் பட்டன . மானுட இரத்தம் பாரத மண்ணில் செங்குருதியாய் ஓடியது . சுத்தியின்றி , இரத்தமின்றி சுத்த சுதந்திரம் வாங்கி விட்டோம் என்று வின் பெருமையடித்துக்கொள்ள வேண்டியதுதான் . இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நேரம் இந்து - முஸ்லீம் கலவரம் . எல்லை மின் இருபுறங்களிலுமிருந்து நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள் . துன்பம் நிறைந்த கரிநாட்கள் . உலக வரலாற்றில் கரை படிந்த இருண்ட நாட்கள் . ஒரு நிறை கர்ப்பிணிப்பெண் ஒரு புதர் அருகே வயிற்றுச் சுமையை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடி விடுகிறாள் . அதைப் பார்த்த ஒரு இராணுவ வீரர் உடனே குழந்தையைத் தூக்கிச் சென்று பக்கத்துக் கிராமத்துக்குப் போகிறார் . அது ஒரு இந்துக் கிராமம் . அங்கு ஆண்டுக்கனாக்காக அள்ளி அணைக்க ஒரு குழந்தை இல்லாத பக்கம் நிறைந்த ஒரு தம்பதியர் இருந்தனர் . அந்த இராணுவ வீரரிடம் செழக்கையைக் கொஞ்சிக் கேட்டனர் . ராணுவ வீரர் குழந்தைக் கொடுக்குமுன் , ' ' ஆனால் ஒன்று . அதைச் சொல்லபாட்டேன் என்றார் . பிள்ளை இல்லாத அந்தப் பெற்றோர் பிடிவாத மாகக் கேட்டார்கள் , இராணுவ வீரர் சொன்னார் . இந்தக் குழந்தை ஒரு முஸ்லீமிற்குப் பிறந்த குழந்தை என்றார் . உடனே . அந்த இந்துப் பெண்ணின் மறுபதில் என்ன தெரியுமா ? யார் சொன்னது ? இது கடவுளின் குழந்தை என்று சொல்லி பிள்ளையைப் பிடுங்கி எடுத்து முத்தம் கொடுத்தாள் . இதுபோன்ற மாந்தர் சிலரால் இன்றளவும் மானுட நேயம் நிலைத்து நிற்கிறது . உலகில் தோன்றும் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சிறப்பான செய்தியைத் தாங்கி வருகிறது . ஒரு குழந்தை என்பது கடவுளால் கிடைக்கும் பெரும் பேறு அல்லவா ? “ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் , கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் " ( சங் 27 - 4 ) 

132              ஆசையாய்ப் பறப்பேன்

 அன்று அந்தப் பள்ளியில் நூறாண்டு விழா . மாணவர்களின் பெற்றோர் , உற்றார் , நண்பர்கள் என்று பெருங்கூட்டம் இருக்கும் . பள்ளி கோலாகலமாக அலங்காரம் பெற்றிருந்தது . பலூன் விற்கும் பால்சாமிக்கு ஒரே மகிழ்ச்சி . இன்று விற்பனையில் ஆயிரம் ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்று ஆனந்தமாய் சிறகடித்துப் பறந்தார் . பத்தடி உயரமான பெரிய களையில் பல வண்ண பலூன்களை பெரிது பெரிதாக ஊதி தொங்கவிட்டிருந்தார் . பச்சை , சிவப்பு , ஊதா , மஞ்சள் , ஆரஞ்சு , வெள்ளை என்று பல வண்ணங்களில் மாணவர்கள் பலூனைக் கேட்டு வாங்கிச் சென்றார்கள் . சில பலூன்கள் ஆகாய வீதியில் ஆடிப் பறந்தன . பால்சாமி நின்று பலூன் விற்குமிடத்தில் மூன்றடி உயரத்தில் ஒரு குத்துக்கல் இருந்தது . அதன்மீது பிரமு உட்கார்ந்து பலூன் விற்பனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் . பிரமு மூன்றாம் வகுப்புப்படிக்கும் மாணவி . அவள் சுத்தக் கறுப்பு . கறுப்பு என்றால் அண்டங்காக்காக் கறுப்பு . அவளுக்கு சிநேகிதிகளே கிடையாது போலும் . தனியாக உட்கார்ந்து கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தாள் . கறுப்பு நிறமும் ஒரு ஊனம்தான் போலும் . கறுப்பு நிறமும் கீழ்சாதி மாதிரிதான் என்று நினைத்த பலூன் பால்சாமி அவள் மீது இரக்கம் கொண்டார் . ஒரு சிவப்பு பலூனை ஊதி அவளுக்குக் கொடுத்தார் . அவள் வேண்டாம் என்று தலையை பலமாக ஆட்டினாள் . " மாமா உனக்குச் சும்மா இலவசமா தாரேன் , வாங்கிக்கோ பிரமு ” என்றார் கனிவுடன் . “ இலவசம் , பலவேசம் , கைலாசம் , வனவாசம் , சுகவாசம் . . . ” எனக்கு ஒன்றும் வேண்டாம் . இராகம் போட்டுக் கவிதையாகச் சொன்னாள் . அவளிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்த பால்சாமி அவளைக் குறித்து ஆச்சரியப்பட்டார் . அவளிடம் அன்பாகச் பேசினார் . “ பிரமு , உனக்கு ஏதாவது வேண்டுமா ? " “ எனக்கு எதுவும் தேவை இல்லை , ஆனா ஒண்ணு கேக்கணும் . " " 

கேளும்மா " “ மாமா , உங்கட்ட கலர் கலரா பலூன் இருக்கு . . . . . ஆனா , கறுப்பு பலூன் மட்டும் இல்லையே ஏன் ? அது பறக்காதா ? " பால்சாமிக்கு திக் என்றது . " கறுப்புப் பலூனை யாரும் விரும்பி வாங்குவதில்லை ” என்று மனதிற்குள் முணுமுணுத்தவாறு , அவசர அவசரமாக அவரது தோள் பையிலிருந்து இரண்டு கறுப்பு பலூன்களைத் தேடி எடுத்தார் . அவைகளை ஊதி ஒன்றைப் பறக்கவிட்டார் . அது அழகாகப் பறந்தது . 

பிரமு , பிரமிப்போடு பார்த்தாள் . பலூன் போன்று பூரித்துப் பொங்கிச் சிரித்தாள் . “ கறுப்புப் பலூனும் பறக்குமா மாமா ? ” விந்தையோடு வினவினாள் . “ பலூன் பறப்பதற்கு நிறமல்ல , உள்ளே அடைத்த வாயுதான் காரணம் . எந்தப் பலூனும் பறக்கும் . ” “ கறுப்புப் பலூனும் பறக்குமா ? " கண்களை உயர்த்தி , நெற்றியை நிமிர்த்திக் கேட்டாள் . “ சிவப்பு பலூனை விடவும் நல்லாவே பறக்கும் . நீயும் பெரிய பதவிக்கு வந்து நல்லாவே இருக்கமுடியும் ” என்றார் .

 “ ஐய் . . . கறுப்புப் பலூனும் நல்லாப் பறக்கும் . நானும் நல்லாப் பறப்பேன் ” என் குதூகலித்து இரு கைகளையும் விரித்தவாறு “ ஆசையாய்ப் பறப்பேன்  என்று பாடிக்கொண்டே ஓடினாள் பிரமு . 


133        மனம் துள்ளி மகிழ்ந்தான்

 மோகன் நல்ல ஒரு ஊழியக்காரன் . சமூக சேவகன் . கல்லூரி ஒன்றில் அலுவலகப் பணியாளன் . உண்மையும் உத்தமுமான சமூக ஆர்வலன . நண்பகல் இடைவேளையில் , “ நான் மின் கட்டணம் கட்டப்போகிறேன் . வேறு யாருக்காவது கட்டவேண்டுமானால் நான் சேர்த்துக் கட்டி வருகிறேன் " என்று வலியச் சொல்லி மூன்றுபேருக்கு உதவி செய்தான் . தேவையானவர்களுக்குத் தேவையாய் , தேடுகிறவர்களுக்கு ஓடாய் உழைப்பான் . மோகன் பணிபுரியும் கல்லூரி வளாகத்தில் அழகான ஒரு சிற்றாலயம் உள்ளது . அங்குபோய் தினமும் ஐந்து நிமிடங்கள் அமைதலோடு அமர்ந்திருந்து ஆண்டவனை வேண்டுவான் , நன்றி சொல்வான் . அதன்பின்புதான் பணியைத் தொடர்வான் . அன்று நல்ல மழை . சரியான வேளைக்கு வந்ததினால் சிற்றாலயம் செல்ல நேரமில்லை . அன்று முழுவதும் மன உழைச்சலாயிருந்தான் . எதையோ இழந்து விட்டவன் போலிருந்தான் . 

இரவு படுக்கையில் அவனுக்கோர் தரிசனம் கிடைத்தது . நடு இரவில் அவனது அறை முழுவதும் பிரகாசமான வெளிச்சம் ஜொலித்தது . அதிலிருந்து ஒரு மெல்லிய குரல் ஒலித்தது : “ மோகன் , இன்று உன்னில் நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன் . தினமும் ஐந்து நிமிடங்கள் மட்டும் என்னை நினைத்துவிட்டுப் பணிக்குச் சென்று விடுவாய் . ஆனால் இன்று முழுவதும் என்னை நினைத்துக் கொண்டே இருந்தாய் . மோகன் மகிழ்ந்து விம்பினான் . துள்ளி மகிழ்ந்தான் . இறைவழிபாட்டை

 அந்தந்த நாளுக்கு ஏற்றமுறையில் செய்தால் போதும் . “ தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான் ” ( சங் . 51 : 17 ) .

 134                ஆறு அவுன்ஸ் சிறுநீர் ! அமெரிக்காவில் அது ஒரு பெரிய ஏரி , ஜோஷூ என்ற மனிதன் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏரிக்கரையில் நின்று மது அருந்தினான் . பின்பு ஏரிக்குள் சிறுநீர் கழித்தான் . இது யாருக்கும் தெரியாது . ஆனால் அங்கு பொருத்தி இருந்த கேமரா காட்டிக்கொடுத்துவிட்டது . இந்த ஏரித் தண்ணீர்தான் நகர மக்கள் குடிக்க பயன்படுத்தப்படுகிறது . ஒரு மனிதனின் சிறுநீர் பையில் சராசரியாக ஆறு அவுன்ஸ்தான் இருக்கும் . அது ஒன்றும் ஏரித்ண்ணீரை சேதப்படுத்திவிடாது என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர் . எனினும் ' மனக்குரங்கு ' என்று ஒன்று இருக்கிறதே - ஏரி நீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு புதிதாகத் தண்ணீர் நிரப்பினர் . 18 லட்சம் ரூபாய் செலவானது . ஜோஷூவுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது . அவர் கட்டிய அபராதம் 18 லட்சம் ரூபாய் . “ செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக்கெட்டுப்போகப் பண்ணும் . ஞானத்திலும் , கனத்திலும் பேர் பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் ” ( பிர . 10 : 1 ) . இது நடந்தது . 28 . 8 . 2011 . 135                  உயிரான உயிர் சீனாவைச் சேர்ந்த யாங்சன் வயது அறுபத்தாறு . தம் குழுவினருடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றார் . வாஷிங்டன் அருகேயுள்ள மலைப்பகுதியைச் சுற்றிப்பார்க்கும்போது அவர் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார் . மீட்புக்குழுவினர் தொடர்பு கிடைக்கவில்லை . எனவே இரண்டு நாட்கள் மிகவும் அவதிப்பட்டார் . பள்ளத்தாக்கினுள் கடுங்குளிர் . அவரால் குளிரை தாங்கமுடியவில்லை . செத்துப்போய் விடுவோம் என்ற நிலை ஏற்பட்டது . குளிர்காய்வதற்குத் தீ மூட்ட எண்ணினார் . இலைதளைகள் இல்லை . தம்மிடமிருந்த சட்டைகள் , பேண்ட்கள் , துணிகளை ஒவ்வொன்றாக எரிந்து அனல்மூட்டி உயிரைப் பிழைத்தார் . இருந்த துணிமணிகளையெல்லாம் எரித்துவிட்டார் . கடைசியாகக் கத்தை கத்தையான ரூபாய் தாள்களை எரித்தார் . இருநாட்களுக்குப் பிறகு மீட்புக்குழுவினர் வந்து மீட்டனர் . உயிருக்கு முன் பணம் எம்மாத்திரம் . உலக உடைமைகள் அற்பம் ! இது நடந்த து . 20 . 1 . 2012 .


 136.                     யானை அழுதது 

தமிழ் மாநிலத்தில் அப்பொழுது புதுக்கோட்டை ஒரு தனி சமஸ்தானம் . ஒரு குறு நில மன்னனின் ஆளுகைக்குள் இருந்தது . அந்த மன்னனின் லாயத்தில் நிறைய குதிரைகளும் , யானைகளும் இருந்தன . ஒரு யானையின் பாகன் திடீரென்று இதய நோயால் இறந்து போனான் . அவன் அந்த யானையை அதிகமாக நேசித்தவன் . யானையும் தன் எஜமான்மீது உயிரையே வைத்திருந்தது . பாகனின் இறந்த உடலை தூக்கிச் செல்லும்போது யானை கண்ணீர் விட்டு அழுதது , அலறியது . - மூன்று நாட்களாக யானை பட்டினி கிடந்து உண்ண மறுத்தது . எத்தனையோ பேர்வந்து ஊட்டிப் பார்த்தும் முடியவில்லை . வேறு எந்தப் பாகனையும் யானை ஏற்றுக்கொள்ளவில்லை . இந்தச் செய்தி ராஜாவின் நிர்வாக அதிகாரியான திவானுக்குத் தெரியவந்தது . ராஜாவுக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள திவான் மிகுந்த கவலையோடு யானையைப் பார்க்க வந்தார் . அதனால் பொதுமக்களின் பெருங்கூட்டம் கூடிவிட்டது . 

யானை கண்ணீர் உகுத்தவாறு ஆடாமல் , அசையாமல் அப்படியே நின்றது . திவானைச் சுற்றி திரளான ஒரு கூட்டம் திரண்டு நின்றது . திடீரென்று யானை கூட்டத்தைக் கூர்ந்து பார்த்தது . பிளிறியது . நகண்டது . அடிமேல் அடிவைத்து நடந்தது . கூட்டம் விலகியது . அங்குள்ள பெருங்கூட்டத்தினுள் ஓர் எளிய அம்மா , விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் . அவள் முன்வந்து நின்றது . துதிக்கையால் தலையைத் தொட்டது . வருடியது , பெருமூச்சுவிட்டது . கூட்டம் அதிர்ந்து நடுங்கியது . ஆச்சரியத்தில் விம்மியது .

அந்த ஏழைப்பெண் இறந்துபோன யானைப்பாகனின் மனைவி . திவான் அவளிடம் ஒரு கரும்புக்கட்டைக் கொடுத்து யானைக்குக் கொடுக்கும்படி சொன்னார் . மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்த யானை , அந்த அபலைப் பெண் தந்த கரும்பை உட்கொண்டது . திவான் , அந்த அம்மாவை யானையின் பாதுகாவலனாக - பாகனாக நியமித்தார் .

 யானையின் ஞானத்தை நினைத்த மக்கள் ஆனந்த ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்ந்தனர் . " மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது ” ( ஏசா . 1 : 3 ) .

சிறுகதை 241-254

241   இயேசுவின்_நாமத்தில்_ஜெயம்!!! 

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்..மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும் என்று தீர்மானித்துக் கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி.அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

சரி, இதுதான் நமது வாழ்க்கை.இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும். 

அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.இப்போது மேலே நோக்கி பறக்கும். 

சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை.வலியும் இல்லை.அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடி யிலும் இடிக்காமல் பறக்கும். 

அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.

இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.

ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால்,இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்..

ஆம், பிரியமானவர்களே, 
தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டுதான் வருகிறோம்...

இயேசுவின் நாமத்தில் தொடா்ந்து முயற்சி செய்யுங்கள் நீங்கள் எதில்  விஷயத்தில் ஜெயிக்க வேண்டுமென்று  இருக்கிறீா்களோ அதில் தொடா்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.  

மனம் தளர்ந்து போய்விடாதிருங்கள்  அப்படி செய்யும் போது அந்த விஷயத்திற்கான ஜெயம்  ஏற்கெனவே  உங்களுக்ககாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.   அந்த ஜெயம் உங்களை நோக்கி வரும் !!!  
-(1 யோவான்  2 :13,14)

கடந்த கால தோல்வியையும் ,வேதனைகளையும் நினையாதிருங்கள்! அப்படி நினைத்தால் கழுகுகளைப் போல் செட்டைகளை அடித்து பறக்க முடியாது. உங்களுக்கு நீங்களே கட்டுபாடு செய்து கொள்கிறீா்கள். ( LIMIT)
-(ஏசாயா 40:29-31)

பறக்கவே பிறந்தேன் என்ற நிலையில் செயல்படுங்கள்!!  சகலமும் உங்கள் வசமாகிவிடும்!!! 

*#நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்.!!!..*
தினம்

242   சிங்கம் – அசிங்கம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்துவந்தது. அதனுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது. அதனால் அது மிகவும் கவலையுடன் காணப்பட்டது. சிங்கத்திடம் நரி, புலி, கரடி, சிறுத்தை போன்ற மிருகங்கள் வந்து துக்கம் விசாரித்து சென்றன.  

சிங்கம் முன்போல் காட்டில் அதிகமாக நடமாடாமல் தன்னுடைய உணவிற்காக மட்டும் வெளியே செல்லும். மற்றபடி தன்னுடைய குகையிலேயே இருக்கும். எப்பொழுதும் அது தன்னுடைய மனைவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

இப்படியே நாட்கள் பல ஆகிவிட்டன.

சிங்கத்தின் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் ஒருநாள் புலியும், நரியும் சிங்கத்தை காணச்சென்றன. சிங்கம் மிகவும் சோர்ந்து போய் வேட்டைக்கு கூடச்செல்லாமல் கண்ணீருடன் காணப்பட்டது.

புலியும், நரியும் சிங்கத்திடம், "இன்னும் அழுது கொண்டிருந்தால் என்ன பயன் அதனால் மனதை திடப்படுத்திக் கொண்டு வாழ பழகி கொள்ளவேண்டும்'' என்றன.

அதற்கு சிங்கம் என்னுடைய மனைவி இல்லாமல் என்னுடைய பலம் அனைத்தையும் நான் இழந்து விட்டேன். என்னுடைய மனைவி தான் நான் வேட்டைக்குச் செல்லும் போது உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து வழியனுப்புவாள். அதனால் அவள் இல்லாமல் என்னால் வேட்டைக்கு செல்ல மனமே இல்லை.  சாப்பிடவும் பிடிக்க வில்லை என்றது.

புலியும், நரியும் சிங்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு குகையை விட்டு வெளியே வந்து தங்களுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றன.

நரி தன்னுடைய இருப் பிடத்திற்கு செல்லும் வழியில் கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்களைச் சந்தித்தது. நரி அந்த மிருகங்களிடம் சிங்கம் அது தன்னுடைய முழு பலத்தையும் இழந்து விட்டது என்று அதன் வாயாலேயே சொன்னது என்றும் வேண்டுமானால் புலியிடம் கேட்டுப் பாருங்கள் என்றது.

புலியும் தற்செயலாக அவ்வழியே வந்தது. கரடி, சிறுத்தை, ஓநாய் ஆகியோர் புலியிடம் நரி சொல்வது உண்மையா என்று கேட்டன. புலியும் அதற்கு ஆமாம் தானும் நரியும் சிங்கத்தை சந்திப்பதற்காக சென்ற போது சிங்கம் அதன் வாயாலேயே தன்னுடைய மனைவி இறந்த பின் தன்னுடைய பலம் அனைத்தையும் இழந்து விட்டதாக சொன்னது என்று புலி மற்ற மிருகங்களிடம் கூறியது.

இதைக்கேட்ட உடன் மற்ற மிருகங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் சிங்கத்தின் பலத்தை வைத்துதான் காட்டில் உள்ள மற்ற மிருகங்கள் அதற்கு பயந்து மரியாதைக் கொடுத்தன. ஆனால் சிங்கமே தன்னுடைய பலம் அனைத்தையும் தான் இழந்து விட்டதாக ஒப்புக்கொண்டதால் தாங்கள் இனி சிங்கத்திற்கு பயப்பட வேண்டாம் என்று புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலான மிருகங்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்தன.

நான்கு நாட்கள் கழித்து புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் சிங்கம் அதன் குகைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தன.  

அப்பொழுது அவ்வழியே சிங்கம் வந்தது. சிங்கம் அமைதியாக அவ்வழியே அவர்களை கடந்து செல்கையில் புலியும், நரியும் தாங்கள் இனியாரும் சிங்கத்திற்கு பயப்பட மாட்டோம் என்று அதன் காதில் விழு மாறு சற்று சத்த மாகவே சொன்னார்கள்.

சிங்கம் அதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டது.

புலியும், நரியும் இப்படி சொல்லியும் சிங்கம் அமைதியாக சென்றதால் சிங்கம் உண்மையிலேயே தன்னுடைய பலத்தை இழந்து விட்டது என்றும் அது பயந்து தான் அமைதியாக செல்கிறது என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டன.

சிங்கத்தை அடிக்கடி புலி, நரி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் கேலி செய்து வந்தன. சிங்கமும் அமைதியாக அவர்களின் பேச்சை காதில் வாங்காமல் சென்று விடும்.

ஒருநாள் சிங்கம் வேட்டைக்குச் சென்று ஒரு மானைக் கொன்று அதைத் தன்னுடைய வாயில் கவ்விக் கொண்டு குகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் வழக்கம் போல் குகைக்கு செல்லும் வழியில் நரி, புலி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் நின்று கொண்டிருந்தன.

சிங்கம் தூரத்தில் இருந்தே அவர்களை பார்த்து விட்டபடியால் அமைதியாக நடந்து வந்தது. நரி மற்ற மிருகங்களிடம் தான் சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் மானை பறித்து வருவதாக கூறி சிங்கம் வரும் வழியில் குறுக்கே சென்று நின்றது.

சிங்கமும் நரியின் அருகே வந்துவிட்டது.

நரி சிங்கத்திடம் சிங்கத்தின் வாயில் உள்ள மானை தன்னிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுமாறு கூறியது. இல்லாவிட்டால் தான் சிங்கத்தை அடித்தே கொன்று விடுவ தாக மிரட்டியது. சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் மானை பிடித்து இழுத்தது.  

சிங்கம் ஏற்கனவே பசியில் வேறு இருந்தது. தான் கஷ்டப்பட்டு வேட்டையாடி விட்டு தனக்காக கொண்டு வரும் இரையை மற்றொருவர் அபகரிக்க நினைப்பதால் அது இவ்வளவு நாட்கள் காத்த தன்னுடைய பொறுமையை இழந்து விட்டது.

கவ்வியிருந்த மானை கீழே வைத்து விட்டு மிகக்கடுமையான கோபத்துடன் நரியை பிடித்து இழுத்து அதை இரண்டே அடியில் அதனுடைய உடலை இரண்டாக கிழித்து எறிந்து விட்டது.

இவற்றை எல்லாம் மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த புலி, ஓநாய், கரடி, சிறுத்தை ஆகியோர் அங்கிருந்து நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்து விட்டனர்.

சிங்கம் மானை தன்னுடைய வாயில் கவ்வி தன்னுடைய குகையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றது. சிங்கம் சொன்னதை தவறாக எடுத்துக் கொண்ட நரி சிங்கத்திடம் வாலாட்டி தன்னுடைய முடிவை தானே தேடிக் கொண்டது.  

நரிக்கும் மற்ற மிருகங்களுக்கும் தெரியாமல் போய் விட்டது, சிங்கத்தின் வீரமும் பலமும் எப்பொழுதும் அதை விட்டுப் போகாதென்று.

என் அன்பு வாசகர்களே,
ஒரு மனிதனுடைய பெலன், ஞானம், புத்தி என் எதுவானாலும்  மரண பரியந்தம் நிலை நிற்கும் என்பதே இக்கதையின் கருத்து.

ஒருவேளை சூழ்நிலை நிமித்தம் அல்லது குடும்பத்தின் நிமித்தம் தங்களை ஒடுக்கி வாழும் பட்சத்தில் அவர்களை எள்ளி நகையாடக்கூடாது. ஏனெனில் அவர்கள் எதுவும் குன்றியவர்கள் அல்லர். மாறாக அவர்களால் எந்த ஒரு தீமையான காரியமும் நடைபெற்றுவிடக்கூடாது என்ற மனப்பாங்கில் இருப்பதால் தான் அவர்கள் ஒதுங்கி போகிறார்களே ஒழிய வேறில்லை. அவற்றை சாதகமாக்கி கொள்ள எத்தனப்படும்போது அவர்களின் பொறுமை இழக்க நேரிடும். 

தேவனும் அதுபோலத்தான் பொல்லாப்பு செய்கிறவர்களை கண்டும் காணாதவர்களை போல இருக்கிறார் காரணம் அவர்கள் மீது தேவன் கொண்டுள்ள இரக்கம் மட்டுமே. அதனால் தேவனுடைய கை குறுகிப்போயிற்று என்று நினைக்க வேண்டாம். தேவன் பொறுமை இழந்தால் இந்த உலகம் தாங்காது. ஆகவேதான் ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு உரைக்கிறார்

1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
ஏசாயா 59:1




243  பட்டினிகிடந்தாலும் பரமனைவிடேன்

மிஷன் பள்ளிக் கூடத்தில் வேலைபார்த்து வந்தவர் ஒருவரிருந்தார். 

இந்த வாய்பிருந்தபோதிலும் , அந்த நாட்களின் மிஷன் நிபந்தனைக் கிணங்கப் , பள்ளிச் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வேதாகமம் , சரித்திரங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக அதைப் படிக்க நேர்ந்து , அதின் சத்தியம்களை ஏற்றுக் கொண்டு , கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்து , நல்லூர் சேகர மிஷனெரியாயிருந்த P P .ஷாஃப்டர் ஐயரிடம் , ஞான தீட்சை பெற்றுக் கிறிஸ்தவரானார். 

சுமார் பத்தாண்டுகளாக நல்லூர் சேகரப் பள்ளிக்கூடங்களில் வேலைபார்த்த பின் , அங்கு கிடைத்த சம்பளம் தன் பாதிக்குடும்பத்தின் செலவுக்குப் பற்றாதிருந்ததால் , அவ்வேலையை விட்டுவிட்டுத் தன் சொந்தவூருக்குப் போய்ச் சேர்ந்தார்.

 *பாறைக்கடம்* என்ற அந்த ஊரில் அவர் ஒருவர் தான் கிறிஸ்தவர்.

 அவர் , ஒரு நாள் மணியாச்சி ஜமீந்தாரைப் பேட்டிகண்டு , ஏதாவது வேலை தந்து உதவ வேண்டுமென்று ! மனுக் கொடுத்தார். 

ஜமீந்தாரும் , அவர் கல்வியறிவுடையவர் - ரென்றறிந்து , ஜமீன் கணக்கர்களிலொருவராக அவரை நியமித்துப் , *பாறைக்கூட்டம்* பகுதிகளில் ஜமீன் வரவு செலவுக்கணக்குகளைக் கவனித்து வருமாறு கட்டளை கொடுத்தார் கர்த்தருக்குத் துதி செலுத்தி அவ்வேலையை ஏற்றுக்கொண்டு நம் நண்பர் தன் வீடு வந்து சேர்ந்தார்.

கிறிஸ்தவ மனச்சாட்சியுடனும் , உள்ளத் தூய்மையுடனும் , அவர் தன் வேலையைச் செய்து வந்ததனால் , ஜமீந் தாருக்குத் தன் புதுக் கணக்கப்பிள்ளையின் மேல் பிரியமும் : நன்மதிப்பு முண்டாயின.

ஒரு நாட்காலையில் , பாறைக்கூட்டத்துக்குச் சென்ற ஜமீந்தார் , கணக்கப்பிள்ளை நெற்றியின் மீது விபுதி பூசாததைக் கண்டு , *விபூதி அணிந்து* வேலையைச் செய்யும் ' ' என்று ஆக்யாபித்தார்.

கலைக்கப்பிள்ளை , மிகவும் பணிவுடன் ஐயனே , 

*நான் கிறிஸ்தவன்.*

*நீறும் பூசேன்*

*பொட்டும் வையேன்*

என்னை மன்னித்தருள வேண்டும் ,என்று கரங் கூப்பினார் . 

அவர் தன்னைச் கிறிஸ்தவனென்றறிக்கையிட்ட மாத்திரத்தில் , ' ஜமீனு ' க்குக் கடும்கோப் முண்டாயிற்று.

அவர் அவரைத் தாறுமாறாய் ஏசிப் பேசி , ' ' நீ உடனே விபூதி பூசிக் கொண்டு கிறிஸ்துமார்க்கத்தைவிட்டு விலகவில்லையானால், உன்னை வேலையிலிருந்து தள்ளிவிடுவேன் , புரிந்ததா ?  என்றிரைந்தார்.

ஆனாலும் , நம் கணக்கர் தாழ்மையுடனும் உறுதியாகவும் நாயனே , என் வேலை போய்விட்டாலும் , - *நானும் என் மனைவி மக்களும் பட்டினியால் சாக நேரிட்டாலும்* , என்னை ஆண்ட எம்பெருமான் இயேசுவை விடமாட்டேன் , இது உறுதியென்று கூறிக் , கைகட்டி வாய் பொத்திநின்றார்.

ஜமீனாதிபதி மௌனமானார்.

அங்கு நிசப்தம் . அமைதி . திடீரென்று அவர் தான் உட்கார்ந்திருந்த ஆசனத்திலிருந்தெழுந்தார் ; கணக்கப்பிள்ளையிடம் போனார் ; அவர் தோள்மீது கையை வைத்தார்.

கணக்கர் தலை நிமிர்ந்து தன் எஜமானின் முகத்தைப் பார்த்தார்.

அப்பெரியோன் அவரைப் பார்த்து , ' ' கணக்கரே , உன் தைரியத்தை மெச்சி னேன்.

உன் உறுதியைப் பாராட்டுகிறேன். 

உன் உண்மையையும் நேர்மையையும் அறிவேன்.

 உன்னை வேலை நீக்கம் செய்யமாட்டேன்.

நீ உன் கடவுளைச் சேவிப்பதில் எனக்கு ' அட்சேபணையில்லை. தைரியமாயிரு என்று கூறி உற்சாகப் படுத்திவிட்டு வெளியேறினார்.

 கிறிஸ்தவப் பக்தன் , உள்ளத்தில் தன் ஆண்டவருக்குத் துதி செலுத்தி ஜமீந்தாரை வழி பயனுப்பிக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் ( 1852 ஜனவரி ) அவ்வூருக்குப் பிரசங்க ஊழியம் செய்யச் சென்றிருந்த பண்ணைவிளை மிஷனெரி அச்செய்தியைக் கேள்விப்பட்டுக் , கணக்கப்பிள்ளையின் வீட்டுக்குப்போய் , அவரையும் அவருடைய மனைவி மக்களையும் கண்டு சந்தோஷித்து , உற்சாகப்படுத்தி , அவர் களுடன் ஜெபித்து ஆசீர்வதித்துத் திரும்பினார் .


244        ஒப்பிடாதே! 

ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.

கூட்டத்தில் மிகப் பெரும்பாலானோர் அந்தத் துறவின் கால்களைத் தங்கள் கைகளினால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

ஜென் துறவியின் புகழ் பரவியது. இது மெல்ல மெல்ல அரண்மனை வரை சென்றது. இந்தத் துறவியைப் பற்றி அந்நாட்டுத் தளபதி கேள்விப்பட்டான். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. உடனடியாகத் தான் அந்தச் சாமியாரைக் கண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

அவன் கண்டிக்க நினைத்ததற்கு வேறு ஒரு முக்கியக் காரணமும் இருந்தது.

"நான்தான் அந்த நாட்டிலேயே முக்கியமானவன், தனக்கு அப்படிப்பட்ட புகழ் வாய்க்காமல், கேவலம் ஒரு சன்னியாசிக்கு இப்படிப்பட்ட புகழ் கிடைத்துள்ளதே'' என்ற பொறாமைதான்.

அவன் அன்றைய தினமே அந்தத் துறவியைக் காண்பதற்குச் சென்றான். "தளபதி வருகிறார்' என்றவுடன் துறவியைச் சுற்றி இருந்த கூட்டம் வழி விட்டு ஒதுங்கி நின்றது.

துறவியை மேலிருந்து கீழ் வரை உற்று நோக்கினான்.

“நான் இந்த நாட்டின் தளபதி. விதம் விதமான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் என்னிடம் உண்டு. நான் அரண்மனைக்குள் நுழைந்தால், தெருவில் நடந்தால், எல்லாரும் என்னைத் தெய்வம் போலக் கருதிக் கை எடுத்து வணங்குவார்கள்.

“இப்போது என்னவென்றால், பார்க்கப் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமளிக்கக் கூடிய, அடுத்த வேளைச் சாப்பாட்டு கூட இல்லாத உன்னை ஒரு பொருட்டாக மதித்து, அதிக மரியாதை கொடுத்துக் கால்களில் விழுந்து வணங்கிச் செல்கிறார்கள். அதுதான் ஏன், ஏதற்காக என்று எனக்குப் புரியவில்லை,'' என்றான்.

அவனுடைய பேச்சை ரசித்துக் கேட்ட அந்தத் துறவி அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் பின்னாலிருந்த ஒரு பூந்தோட்டத்துக்கு வந்தார். அதில் வண்ண வண்ண மலர்கள் மலர்ந்திருந்தன.

அன்றைய தினம் பவுர்ணமியாதலால் முழு நிலவு தன் வெளிச்ச முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

வானத்தில் ஒளிரும் நிலவைச் சுட்டிக்காட்டி, "அது என்ன?'' என்று கேட்டார் துறவி.

“அதுவா, அது நிலவு!'' என்றான் தளபதி.

பின்னர் துறவி தன் அருகே பூத்திருந்த ஒரு ரோஜா மலரைச் சுட்டிக்காட்டி "இது என்ன?'' என்று கேட்டார்.

தளபதி எரிச்சல் அடைந்தான். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “இது ரோஜாப் பூ!'' என்றான்.

“இந்த ரோஜாப்பூ என்றைக் காவது ஒருநாள் அந்த நிலவைப் பார்த்து, "ஆஹா இந்த நிலவு எத்தனை அழகு! இதைச் சுற்றி எவ்வளவு ஒளி வெள்ளம்! நான் அந்த நிலாவைப் போல அவ்வளவு வெண்மையாக இல்லையே என்று ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா 

இல்லை அல்லவா? அதே போல அந்த நிலவு கீழே உள்ள இந்த ரோஜா மலரைப் பார்த்து, “நாம் இந்த மலைரைப் போன்று நிறத்தில் இல்லையே, மிருதுவாக இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?'' இல்லையே. ரோஜாப் பூவின் அழகு ஒரு விதமானது. நிலவின் அழகு வேறு விதமானது!'' என்றார்.

துறவி சொன்னதைக் கேட்டவுடன் தளபதியின் கண்கள் கலங்கின.

“தங்களை மரியாதைக் குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறேன் துறவியே! என்னை மன்னிக்க வேண்டும்!'' என்று அவர் கால்களில் விழுந்து வணங்கினான் தளபதி.

என் அன்பு வாசகர்களே,
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றலை தேவன் கொடுத்திருக்கிறார். அவற்றைக் கொண்டு அநேகர் தங்களின் கடின உழைப்பால் உலகமே போற்றும் வண்ணம் உயர்ந்துள்ளனர். வேறு சிலர் தேவன் அவர்களுக்கு நியமித்த பிரகாரம் நாடு போற்றும் வண்ணம் உயர்ந்துள்ளனர். அப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் புகழ்ச்சியை அடைகின்றனர். .

அவ்வாறு புகழ்ச்சி அடையும்போது தங்களை தான் எல்லாரும் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ்ச்சி வேறு ஒருவர் பெறுகிறார் என்றால் அவர்கள் மனம் வெறுத்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் செய்கைக்கேற்ற பலனை தான் அவர்கள் பெறுகிறார்கள் என்று எண்ணுவதில்லை மாறாய் அவர்கள் மீது பொறாமை கொள்கின்றனர். தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று தங்களை தாங்களே ஒப்பிட்டுப் கொள்கிறார்கள். அவ்வாறு ஒப்பிடுபவர்களை குறித்து பரிசுத்த வேதாகமம் இவ்வாறு மொழிகிறது

12 ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம். தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.

2 கொரிந்தியர் 10:12

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குவதால் மற்ற துறையில் உள்ளவர்களை குறித்தோ, நம்மை நாமோ ஒப்பிட்டுப் கொள்ளாமல் தேவனுக்கேற்ற விதமாய் நாம் வாழ்கிறோமா என்று தேவனோடு நம்மை ஒப்பிட்டு பார்த்து அவருக்கேற்ற பரிசுத்தத்தில் இன்னும் அதிகமாய் வளர பிரயாசப்படுவோம் தேவனோடு ஐக்கியமாவோம்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
தினம்
------

245        அச்சம்!


ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார் நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று  வந்தனர்.

சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத் தீமைகளுக்கும் அச்சம்தான்  அடிப்படைக் காரணம்; அச்சத்தால்   வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம்  எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார்.

குறுக்கிட்ட சீடர் ஒருவர், “ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும்  என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார்.

அதற்கு அவர் பதில் ஏதும்  சொல்லவில்லை.

அன்றிரவு வழக்கம் போலத் துறவியும்,  சீடர்களும் உணவு 
உண்ண அமர்ந்தனர்.

அப்போது துறவியிடம் வந்த  சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்து விட்டதை நான்  கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை  முடித்துவிட்டேன். நாளை நகரத்திற்குச்  சென்று அரிசி வாங்கி வந்தால்தான்,  சமையல் செய்ய முடியும். 
நண்பகலில்தான் உணவு தயாராகும்.  காலை உணவு சமைக்க வழி இல்லை,''  என்றார்.

பிறகு அவர் எல்லாருக்கும் உணவு  பரிமாறினார்.

துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர்.

சீடர்களைப் பார்த்து துறவி, “இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள்  ஏன்?'' என்று கேட்டார்.

“நாளை காலையில் உணவு கிடையாது  என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும்.  அதனால், இப்போது அதிகமாகச்  சாப்பிட்டு விட்டோம்,'' என்றார் சீடர்களில் ஒருவன்.

“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால்  வழக்கத்தை விட அதிகமாகச்  சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை  வரும் என்பதை இப்போது புரிந்து  கொண்டிருப்பீர்கள் அல்லவா?'' என்றார்  துறவி.

என் அன்பு வாசகர்களே,
அச்சம் ஒரு மனிதனை எந்தவொரு கடினமான சூழ்நிலைக்கும் அழைத்து செல்லும் என்பதே இக்கதையின் கருத்து. இதற்கு உதாரணமாக இன்றைய நாட்களில் இருக்கிற இந்த ஊரடங்கை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முந்தைய  நாள் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருப்போம் காரணம் என்ன அச்சம் தான். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணம் முன் கூட்டியே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டோம்.

மேலும் அச்சம் பேராசையை மட்டுமல்ல, கொலை, கொள்ளை என பெரிய பெரிய காரியங்களைகூட செய்ய வைக்கும். ஏனென்றால் இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு நாம் பயப்படும் போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நாம் செய்தே ஆகவேண்டும். உலக பிரகாரமான மனிதனுக்கு மாத்திரமல்ல, அச்சம் நமக்கு உண்டாகுமானால் பிசாசானவன் நம்மை எளிதில் வீழ்த்திவிடுவான். பிசாசானவன் நமக்கு வறுமை, நோய், நம்மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்ப்படுத்துதல் ஆகியன போன்ற அச்சங்களை நமக்குள் ஏற்ப்படுத்தி நம்மை விழச்செய்வான். 

அதைக்குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது 

7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.

யாக்கோபு 4:7

நாம் தேவனுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்து நடக்கும்போது பிசாசினால் நம்மை நெருங்க முடியாது. மாத்திரமல்ல பிசாசை எதிர்த்து நிற்கத்தக்க பெலனை தேவன் நமக்கு கட்டளையிடுவார். எனவே நாம் பிசாசை எதிர்க்க தேவனோடு இணைந்து செயல்படுவோம், பிசாசை துரத்துவோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!




246.    மவுனம்_ஏன்


உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது.

பழங்கள் ஒன்றுக் கொன்று அடித் தொண்டையில் குசுகுசுவெனப் பேசின ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம்
ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி
மார்தட்டின. ஆனால், திராட்சைப் பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தது.

எல்லாப்பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தன. திராட்சைப் பழம் எதையாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், அதுவோ மவுனம் காட்டியது.
இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.

அப்போதுபலாப்பழம் ஒன்று உருண்டு வந்தது. அது திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் கேட்டது.

""திராட்சையே... நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும். உலகில் உள்ள பழங் களிலேயே சிறப்புப் பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை நிரம்பியவன் நீதான் என்று! ஆனால், அதையும் தாண்டிய ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.

திராட்சைப்பழம் அமைதியாகக் கூறியது.
""அண்ணா, நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்களோ, ஒரு கூட்டமாக, கொத்தாக வளருகிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.
""எங்களைச் சாறாக்கிக் குடிக்கும் போது கொத்துக் கொத்தாகவே அழிந்து போகிறோம். வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை மனிதர்களிடமிருந்து அடைந்திருக்கிறோம். வேறு காரணமில்லை! '' என்றது.
மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.

பிரியமானவர்களே,
ஒற்றுமையே வலிமை என்பதே இக்கதையின் கருத்து.

என்னதான் திராட்சை பழத்தை விட விலையுயர்ந்த, சுவைமிக்க பழங்கள் இருந்தாலும் திராட்சை பழத்திற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. மற்ற பழங்களை வெகு நாட்கள் பதப்படுத்தி பாதுகாப்பதினால் எந்தவொரு பயனும் இல்லை. ஆனால் திராட்சை பழத்தை அவ்வாறு செய்யும்போது நல்ல திராட்சை ரசம் கிடைக்கும். அது மாத்திரமல்ல மற்ற பழங்களை ஒன்று மட்டும் வாங்கலாம் ஆனால் திராட்சை பழங்களை கொத்தாகக் தான் வாங்க முடியும். மேலும் இது கூட்டமாகக் கொத்தாகத்தான் வளரும். 

வேதத்தில் கூட மற்ற பழங்களை விட திராட்சையைத்தான் அதிகம் பயன்படுத்தினர். இயேசுவினுடைய முதலாவது அற்புதம் கூட திராட்சை ரசத்தைக் கொண்டு தான் நிகழ்த்தினார். அவருடைய இராஜபோஜனத்திலும் பரிமாறப்பட்டது திராட்சை ரசம் தான். இவ்வாறு இன்னும் அநேக தனித்தன்மைகளை பெற்றது தான் திராட்சை. 

வேதம் சொல்கிறது அந்த திராட்சை செடி இயேசு என்று. 

*5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.*
*-(யோவான் 15:5)*

ஆகவே மெய்யான திராட்சை செடியாகிய தேவனுக்குள் நிலைத்திருப்போம், அவரும் நம்மிடத்தில் நிலைத்திருக்க தேவையான அவருக்கு விருப்பமான காரியங்களில் ஈடுபடுவோம் அவ்வாறு நிலைக்கும் பட்சத்தில் மேற்கூறிய வசன பிரகாரம் அநேக நற்கனிகளை தேவனுக்கும் மனிதர்களுக்கும் ஏற்றவாறு கொடுப்போம், அநேகருக்கு ஆசீர்வாதமாய் விளங்குவோம். 

*#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..!!!..*



247  முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்


ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக்
கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச்சென்று மின்னியவாறு பறந்து சென்றது. அதைக் கண்ட ஒரு குரங்கு  அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து
தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம். 


பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது. 

பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசம் எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.

என் அன்பு வாசகர்களே,
முட்டாள்கள் என்றால் புத்தி மழுங்கியவர்கள் மட்டுமல்ல தாங்கள் செய்வதுதான் சரி என்று வீம்பு பேசுகிறவர்களும் மூடர்கள் தான். ஏனெனில் மூடர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரியாது எனவே தாங்கள் செய்வது சரி என்ற மனப்பாங்கில் தான் அவர்கள் எல்லா காரியத்திலும் ஈடுபடுவர்.  இப்படிப்பட்டவர்களுக்கு நாம் நன்மை செய்ய முற்பட்டால்‌ நம் ஜீவனும் கேள்விக்குறி தான் என்பதில் சந்தேகமில்லை.  

வேதத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், தாவீதை கொலை செய்ய எத்தனிக்கும் போது தன் குமாரனாகிய யோனத்தான் தாவீது பட்சமாய் பேசி அவனை தப்புவிக்க நினைத்து சவுலிடம் அவனுக்குக்காக பரிந்துபேசி சவுல் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டினான். மேலும் எந்நேரமும் சவுலின் கூடவே நடந்தான். இறுதியில் பெலிஸ்தியர்களால் இருவரும் கொல்லப்பட்டனர்.

இதுபோலத்தான் தங்கள் உயர் அதிகாரிகள், தங்களோடு பணிசெய்பவர்கள் என யாராகிலும் தவறான வழியில் மூடரைப்போன்று செயல்படுவார்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலகிவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் நிமித்தம் நாமும் நிச்சயம் சிட்சிக்கப்படுவோம். அந்த நேரத்தில் புலம்பி எந்தவொரு பயனும் இல்லை. 

6 மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள், சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பிரசங்கி 10:6

மகா உயர்ந்த பதவியில் இருக்கின்ற எவரேனும் நம்மை தவறான வழியில் நடத்த முயற்சித்தால் அவர்களிடமிருந்து விலகி ஞானிகளின் தேவனிடத்தில் சேருவோம், தேவனுக்கேற்ற ஞானத்தோடு வாழ்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!





248           தாமஸ் ஆல்வா எடிசன்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தைத் தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் எனத் தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.

அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படிப் படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்கத் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது" என்று.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டு பிடிப்பாளராகவும் ஆனார்...!!

இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப் பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது.

"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்" என்று......
இதைப் படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டு பிடிப்பாளனானான்" என்று.

தன் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்குக் கொண்டு செல்லும். 

*நம்மாலும் எடிசன்களை* 
*உருவாக்க முடியும்...*

*குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்...*






249    பேராசையால் உயிரிழந்த கொக்கு

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது.  அழகிய வனாந்தரமும்
நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.
“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.
‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.
மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.
“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.
ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.
“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. அந்த நண்டு கொக்கிடம் வந்து வயோதிகக் கொக்கே இந்த மீன்களையெல்லாம் எங்கு கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள்.

என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று
கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன்‌ மேல் இரக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.
பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது.‌ அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி. 

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால்,

 என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.
“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.
குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது. குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

என் அன்பு வாசகர்களே,
மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்றபோதும், கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும்.


இக்கதையில் மிக முக்கிய கருத்து நம்பிக்கை. மீன்கள் கொக்கின் மீது வைத்த நம்பிக்கை தான் அவைகளின் ஜீவனை நஷ்டப்படுத்தினது. இன்றும் அநேகர் தங்கள் வேலை ஸ்தலங்களில், ஊழியத்தில் தங்கள் உயர் அதிகாரிகள் மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்வது தான் சரி என்று அவர்களுக்கு இசைந்து, அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து அவர்களிடத்தில் நற்பெயரை பெற முயற்சிக்கின்றனர். 

அவர்களிடம் நற்சாட்சி பெற்றும் விடுகின்றனர். ஆனால் ஏதாகிலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது தங்களை தப்புவித்துக்கொள்ள உங்களை உபயோகிக்கின்றனர். அதுவரை நீங்கள் மிகுந்த பிரயாசப்பட்டு சேர்த்த நல்ல பெயர், நல்ல சம்பளம் என எல்லாம் போய்விடும். 

வேதத்தில் ஈசாக்கின் குமாரனாகிய ஏசா, தன் நம்பிக்கையை தேவனிடம் வைக்காமல் தன் தகப்பன்மேலும், அவர் தனக்கு கொடுக்க இருக்கிற ஆசீர்வாதத்தின் மேல் முழுவதும் வைத்து அதை பெற்றுக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை எல்லாவற்றையும் செய்தான். ஆனால் இறுதியில் அந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தன்‌ சகோதரனாகிய யாக்கோபு பெற்றுக்கொண்டான். ஏனெனில் யாக்கோபு தன் நம்பிக்கையை தேவன் மேல் வைத்திருந்தான். அதனால் அவன் பாக்கியவானாய் இருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொண்டான். வேதம்  சொல்கிறது, 

7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

எரேமியா 17:7

எனவே நம் நம்பிக்கையை இந்த உலகத்தில் உள்ள மனிதர்களிடம் வைக்காமல், நமக்காக எல்லாவற்றையும் செய்கிற தேவனிடத்தில் நம்பிக்கையை வைப்போம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!





250.           திருடன்!

எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.


அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.


காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.
ஒருநாள் இரவு, நீலகண்டனும், அவர் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னலைத் திறப்பது போன்ற ஓசை கேட்டு நீலகண்டனின் மனைவி விழித்துக் கொண்டாள்.


“எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! நம் வீட்டிற்குள் திருடர்கள் வந்து விட்டனர். எழுந்திருங்கள்” என்று அவனை உலுக்கி எழுப்பினாள்.எழுந்த அவன் பாதுகாப்பிற்காகத் தடியைத் தேடினான்.அப்போது திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான். அவன் கையில் பளபளவென்று கத்தி மின்னியது.


அவர்கள் இருவரையும் பார்த்த அவன், “என்னை எதிர்க்க முயற்சி செய்யாதீர்கள். வீட்டில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்து விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏதேனும் மீறி நடந்தால், இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்.

 துணிவை வரவழைத்துக் கொண்ட நீலகண்டன், “நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். நம் நகரத்தையே நடுங்க வைக்கும் திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவனா? ஏன் தனியாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.


“நான் அந்தத் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல... சில்லறைத் திருட்டுகள் செய்பவன். அதனால்தான் இப்படிப்பட்ட வீடாகப் பார்த்துத் திருடுகிறேன்.

 வீண் பேச்சுப் பேச வேண்டாம். உடனே நகைளை எடுத்துத் தா” என்று மிரட்டினான் அவன். “கொண்டு வருகிறேன்” என்ற நீலகண்டன் அடுத்த அறைக்குள் சென்றான். நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தான்.


அப்போது அந்த வீட்டின் முன் பக்கக் கதவை யாரோ இடிப்பது போன்ற ஓசை கேட்டது. இதைக் கேட்ட திருடன் அஞ்சி நடுங்கினான். “ஐயோ! அந்தத் திருடர்கள் கூட்டம்தான் வந்து விட்டது. அவர்கள் என்னைப் பார்த்தால் உயிருடன் விட மாட்டார்கள். என்ன செய்வேன்? இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே...” என்று புலம்பினான். 

இதைக் கேட்ட நீலகண்டன் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

அந்தத் திருடனைப் பார்த்து, “திருடர்களிடம் இருந்து நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள். என்ன நடந்தாலும் வெளியே வராதே” என்றான். அதன்படியே “அந்தத் திருடன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். தன் மனைவியை அழைத்த நீலகண்டன்”அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான். அவளும் தலையை ஆட்டினாள்.

“நான் பின் பக்கத் கதவு வழியாக வெளியே செல்கிறேன். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன். அதுவரை நான் சொன்னது போலச் சமாளி. எதற்கும் அஞ்சாதே” என்ற அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான். 

முன் பக்கத் கதவை உடைத்துக் கொண்டு ஐந்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தனர்.

அங்கே பெண் ஒருத்தி மட்டும் நின்றிருப்பதைப் பார்த்துத் திகைப்பு அடைந்தனர். “என்ன? நீ மட்டும் தனியாக இருக்கிறாய். உன் கணவன் எங்கே?” என்று அவர்களில் ஒருவன் கத்தினான். அவள் அருகே வந்த இன்னொருவன், “உன் நகைகளை எல்லாம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்.

“என்னக் கொன்று விடாதீர்கள். என்னால் இப்போது நகைகளை உங்களிடம் தர முடியாது” என்று கெஞ்சினாள் அவள். “ஏன் தர முடியாது?” என்று மிரட்டினான் மற்றொருவன்.

“நான் என்ன செய்வேன்? நகைகள் எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளன. சாவி என் கணவரிடம் உள்ளது” என்றாள். 

“உன் கணவனிடம் சாவி உள்ளதா? அவன் எங்கே இருக்கிறான்?” என்று கத்தினான் முதலாம் திருடன்.


நடுங்கியபடியே அவள், “உங்களைப் பார்த்து அஞ்சிய அவர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்” என்றாள்.

 அப்போதுதான் அவர்கள் கட்டிலுக்கு அடியில் ஒருவன் ஒளிந்து இருப்பதை பார்த்தனர். “ஏ கோழையே! நீயும் ஒரு ஆண்மகனா? மனைவியை எங்களிடம் சிக்க வைத்துவிட்டு, நீ ஒளிந்து கொண்டாயா? எழுந்து வெளியே வா” என்று கோபத்துடன் கத்தினான் அவர்களில் ஒருவன்.

ஐயோ! ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று நடுங்கிய அந்தத் திருடன். வெளியே வரத் தயக்கம் காட்டினான். கோபத்துடன் கட்டிலைப் புரட்டிப் போட்ட அவர்கள் அவனைத் தூக்கினர். 

“நான் அவள் கணவன் அல்ல... உங்களைப் போன்ற திருடன் நான். அவள் பொய் சொல்கிறாள். என்னிடம் எந்தச் சாவியும் இல்லை. நான் சொல்வதை நம்புங்கள்” என்று கதறினான்.

“எங்களைப் பார்த்துவிட்டுக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாய். இவள் உன் மனைவி இல்லை என்கிறாய். திருடன் என்று சொல்லி எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட கோழையை நாங்கள் இதுவரை பார்த்தது கிடையாது. இவனை உயிருடன் விடக் கூடாது” என்று கோபத்துடன் கத்திய அவர்கள். அவனை அடிக்கத் தொடங்கினர். அவர்களின் உதையைத் தாங்க முடியாத அவன், “நான் சொல்வதை நம்புங்கள். நான் இவள் கணவன் அல்ல” என்று கதறி அழுதான். அவர்களோ அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.

விரைந்து செயல்பட்ட நீலகண்டன் அரண்மனை வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான். எல்லாத் திருடர்களும் சிக்கிக் கொண்டனர். வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.

“இப்படி எதிர்பாராமல் சிக்கிக் கொண்டோமே” என்று திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீலகண்டனும், அவர் மனைவியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது.


நீலகண்டனிடம் வீரர்களின் தலைவன், “ஐயா! உங்களின் அறிவுக்கூர்மையால் தான் இவர்கள் எங்களிடம் சிக்கினர். எத்தனை நாட்களாக இவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம் தெரியுமா? உங்களைப் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை” என்றான். 

உதைபட்டு முனகிக் கொண்டே தரையில் கிடந்த முதலாம் திருடனை அவன் பார்த்தான்.


“ஏன் இவனை இவர்கள் இப்படி அடித்து இருக்கின்றனர்? இவனும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா? இவனையும் கைது செய்யட்டுமா?” என்று கேட்டான்.

 “இவன் சிறிய திருடன். இவனுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. இனி இவன் திருட மாட்டான். இவனை விட்டுவிடுங்கள்” என்றான் நீலகண்டன்.

அடுத்த நாள் அரசவைக்கு வந்த நீலகண்டனை அரசர் பாராட்டினார். சொன்னது போலவே நூறு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார். அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.

என் அன்பு வாசகர்களே, 

இக்கதையில் நீலகண்டன் என்ற மனிதன் படித்தவனோ, உயர்ந்த பதவியில் இருப்பவனோ அல்ல ஆனாலும் நாட்கள் பொல்லாதது என்பதை உணர்ந்த அவன்‌ தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டான். அல்லாமலும் திருடனுடைய முகாந்திரம் என்னவென்று நமக்கு நன்றாய் தெரியும் அதை வேதமும் இவ்வாறு கூறுகிறது


10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். 
யோவான் 10:10

இதனை நன்கு அறிந்த நீலகண்டன் தன் ஜீவனுக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் தைரியமாய் அந்த திருடர்களை எதிர்க்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டான். பாதுகாத்தது மாத்திரமல்ல தன் தலைமுறைக்கும் தேவையானதை சம்பாதித்துக்கொண்டான்.

அன்பானவர்களே, நாம் வாழ்கின்ற இந்த நாட்கள் மிகவும் பொல்லாதது. நாம் தான் எல்லாவற்றையும் மிகுந்த கவனத்தோடு பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வேதத்தில் பொல்லாத நாட்கள் தன்னை கிட்டி சேருகிறது என்று நன்கு உணர்ந்த எரிகோ பட்டணத்தின் மதிலில் வாழ்ந்த அந்த ராகாப் என்ற பெண் வேவு பார்க்கசென்ற இருவரையும் மறைத்துவைத்து அவர்களுக்கு தன் தேசத்தின் இரகசியங்களை சொன்னாள். மேலும் தானும் தன் குடும்பமும் தப்புவதற்கு ஏற்ற அடையாளத்தையும் அவர்களிடம் பெற்றுக்கொண்டாள். அதன் மூலம் அவளும் அவள் குடும்பமும் தப்பித்தது. 

எனவே நாமும் இந்த நாட்களில் நமக்கு பிரயோஜனமான காரியங்களில் நம்மை ஈடுபடுத்தி நமக்கு மாத்திரமல்ல நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் பிரயோஜனமுன்டாக முயற்சிப்போம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.

எபேசியர் 5:16

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!





251  மண்ணாங்கட்டி என்ன செய்யும்?


‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்
ஏன் வைன் குடிக்கக்கூடாது?’

சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். 

அவர் பழங்களைச் சாப்பிடும்போது அதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். சாது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

‘என்னப்பா அப்படிப் பார்க்கிறாய், நீ இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றார்.

‘உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்றான் சீடன்.

‘நிச்சயமாக, சந்தேகம் பொல்லாதது, அதை உடனேயே நிவர்த்தி செய்து விடவேண்டும், இல்லாவிட்டால் அது மனிதரையே அழித்துவிடும், கேள் மகனே’ என்றார் சாது.

‘நீங்கள் இந்த திராட்சைப் பழங்களைச் சாப்பிடுகிறீர்களே, அது மனிதருக்குத் தீங்கு விளைவிக்குமல்லவா?’ என்றான் சீடன்.

‘பழங்கள் சாப்பிடுவது எனக்குத் தவறாகத் தெரியவில்லையே’ என்றார் சாது.

‘அப்படி என்றால் திராட்சைப் பழத்தில் இருந்து வடித்தெடுக்கும் சாறுதானே வைன் என்னும் பானம், அதை அருந்தக்கூடாது என்று ஏன் எல்லோரும் உபதேசம் செய்கிறார்கள். 

அதை அருந்தினால் மட்டும் ஏன் தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள்?’ என்றான் சீடன்.

‘உண்மைதான், எதுவுமே வேறு உருவம் பெறும்போது, அல்லது அதன் தன்மை மாறும்போது அதனால் ஏற்படும் பலாபலனும் மாறிவிடும். திராட்சைப் பழத்தின் சாற்றைப் புளிப்படைய வைத்து அதன் தன்மையை மாற்றுவதால் அது மனிதரை வெறிக்கச் செய்து நிலை தடுமாற வைத்துவிடுகிறது. அதனால்தான் மதுபானம் தீமை விளைவிக்கும் என்கிறார்கள்’ என்றார் சாது.

‘அதெப்படி, பழம் சாப்பிடலாம் என்றால் அதன் சாற்றைக் குடிப்பதும் தவறில்லை என்றல்லவா எடுக்க வேண்டும். சாற்றைக்குடித்தால் வெறிக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.’ என்று வாதாடினான் அந்த சீடன்.

சாது அருகே நின்ற மற்றைய சீடர்களைப் பார்த்தார். ஒரு சிலர் அந்தச் சீடன் சொல்வது சரியாய் இருக்குமோ என்பது போன்ற சந்தேகத்தோடு குருவைப் பார்த்தார்கள்.

நெருப்பு சுடும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நெருப்பைத் தொட்டுத்தான் பார்க்கவேண்டுமா?

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமே போதுமே என்பதை உணர்ந்து கொண்ட சாது அவர்களை வெளியே அழைத்துச் சென்று ஒரு தண்ணீர் தொட்டியருகே அந்தச் சீடனை உட்காரச் சொன்னார். ஏனைய சீடர்களைப் பார்த்து அவனது தலையிலே ஒரு பிடி மண்ணை அள்ளி ஒவ்வொருவராகப் போடச் சொன்னார். அவர்கள் மண்ணைப் போடும்போது நோகிறதா என்று சாது கேட்டார். சீடனோ அலட்சியமாய் இல்லை என்று பதிலளித்தான். 

அதன் பின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்து ஒவ்வொருவராக அவனது தலையிலே ஊற்றச் சொன்னார். அதற்கும் அந்தச் சீடன் நோகவில்லை என்றே அலட்சியமாகப் பதிலளித்தான்.

‘அடுத்து என்ன செய்வது?’ என்று சீடர்கள் குருவிடம் கேட்டார்கள்.

அருகே அடுக்கி இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அவனது தலையிலே போடச் சொன்னார். சீடர்கள் செங்கட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு அந்தச் சீடனுக்கு அருகே வந்தபோது அந்தச் சீடன் தலையிலே கையை வைத்துத் தடுத்தபடி பயந்துபோய் துடித்துப் பதைத்து எழுந்து ஓடிவந்து சாதுவிடம் ‘குருவே புரிந்து கொண்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டான்.

சாது சிரித்துவிட்டுச் சொன்னார், ‘மண்ணைத் தனியே போட்டபோது நோகவில்லை என்றாய் தண்ணீரைத் தனியே ஊற்றிய போதும் நோகவில்லை என்றாய், ஆனால் அந்த இரண்டையும் ஒன்றாய்க் கலந்த கலவைதானே செங்கட்டி, அதை உன்தலையிலை போட்டால் மட்டும் எப்படி நோகும் என்கிறாய்?’ என்றார்.

‘குருவே உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன், விதண்டா வாதத்திற்காக நான் அப்படி நடந்து கொண்டது தப்புத்தான், என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான் சீடன்.

‘நல்லது மகனே, தீயதைக் கண்டால் விலத்திக் கொள்வதும், நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்வதும் உன்னைப் பொறுத்தது. ஏனென்றால் உன்னுடைய எதிர்காலம் உன்னில்தான் தங்கியிருக்கிறது’ என்று சீடனுக்குப் புத்திமதி சொன்னார் சாது.

என் அன்பு வாசகர்களே,

சந்தேகம் என்பது மிக்கொடிய நோய் ஒரு முறை அந்த நோய் தொற்றிக்கொண்டால் நாம் விட வேண்டும் என்று நினைத்தாலும் அது நம்மை விடாது. இந்த நோய் குடும்பத்தில் வந்ததென்றால் அந்த குடும்பத்தையே சீரழித்து விடும். வேலை ஸ்தலத்தில் இந்த நோய் ஏற்ப்பட்டால்  அது நம் வேலையை மாத்திரமல்ல அங்கு பணிபுரிகின்ற அனைவரையும் நிச்சயம் பாதிக்கும். 

இவ்வாறு பாதிப்பை ஏற்ப்படுத்துகிற அந்த நோயை எவ்வாறு அழிப்பது???. அந்த சந்தேகத்திற்கு ஆளான மனிதனிடமே நேரடியாக சென்று அதை தீர்த்துக்கொள்வது தான். ஏனெனில் மற்ற மனிதர்களிடம் போய் விசாரிக்கும் பட்சத்தில் அது மேலும் சந்தேகத்தை ஏற்ப்படுத்துமே ஒழிய அதை நிவிர்த்தி செய்யாது.

இக்கதையில் அந்த சீடன் தனக்கு உண்டான சந்தேகத்தை கேட்டு அங்கேதானே அதை தீர்த்துக்கொண்டான். அநேகர் தங்களுக்கு இருக்கின்றன சந்தேகங்களை தீர்க்காமல் வைத்து வைத்து இறுதியில் அவர்களையே ஒரு நோயாளியாய் மாற்றி விடுகிறது. 

இயேசு கிறிஸ்து ஒரு சமயம் உவமைகளை போதித்துக்கொண்டிருந்த போது பரிசேயரும், ஏரோதியரும் அவரிடத்தில் வந்து இராயனுக்கு வரி கொடுக்கலாமா? கூடாதா? என்று கேட்டனர். அவர்களுக்கு அவர் பிரதியுத்திரமாக இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் என்று மாறுத்தரம் கூறினார். அதன் மூலம் அவர்கள் சந்தேகம் நீங்கி தெளிவுள்ளவர்களாய் சென்றார்கள்.

இன்றும் அநேகர் போதகர்களை தங்கள் கேள்விகளால் வளைக்க வேண்டும் என்று இக்கதையில் அந்த சீடன் கேட்ட கேள்வியை போன்று அநேக கேள்விகளை கேட்பார். அவ்வாறு கேட்பவர்களுக்கு நன்றாய் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் நன்றாய் யோசித்து பதிலளிக்க வேண்டும் இல்லையேல் மாட்டிக் கொள்வோம். அவர்கள் கேள்விகளுக்கு சந்தேகத்தோடு பதிலளித்தால் மறுபடியும் மறுபடியும் வந்து நம் பதிலை வைத்தே நம்மிடம் கேள்வி தொடுப்பர். 

எனவே நாம் கொடுக்கின்ற பதில் ஒரு வார்த்தையாயினும் சந்தேகம் நீங்கி அவர்கள் தெளிவோடு செல்ல வேண்டும்.

அதுபோலவே நாம் தேவனிடத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் தேவன் நமக்கு கொடுத்த வாக்குறுதியை விசுவாசித்தால் வேதம் சொல்கிறது,

23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாற்கு 11:23

எனவே தேவனை சந்தேகப்படாமல் விசுவாசிப்போம் தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



252     பேல் தெய்வமும் அரக்கப் பாம்பும்

 தானியேலும் பேல் தெய்வமும் 

1 அஸ்தியாகு மன்னர் தம் மூதா தையரோடு துயில் கொண்டபொழுது பாரசீசுரான சைரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் . அம்மன்ன ருக்கு உற்ற தோழராய்த் தானியேல் விளங்கினார் ;

 அவருடைய மற்றெல்லா நண்பர்களையும் விட மிகுந்த மதிப்புக் குரியவராய் இருந்தார் .

 3 அக்காலத்தில் பேல் என்று அழைக்கப்பட்ட தெய்வத்தின் சிலை ஒன்று பாபிலோனியரிடம் இருந்தது ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு கலம் மென் மாவும் நாற்பது ஆடுகளும் ஆறு குடம் மதுவும் அதற்காகச் செலவாயின . மன்னரும் அதை வழிபட்டு வந்தார் ; நாள்தோறும் சென்று அதை வணங்கிவந்தார் .

 தானியேலோ தம் கடவுளையே வழிபட்டுவந்தார் 

5 " நீர் ஏன் பேல் தெய்வத்தை வணங்குவதில்லை ? " என்று மன்னர் தானியேலை வினவினார் . அதற்கு அவர் , " கையால் செய்யப்பட்ட சிலைகளை நான் வழிபடுவதில்லை மாறாக , விண்ணையும் மண்ணையும் படைத்து , மாந்தர் அனைவரையும் ஆண்டுவருகிற , வாழும் கடவுளையே நான் வழிபட்டுவருகிறேன் ” என்று விடை கூறினார் . 

6 மன்னர் அவரை நோக்கி , " பேல் வாழும் தெய்வம் என்பதை அறியீரோ ? அது ஒவ்வொரு நாளும் எவ்வளவு உண்டு குடிக்கிறது என்பது உமக்குத் தெரியாதா ? " என்று கேட் டார் . 

அப்பொழுது தானியேல் சிரித்துக் கொண்டே , " மன்னரே , ஏமாறாதீர் . ஏனெனில் இது உள்ளே வெறும் களிமண் ; வெளியே வெண்கலம் . இது ஒருபொழுதும் உண்டதுமில்லை ; குடித்ததுமில்லை " என்றார்

 8 இதனால் சீற்றங்கொண்ட தம் அர்ச்சகர்களை அழைத்து படையல்களை உண்டு வருவது யாரென நீங்கள் எனக்குச் சொல்லா விட்டால் , நீங்கள் திண்ணமாய்ச் சாவீர்கள் மாறாக ,

 பேல்தான் அவற்றை உண்டு வருகிறது என்பதை நீங்கள் மெய்ப்பிக்க முடிந்தால் , தானியேல் திண்ணமாய்ச் சாவார் ; 
ஏனெனில் அவர் பேலுக்கு எதிராகப் பழிச் சொல் கூறியுள்ளார் " என்றார் . 

தானி யேலோ மன்னரிடம் , உம் படியே நடக்கட்டும் " என்று சொன்னார் 

10 தங்களுடைய மனைவி , மக்கள் நீங்கலாக பேலின் அர்ச்சகர்கள் மட்டுமே எழுபது பேர் இருந்தனர் . தானியேலுடன் பேலின் கோவிலுக் மன்னர் சென்றார் . பபேலின் அர்ச்சகர்கள் " மன்னரே , இதோ நாஙகள் வெளியே போய்விடுகிறோம் . நீரே உணவுப்பொருள்களைப் படைத்து , திராட்சை மதுவைக் கலந்து வையும் . பின்பு கதவை மூடி , உம் கணையாழி யால் முத்திரையிடும் . நாளைக் காலையில் நீர் மீண்டும் வரும்பொழுது பேல் எதையும் உண்ணவில்லை என்று நீர் கண்டால் , நாங்கள் சாவுக்கு உள்ளாவோம் . இல்லையேல் எங்களுக்கு எதிராகப் பொய் சொல்லும் தானியேல் சாகவேண்டும் ” என்றார்கள் . 

13 அவர்களோ எதையும் பொருட் படுத்தவில்லை ஏனெனில் , அவர்கள் மேசைக்கு அடியில் மறைவான ஒன்று அமைத்திருந்தார்கள் . அந்த வழியாக அவர்கள் உள்ளே நுழைந்து படையல்களை உண்பது வழக்கம் . 

14 அர்ச்சகர்கள் வெளியே சென்ற மன்னர் பேல் தெய்வத்துக்குமுன் உணவுப் பொருள்களை தார் சாம்பல் கொண்டுவருமாறு தானியேல் தம் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார் மன்னர் மட்ட நிமே அங்கு இருக்க அவர் முன்னிலை யில் அவர்கள் கோவில் முழுவதும் சாம் பலைத் தூவினார்கள் . பின் வெளியே வந்து கதவை மூடி , மன்னரின் கணை யாழியால் முத்திரையிட்டுச் சென் ஜார்கள் 

13 அர்ச்சகர்களோ வழக்கம் போல் இரவில் தங்கள் மனைவி களுடன் கோவிலுக்குள் சென்று , எல்லா வற்றையும் உண்டு குடித்தார்கள் . மறுநாள் விடியற்காலையில் மன்னர் எழுந்தார் . தானியேலும் எழுந்து அவரோடு கோவிலுக்குச் சென்றார் தானியேல் , முத்திரைகள் உடை படாமல் இருக்கின்றனவா ? " என்று மன்னர் வினவினார் . அதற்குத் தானியேல் ஆம் மன்னரே அவை உடை படாமல் இருக்கின்றன என்று மறுமொழி கூறினார் . 

18 கதவைத் திறந்ததும் மன்னர் மேசையைப் பார்த்தார் உடனே உரத்த குரலில் , " பேல் தெய்வமே . நீர் பெரியவர் ; உம்மிடம் கள்ளம் கபடு ஒன்றுமே இல்லை என்று கத்தினார் . 

19 தானியேலோ சிரித்துக் கொண்டே மன்னரை உள்ளே போக விடாமல் தடுத்தார் . பின்னர் அவரிடம் , " இதோ ! தரையை உற்று நோக்கும் . இது யாருடைய கால் தடம் எனக் கவனித்துப் பாரும் " என்றார் . 

20 அதற்கு மன்னர் , பெண் , சிறுவர்களின் கால் தடங் களைக் காண்கிறேன் " என்றார் . 

21 கடுஞ் சினமுற்ற மன்னர் அர்ச்சகர் , அவர்களின் மனைவி , மக்கள் ஆகியோரைச் சிறைப்பிடித்தார் . அவர்களோ உள்ளே நுழைந்து , மேசை மீது இருந்த வற்றை உண்ணத் தாங்கள் வழக்க மாகப் பயன்படுத்திவந்த மறைவான வழியை அவருக்குக் காட்டினார்கள்

 12 ஆகவே மன்னர் அவர்களைக் கொன்றொழித்தார் ; பேலின் சிலை யையோ தானியேலிடம் ஒப்படைத்தார் . அவர் அந்தச் சிலையையும் அதன் கோவிலையும் இடித்துக் தகர்த்தார்




253 தானியேலும் வர்க்கப்பாம்பும் 

பாபிலோனியாவில் பெரிய தொரு அரக்கப்பாம்பு இருந்தது 

பாபிலோனியர் அதையும் வழிபட்டு வந்தனர் . மன்னர் தானியேலிடம் , இது உயிருள்ள தெய்வம் என்பதை உம்மால் மறுக்க முடியாது ஆகவே இதை வணங்கும் " என்று சொன்னார் .

 தானியேல் மறுமொழியாக , " என் கடவுளாகிய ஆண்டவரையே நான் வழிபடுவேன் ஏனெனில் அவரே வாழும் கடவுள் . 

மன்னரே , நீர் எனக்கு அனுமதி கொடுத்தால் , வாளோ. தடியோ இன்றி நான் இந்த அரக்கப் பாம்பைக் கொன்றிடுவேன் " என்றார் . அதற்கு மன்னர் . சரி , உமக்கு அனுமதி தருகிறேன் " என்றார் . 

பின்னர் தானியேல் சிறிது கீல் கொழுப்பு , முடி ஆகியவற்றை எடுத்து , அவற்றை ஒன்று சேர்த்து உருக்கி , உருண்டை களாகத் திரட்டி , அவற்றை அரக்கப் பாம்பின் வாயில் வைத்தார் . அவற்றைத் தின்றதும் அதன் வயிறு வெடித்தது . உடனே தானியேல் , " நீங்கள் வழிபட்டு வந்ததைப் பாருங்கள் " என்றார் .

 பாபிலோனியர் இதனைக் கேள்வியுற்றபொழுது சீற்றங்கொண்டனர் . மன்னருக்கு எதிராகத் திரண்டனர் . " மன்னர் யூதராக மாறிவிட்டார் ; பேல் தெய்வத்தை அழித்துவிட் டார் ; அரக்கப் பாம்பைக் கொன்று விட்டார் ; அர்ச்சகர்களைப் படு கொலை செய்து விட்டார் " என்று கூச்சலிட்டனர் . 

பின்பு மன்னரிடம் . " தானியேலை எங்களிடம் ஒப்படையும் ; இல்லையேல் நாங்கள் உம்மையும் கொன்றொழிப்போம் " என்று மிரட்ட உம் குடும்பத்தையும் ஒழிப்போம் என்றனர்.

அவர்கள் மன்னரை மிகவும் வற்புறுத்தியதால் , அவர் தானியேலை வேண்டாவெறுப்புடன் அவர்களிடம் ஒப்படைத்தார் . 

சிங்கக்குகையில் தானியேல்

பாபிலோனியர் தானியேளை
சிங்கக்குகையில் தூக்கி எறிந்தனர் . அங்கே அவர் ஆறு நாள் இருந்தார் .

 அக்குகையில் ஏழு சிங்கங்கள் இருந்தன அவற்றுக்கு இரண்டு மனித உடல்களும் இரண்டு ஆடுகளும் கொடுப்பது வழக்கம் .

 ஆனால் அவை தானியேலை விழுங்க வேண்டும் என்பதற்காக அந்த ஆறு நாளும் அவற்றுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை . 

அக்காலத்தில் யூதேயாவில் அபகூக்கு என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார் . அவர் கூழ் காய்ச்சி ஒரு கலயத்தில் அப்பங்களைப் பிட்டு வைத்து , அவற்றை அறுவடையாளர்களுக்குக் கொடுக்க வயலுக்குக் கொண்டுபோனார் . 

ஆண்டவரின் தூதர் அவரிடம் , " நீர் வைத்திருக்கும் உணவைப் பாபிலோனில் சிங்கக் குகையில் இருக்கும் தானியேலிடம் எடுத்துச் செல்லும் " என்றார் . 

அதற்கு அபகூக்கு , " ஐயா , நான் பாபிலோனை இதுவரை பார்த்ததே யில்லை ; சிங்கக்குகையைப்பற்றியும் எனக்குத் தெரியாது " என்றார் . 

எனவே ஆண்டவரின் தூதர் அவருடைய உச்சந்தலையைப் பிடித்துத் காற்றினும்பாபிலோனில் சிங்கக்குகைக்கு மேலேயே இறக்கிவிட்டார் . அப்பொழுது அபகூக்கு , " தானியேலை பார்த்து, கடவுள் உமக்கு அனுப்பின உணவை உண்ணும் " என்று உரக்கக் கூறினார் 

அப்பொழுது தானியேல் , " கடவுளே , நீர் என்னை நினைவுகூர்ந்தீர் உம்மேல் அன்புகூர்பவர்களை நீர் கைவிடுவதில்லை என்று உரைத்தார் 

பின்னர் எழுந்து உண்டார் உடனே ஆண்டவரின் தூதர் அபகூக்கை மீண்டும் அவருடைய இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார

மன்னர் ஏழாம் நாளன்று தானியேலைக் குறித்துத் துயரம் கொண்டாடச் சென்றாா் . குகையை அடைந்து உள்ளே பார்தது  இதோ ! தானியேல் உட்கார்ந்த வண்ணம் இருந்தார் ! 

உடனே மன்னன் "
தானியேலின் கடவுளாகிய ஆண்டவரே , நீர் பெரியவர் ! உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை " என்று உரத்த குரலில் கத்தினார் . 

பின் தானியேலை வெளியே தூக்கிவிட்டார் அவரை அழிக்கத் தேடியவர்களையோ குகைக்குள் எறிந்தார் . நொடிப் பொழுதில் மன்னர் கண்முன்னரே அவர்களைச் சிங்கங்கள் விழுங்கின 



254             வேஷம் போட்ட கழுதை


ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.

இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.

ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான்.

அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.

இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போத்தி நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.

இறந்து கிடந்த புலியை தூக்கிக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான். அன்று இரவு புலியின் தோலை உரித்தான். 

மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.

புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.

கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.

அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை நன்றாக அடித்துக் கொன்று விட்டார்கள்.

என் அன்பு வாசகர்களே,
பிறவி குணம் பேய்க்கு குடுத்தாலும் தீராது‌ என்ற‌ பழமொழிக்கேற்ப தன்னுடைய சுய ரூபம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும் என்பதே இக்கதையின் கருத்து.

தன்னுடைய திறமை, ஞானம், அறிவு என்பன போன்றவை நிச்சயம் ஒரு நாள் வெளிப்பட்டு அவர்கள் பெயரை பெருமைப்படுத்தும். அதுபோலத்தான் மற்றவர்களிடம் உள்ள கோபம், பொறாமை போன்றவைகளும் வெளிப்படும். எவ்வளவு தான்‌ அடக்கிக்கொண்டாலும் நிச்சயம் வெளிப்படும்.

உதாரணமாக ஒரு பலூணில் காற்றை நிரப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம் அது பெரிதாக பெரிதாக அதன் அளவும் அதோடு கூட அதன் உள்ளில் இருக்கும் காற்றும் பெருகும் இறுதியில் அது வெடிக்கும் தருவாயில் மிகப்பெரிய சப்தத்தோடு வெடிக்கும். நாம் தான் அந்த பலூணை ஊதியிருப்போம் ஆனால் நாமே பயந்து போகிற அளவு பெரிய சப்தம் உண்டாகும். 

அந்த பலூணில் காற்றிற்கு பதில் என்ன நிரப்புகிறோம் என்பதை பொருத்தே அதன் விளைவு தெரியும். அதில் கோபம், வெறுப்பு ஆகியவற்றைக் கொண்டு ஊதும்போது அது வெடிக்கும் சமயத்தில் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் மிகப்பெரிய துன்பத்தை தரும். ஆனால் அதில் ஆவியின் கனிகளை வைத்து ஊதும் பட்சத்தில் அது வெடிக்கும் போது நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் மிகப் பெரிய சந்தோஷத்தை தரும். 

எனவே நாம் நம்முள் அனுதினமும் ஆவியின் கனிகளை ஊதி வளர செய்வோம் அநேகருக்கு பிரயோஜனமாய் மாறுவோம்.

22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 
கலாத்தியர் 5:22

23 சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. 
கலாத்தியர் 5:23

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள